Aran Sei

ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனை கூட்டம் – புறக்கணித்த தமிழக அரசு

புதிய கல்விக் கொள்கை தொடர்பாக இந்திய ஒன்றியத்தின் கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

புதிய கல்விக்கொள்கை தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுக்கும் ஒன்றிய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில், இன்று (மே 17) நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்க தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலாளர் தீரஜ்குமார், பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் ஐஏஎஸ் ஆகியோர் தலைமைச் செயலகத்திற்கு வருகை புரிந்திருந்தனர். ஆனால், இந்தக் கூட்டத்தைத் தமிழக அரசு புறக்கணித்துள்ளது.

பகவத் கீதை, ராமாயணத்தை கட்டாயமாக்கும் புதிய கல்வி கொள்கை – எதிர்ப்பு தெரிவிக்கும் உத்திரபிரதேச மதராஸாக்கள்

இந்த ஆலோசனை கூட்டம்குறித்து நேற்று (மே 16), தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஒன்றிய அரசுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். அக்கடிதத்தில், புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனை செய்யும்போது செயலாளர்களான ஐஏஎஸ் அதிகாரிகள் மட்டத்தில் மட்டும் ஆலோசனை செய்யாமல், மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனும் ஆலோசனை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.

இதுகுறித்து, செய்தியாளர்களைச் சந்தித்து பேசியுள்ள பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, “புதிய கல்விக் கொள்கை திட்டத்தின் வழியாக, நேரடியாகவோ மறைமுகமாகவோ குலக்கல்வி திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தப் பார்க்கிறதோ என்கிற  சந்தேகம் உள்ளது. தமிழ்நாட்டில் ஏற்கனவே இருக்கும் இருமொழி கொள்கைக்கு வேட்டு வைக்கும் விதமாக, மும்மொழி கொள்கையைத் திணிக்கும் படியாக இருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் முன்னமே கூறியிருந்தார். இட ஒதுக்கீடு குறித்து புதிய கல்விக் கொள்கையில் குறிப்பிடப்படவில்லை. இதுபோன்ற கருத்துகளை அமைச்சர் என்ற முறையில் அவர்களிடம் வைக்க வேண்டும் என்பதால்தான், நான் கடிதம் எழுதியிருந்தேன்.” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், அக்கடிதத்திற்கு ஒன்றிய அரசிடமிருந்து எந்த பதிலும் வராததால், நாங்கள் அக்கூட்டத்தை புறக்கணித்தோம் என்று அவர் கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்