Aran Sei

‘கேரளாவைப்போல் தமிழ்நாட்டிலும் கொரோனாவில் பாதிப்படைந்த குடும்பங்களுக்கு மாதந்தோறும் நிதியுதவி வேண்டும்’ – நெல்லை முபாரக் வலியுறுத்தல்

கேரள அரசைப் போன்று கொரோனா தொற்றால் குடும்பத்திற்கான வருமானம் ஈட்டித் தருபவர்களை இழந்த குடும்பத்திற்கு மாதந்தோறும் நிதியுதவி அளிக்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவிப்புச் செய்ய வேண்டும் என்று  எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று காரணமாக குடும்பத்துக்கு வருமானம் ஈட்டித்தருபவர் கேரளாவிலோ அல்லது வேறு எங்கும் இறந்திருந்தாலும் அந்தக் குடும்பத்துக்கு 3 ஆண்டுகளுக்கு மாதம் தோறும் ரூ.5,000 வழங்கப்படும் என கேரளா அரசு அறிவித்துள்ளது. கேரள அரசின் இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.

கொரோனா தொற்று காரணமாக குடும்ப உறுப்பினர்களை அதிலும் குறிப்பாக குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டித் தருபவர்களை இழந்த குடும்பங்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றன. கொரோனா தொற்றுக்கான சிகிச்சைக்குப் பல லட்சங்களை செலவு செய்து கடனாளியாக மாறியதோடு, செலவு செய்தும் சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் குடும்பங்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளன.

குடும்பத்திற்காக வருமானம் ஈட்டித் தந்த கணவன்மார்கள் தந்தைமார்கள், மகன்கள், மகள்கள் இழப்பால் அன்றாட குடும்ப செலவுகளைக் கூட பூர்த்தி செய்ய இயலாமல் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தமிழகத்தில் உள்ளன. இவர்களுக்குக் கரம் கொடுத்து உதவ வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. கேரள மாநில அரசு கடந்த வாரம் அறிவித்துள்ள ஒரு குடும்பத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ரூ.5000 வழங்கும் திட்டமானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முன்னுதாரணமாக உள்ளது.

ஆகவே, தமிழக அரசும் கேரள அரசைப் போன்றதொரு திட்டத்தை அறிவிப்புச் செய்து, கொரோனா தொற்றால் குடும்பத்திற்கான வருமானத்தை ஈட்டித் தருபவர்களை இழந்த குடும்பங்களின் கண்ணீரை துடைத்திட வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று  எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அறிக்கையில் தெரிவித்துள்ளார்

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்