Aran Sei

எழுவர் விடுதலைக்கு மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் – தமிழக அரசுக்கு திருமாவளவன் வலியுறுத்தல்

பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை மீண்டும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுப்பதற்கு, குடியரசு தலைவருக்குத் தான் அதிகாரம் உள்ளது என்று, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளதாக, உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மத்திய உள்துறை துணைச் செயலாளர் தாக்கல் செய்துள்ள பிரமாண பத்திரத்தில், “தமிழக ஆளுநர் அனைத்து உண்மைகளையும், ஆவணங்களையும் கருத்தில் எடுத்துக்கொண்டு, அந்த ஆவணங்களை ஆய்வு செய்ததன் படி, மாண்புமிகு குடியர தலைவரே விடுதலை செய்வது குறித்து முடிவெடுப்பதற்கான அதிகாரம் படைத்தவர் என்று 25.01.21 அன்று பிறப்பித்துள்ள உத்தரவில் பதிவு செய்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்த, கடந்த 30 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட ஏழு பேரின் விடுதலை, மீண்டும் கிடப்பில் போடப்படும் அச்சம் எழுந்துள்ளது.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் “பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும் என 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்தத் தீர்மானத்தின் மீது எந்த முடிவையும் எடுக்காமல் 28 மாதங்களாகக் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர், உச்சநீதிமன்றம் கடிந்து கொண்டு காலக்கெடு விதித்த பிறகுதான் இப்போது முடிவெடுத்திருக்கிறார்” என்று ஆளுநர் மேற்கொண்ட தாமதத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

“கடந்த சனவரி 25ஆம் தேதி எடுக்கப்பட்ட ஆளுநரின் முடிவு இன்றுதான் மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் மூலமாகவே தெரியவந்திருக்கிறது. ஆளுநர் மட்டுமே தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்தார் என்பதைவிட பாஜக தலைமையிலான மோடி அரசின் முடிவைத்தான் ஆளுநர் தெரிவித்துள்ளார் என்பது உறுதியாகிறது” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

பேரறிவாளன் விடுதலை தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம், குடியரசு தலைவருக்குத்தான் உள்ளது என்று ஆளுநர் கூறியுள்ளதை சுட்டிக்காட்டியுள்ள திருமாவளவன் “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை அவமதிப்பதாக மட்டுமின்றி, அரசியலமைப்புச் சட்ட உறுப்புஎண்- 161, அவருக்கு அளித்துள்ள அதிகாரத்தை மறுத்ததன்மூலம் அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதித்துள்ளார் (ஆளுநர்) என்றே கருத வேண்டி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

“பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிப்பதில் உண்மையிலேயே தமிழக அரசுக்கு அக்கறை இருந்தால், உடனடியாக மீண்டும் சட்டப்பேரவையில் அல்லது அமைச்சரவையில் அதற்கான தீர்மானத்தை இயற்றி ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். அதில் ஆளுநர் முடிவெடுக்கும் வரை, அந்த ஏழு பேரையும் காலவரம்பற்ற ‘பரோலில்’ விடுவதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்