Aran Sei

‘அனைவரின் உள்ளத்திலும் ராமன் குடி கொண்டுள்ளார்’- குடியரசு தின வாழ்த்தில் தமிழக ஆளுநர் கருத்து

வ்வொரு பாரதீய குடிமகனின் உள்ளத்திலும் நிரந்தர கோயில் கொண்டுள்ள ஸ்ரீ ராமனின் வாழ்க்கையைக் கவிச் சக்கரவர்த்தி கம்பர் பாடிக் கொடுத்துள்ளார்” என்று குடியரசு தின வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்.ரவி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் 73 ஆவது குடியரசுத் தினத்தை ஒட்டித் தமிழ்நாடு ஆளுநர் என்.ரவி ஒரு வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். அதில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மற்றும் தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை அவர் நினைவுகூர்ந்தார். மேலும் அந்த அறிக்கையில்,

“திருவள்ளுவர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே, தெய்வீகம் கமழுகிற புனிதத் திருக்குறளை நமக்கு அளித்துள்ளார். திருக்குறளில் காணப்படுகிற இமைக்கும் மறுமைக்குமான ஞானமே, பாரதத்தின் அழிவற்ற ஆன்மீகத்தின் ஊற்றுக்கண்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“உலகின் மிகவும் புராதனமான வாழ்விலக்கியம் என்று கூறப்படக்கூடிய சங்க இலக்கியம், ஞான மற்றும் ஆன்மீகப் பரிணாமங்களின் உச்சக்கட்டத்தைப் பிரதிபலிக்கிறது” என்று இந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

“பிற மாநிலங்களில் உள்ள மாணவர்களைப் போல், நம்முடைய பள்ளி மாணவர்களும் பிற இந்திய மொழிகளைப் பயில வேண்டும். பிற இந்திய மொழிகளின் அறிவை, நம்முடைய மாணவர்களுக்கு மறுப்பது என்பது அவ்வளவு சரியில்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வுக்கு முன்னதான காலத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே இருந்திருக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டின் காரணமாக இத்தகைய எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. எனினும் அரசு பள்ளிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த வேண்டியது நம்முடைய அவசர தேவை” என்று அவர் தெரிவித்துள்ளார்

“உலகின் மிகத் தொன்மையான மொழி தமிழே ஆகும். இலக்கிய, பண்பாட்டு, ஆன்மிக செறிவு மிக்க மொழி. பல்வேறு பாரத மொழிகளுக்குத் தமிழ்மொழி பெருமை கூட்டியுள்ளது” என்று தனது வாழ்த்து செய்தியில் தமிழ்நாடு ஆளுநர் என்.ரவி கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்