Aran Sei

ராஜீவ் காந்தி வழக்கில் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு தமிழக முதலமைசச்சர் கடிதம்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும், 7 பேரை விடுதலை செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும் என குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறையில் இருக்கும் முருகன், சாந்தன், எஸ். நளினி, பேரறிவாளன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி. ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும்.” என தமிழக அமைச்சரவை சார்பில்,  9.9.2018 ஆம் தேதி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவையின் தீர்மானம்மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்குத் தான் உள்ளது எனக் கூறி அந்தத் தீர்மானத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அனுப்பி வைத்துள்ளார்.

‘மாநில உரிமைகளில் தலையிடும் புதிய கல்வி கொள்கை நுழையாமலிருக்க துறைசார் நடவடிக்கை’ – உயர்கல்வித்துறை அமைச்சர் உறுதி

இந்த இரண்டு சம்பவங்களையும் தனது கடிதத்தில், சுட்டிக்காட்டியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ”மேற்கண்ட 7 பேரும் 30 ஆண்டிற்கும் மேலாக சிறைகளில் வாடுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று சமயத்தில் சிறைகளில் கொரொனா பரவலை தடுக்க, சிறைகளில் உள்ள கூட்ட நெரிசலை தடுக்கும் பொருட்டு, சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன்படி, ஏழு பேரையும் விடுதலை செய்ய, 9.9.2018 ஆம் தேதி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஏற்று, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” என கேட்டுக் கொண்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தை, திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர். பாலு இன்று (20.05.2021) குடியரசுத் தலைவர் அலுவலகத்தில் நேரில் அளித்துள்ளார்  என தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்