Aran Sei

`கல்லூரிக் கட்டணத்தைத் திரும்பப் பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் – தமிழக வாழ்வுரிமை கட்சி அறிவிப்பு

கல்விக் கட்டண உயர்வை எதிர்த்து இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியுள்ளதையடுத்து, கல்லூரியின் கட்டணத்தைத் திரும்பப்பெறாவிட்டால் மாணவர்களையும் மக்களையும் ஒன்றிணைத்துப் போராட்டம் நடத்தப்படும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த ராஜா முத்தையா  மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் படிக்கும் 500 க்கும் மேற்பட்ட முதுகலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர்கள், மருத்துவமனையின் புறநோயாளிகள் பிரிவுக்கு முன்னால், அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு இணையாக மட்டுமே தங்களுக்குக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னிறுத்தி மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மருத்துவக் கல்லூரியில் படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், “இந்த நிறுவனம் 2013 ஆண்டு முதல் மாநில அரசால் நடத்தப்பட்டாலும், விதிக்கப்படும் கட்டணம் மாநில மருத்துவக் கல்லூரிகளை விட மிக அதிகமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “ எம்.பி.பி.எஸ் படிப்பைப் பொறுத்தவரை, அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஆண்டுக் கட்டணம் ​​13,600 ரூபாயாக இருக்கிறது. இந்த மருத்துவக் கல்லூரியில் ஆண்டுக்கு  5.6 லட்சம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. முதுகலை மருத்துவ மாணவர்களுக்கும் கடந்த இரண்டு ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை”. என்று கூறியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து, தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இந்த அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த இராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியை, கடலூர் மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரியாக, கடந்த 2019-2020 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நிதி உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த அந்த அரசாணையை உடனடியாகச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

“அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டணமாக ரூ.13,600 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கடந்த கல்வியாண்டியில் ரூ.400,000 வசூலித்து, பகல் கொள்ளையில் ஈடுபட்டது கல்லூரி நிர்வாகம். தற்போது அதைவிடக் கூடுதலாக ரூ.5,44,370 – யை வசூலிக்கக் கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இக்கட்டணம் என்பது, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துக்கல்லூரியில் வசூலிக்கப்படும் தொகையை விடக் கூடுதலானது” என்று தெரிவித்துள்ளார்.

“கல்வி கற்க வரும் மாணவர்களை, பணம் கொழிக்கும் மரமாகக் கருதி வரும் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையானது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது” என்று தெரிவித்த வேல்முருகன். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கிக் கிடந்தவர்கள், எப்படி ரூ.7,80,000 கட்டணத்தைக் கட்டணத்தைக் கட்ட முடியும் என்றும் தமிழக அரசை நோக்கிக் கேள்வி எழுப்பியுள்ளார்.

“இராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியை அரசுடைமையாக்கிக் கொண்டதற்கான அரசாணையை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும். மேலும், கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையும் திரும்பப் பெற வேண்டும் எனவும். இவ்விவகாரத்தில் தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும் அலட்சியம் காட்டும் பட்சத்தில், மாணவர்களையும், பெற்றோர்களையும், மக்களையும் அணி திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும்” என்றும் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்