Aran Sei

‘பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதியோடு கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே இலவசமாக தடுப்பூசி போட முடியும்’ – கே.எஸ்.அழகிரி

2020-21 பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 1), அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்றைக்கு சீரம் நிறுவனம் மாதம் 6 கோடி தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 1 கோடி தடுப்பூசிகளையும் உற்பத்தி செய்கின்றன. ஜூலை முதல் உற்பத்தியைக் கூட்டுவதாக உறுதி செய்துள்ளன. இதற்கு மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதியுதவி வழங்கியிருக்கிறது. இந்நிலையில், நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக மக்கள் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

விலை அதிகம் என்று கூச்சலிடுபவர்கள் கோவிஷீல்ட்-ஐ வாங்கத் தேவையில்லை – அதார் பூனாவாலா

“45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதென மத்திய அரசு அறிவித்தது. இதன்மூலம், 30 கோடி பேருக்குத் தடுப்பூசி போட 60 கோடி டோஸ்கள் தேவைப்படுகின்றன. இதில், 12 கோடி ஏற்கெனவே போடப்பட்டுள்ளன. மேலும். ஏறக்குறை 50 கோடி டோஸ் தேவைப்படுகின்றன.” என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

“இந்நிலையில், புதிய தடுப்பூசி கொள்கையின்படி, 18 வயதுக்கு மேற்பட்ட 63 கோடி பேருக்குத் தடுப்பூசி போட வேண்டிய பொறுப்பு மாநில அரசுகளின் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. இதன்மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மக்களுக்கும் இரண்டு டோஸ்கள் போட 120 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பு மருந்துகளில் எது சிறந்தது?- உண்மையான அறிவியலாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

மேலும், “மத்திய அரசு கொள்முதல் விலையான ரூ.150 விலையில் கூட, தயாரிப்பு நிறுவனங்களுக்குக் குறைந்தபட்ச லாபம் இருக்கிறது. தற்போது, தடுப்பூசி கொள்கையின்படி மத்திய அரசுக்கு ரூ.7,500 கோடியும், மாநில அரசுகளுக்கு ரூ.34 ஆயிரத்து 400 கோடியும் செலவாகும். இதன் மூலம், மொத்தம் ரூ.42 ஆயிரம் கோடிதான் செலவாகும். ஏற்கெனவே, 2020-21 பட்ஜெட்டில் ரூ.35 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.” என்று கே.எஸ்.அழகிரி தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.

இந்தப் பின்னணியில் 18 வயது நிரம்பிய அனைத்து மக்களுக்கும் கடந்த கால அரசுகள் பொறுப்பை ஏற்றுக் கொண்டதைப் போல, இன்றைய மத்திய அரசு அனைத்து மக்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடுகிற பொறுப்பை ஏற்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

‘கோவிஷீல்டின் விலையை நியாயப்படுத்தியவர்கள் கோவாக்சின் விலையையும் நியாப்படுத்துவார்களா?’ – ப.சிதம்பரம் கேள்வி

“தனியார் உற்பத்தி நிறுவனங்களிடமிருந்து மத்திய அரசு கொள்முதல் செய்து இதற்கான நிதியை ஏற்றுக் கொண்டு, மாநில அரசுகளுக்கு இலவசமாக வழங்கி உடனடியாக தடுப்பூசி போட்டு கொரோனாவின் பிடியில் சிக்கி உயிருக்காகப் போராடுகிற மக்களைப் பாதுகாக்க வேண்டும். இந்தக் கோரிக்கையில் உள்ள நியாயத்தை பிரதமர் மோடி புரிந்துகொண்டு ஏற்கெனவே பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ரூ.35 ஆயிரம் கோடிக்குக் கூடுதலாக ரூ.7,000 கோடியை ஒதுக்கினாலே அனைத்து மக்களுக்கும் இலவசமாக மத்திய அரசு தடுப்பூசி போட முடியும். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.” என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்