Aran Sei

குடிசை மக்களுக்கான தமிழ்நாடு அரசின் கொள்கை வரைவு – நகரத்திலிருந்து வெளியேற்றப்படுவது தொடருமா என சமூகச் செயற்பாட்டாளர்கள் கேள்வி

‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வெளியிட்ட வரைவு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கையின் வழையாக குடிசைவாழ் மக்களை நகரத்திலிருந்து வெளியேற்றுவதை தொடரப்போகிறதா என்று பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டார்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  ‘தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்’ கடந்த 12.10.21 அன்று ‘வரைவு மறுகுடியமர்வு மற்றும் மறுவாழ்வு கொள்கை’ ஒன்றை வெளியிட்டு அதன் மீது பொதுமக்களின் கருத்துகளைக் கேட்டுள்ளது. முதலில் ஆங்கிலத்தில் அறிக்கையை வெளியிட்ட ‘வாரியம்’ 5 நாள் கழித்து தமிழில் வெளியிட்டுள்ளது. கருத்து கேட்புக்காக தரப்பட்டிருந்த 15 நாள் காலத்தை தற்போது மேலும் ஒரு வாரம் நீடித்துள்ளது (கெடு தேதி 03.11.21). இந்த அறிக்கையின் மீதான எமது கருத்துக்கள் பின்வருமாறு:

1. இலட்சக்கணக்கான மக்களின் வீடுகளை அகற்றி ‘மறுகுடியமர்வு’ செய்ய வகுக்கப்பட்ட ‘கொள்கை அறிக்கை’ மீது மக்கள் கருத்துக்களை அறிய வெறும் 21 நாட்கள் என்பது போதுமானதல்ல. இந்த ‘கொள்கை’ அமலாகத்தால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் கருத்துக்களை கேட்டறிய குறைந்தது 6 மாதம் கால அவகாசம் தேவை.

2. இதுவரை நடைமுறையில் உள்ள கொள்கையில் உள்ள சிக்கல்கள் என்ன ? மறுகுடியமர்வு செய்யப்பட்ட மக்களின் வாழ்நிலை குறித்து ஏதேனும் ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளதா? என்ற விவரங்கள் ஏதும் ‘முன்னுரையில்’ இடம்பெறவில்லை. மறுகுடியமர்வு செய்யப்பட்ட பின்பு 2 ஆண்டுகள் கழித்து ‘சமூகத்தணிக்கை’ செய்ய வேண்டும் என்று ‘வரைவு’ அறிக்கையில் (வரிசை எண் 13) தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் கடந்த 20 ஆண்டுகளாக கூவம், அடையாறு கரையோரங்களில் குடிசையில் வாழந்த மக்கள் சென்னை நகரத்திற்கு வெளியே கண்ணகி நகர், செம்மஞ்சேரி மற்றும் பெரும்பாக்கத்தில் மறுகுடியமர்வு செய்யப்பட்டுள்ளனர். சுமார் 50,000 மேற்பட்ட குடும்பங்கள் வாழ்வாதாரம் இழந்து, தரமான கல்வி – சுகாதாரம் இன்றி பெரும் துன்பத்திற்கு ஆளாகி வருகின்றன. எனவே இந்த பகுதியில் ‘சமூகத்தணிக்கை’ உடனடியாக செய்து அதன் அடிப்படையில் இக்கொள்கை அறிக்கையில் தீர்வுகளை முன்வைக்கவேண்டும்.

3. ‘நீர்நிலை உள்ளிட்ட ஆட்சேபத்துக்குரிய புறம்போக்கு நிலங்களை’ ஆக்கிரமித்துள்ள குடிசைகளுக்கு மட்டுமே இந்த கொள்கை அறிக்கை பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இவ்விடங்களில் கட்டப்பட்டுள்ள அரசு கட்டிடங்கள், வணிக வளாகங்கள், தனியார் அடுக்குமாடி குடியிருப்புகள் இதுவரை இடித்து அகற்றப்பட்டதே கிடையாது. எனவே நீர்நிலைகளை மீட்டெடுக்க அனைத்து விதமான கட்டுமானங்களும் கணக்கில் எடுக்கப்பட்டு அறிக்கை வெளியிடப்பட வேண்டும். ஏழைஎளிய மக்களின் குடியிருப்பு இடங்கள் மட்டுமே இதுவரை அகற்றப்பட்டு – நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வந்துள்ளன. தமிழக அரசின் இந்த அணுகுமுறை பாரபட்சமானதாகும். எனவே ஆட்சேபத்துக்குரிய புறம்போக்கு நிலங்கள் மற்றும் அதன் மீது கட்டப்பட்டுள்ள குடிசைகள் மற்றும் கட்டிடங்கள் குறித்து விரிவான அறிக்கை ஒன்றை வெளியிட வேண்டும்.

4. நகரத்தில் உள்ள இதர குடிசைப்பகுதிகளில் அதாவது நீர்நிலைகள் ‘அல்லாத’ ‘ஆட்சேபமற்ற’ பகுதியில் குடிசைகளுக்கு ‘பட்டா’ வழங்குவதில் இதுவரை தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுத்தது கிடையாது. எனவே ‘ஆட்சேபமற்ற’ குடியிருப்புகளுக்கு ‘பட்டா’ வழங்கும் திட்டத்தைக் கால கெடுவுடன் விரைந்து முடிக்க திட்டம் அறிவிக்க வேண்டும். ‘

5. நகரத்தின் மைய பகுதிகளில் வாழும் குடிசைகள் அகற்றப்படும்போது எதிர்ப்பு வருவதற்கான முதன்மை காரணம் அவர்களுக்கு நகரத்திற்கு வெளியே தொலைதூரத்தில் மாற்று இடம் கொடுக்கப்படுவதே. இந்த அறிக்கையில் (வரிசை எண் 5.2C) இல் ‘மறுகுடியமர்வுக்கான தேர்தெடுக்கப்பட்ட இடம், அருகாமை நகர பகுதிகளுக்கு பேருந்து அல்லது ரயில்கள் மூலம் செல்லும் பயணம் அரை மணி நிறத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர். இதன் பொருள் மக்கள் எந்த பகுதியிலிருந்து வெளியேற்றப்படுகின்றனரோ அங்கிருந்து ‘வாரியத்தின்’ விருப்பம்போல எங்கு வேண்டுமானாலும் மறுகுடியமர்வு செய்யலாம். இந்த நடைமுறை மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகவே உள்ளது. எனவே எந்த பகுதியில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுகின்றனரோ அங்கிருந்து 5கி.மீ சுற்றளவில் குடியமர்த்துவது என்பதே சரியான கொள்கையாகும்.

6. நகரத்திற்குள்ளே குடிசைமாற்று வாரியத்திற்குச் சொந்தமான நிலத்தோடு மாநகராட்சி, பொதுப்பணித்துறை, வீட்டுவசதி வாரியம் உள்ளிட்ட அரசு துறைகளிடம் உள்ள காலி நிலங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேவைக்கு ஏற்ப குடிசையில் இருந்து வெளியேற்றப்படும் மக்களை நகரத்திற்குள்ளே மறுகுடியமர்த்த வேண்டும்.

7. அனைவரும் அறியும்படி தகவல்களை அறிவித்தல் என்ற தலைப்பில் (வரிசை எண் 5.4) வாரியத்தின் இணையத்தளத்தில் மாவட்ட வாரியாக ‘ஆட்சேபத்திற்குரிய புறம்போக்கு நிலங்களில் கட்டப்பட்டுள்ள குடிசைகள்’ பற்றிய முழு விவரம் வெளியிடவேண்டும்.

8. ”ஒரு கல்வி ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் வீடுகள் அகற்றப்படாது” என்பது மறுகுடிமர்வு ம்ற்றும் மறுவாழ்வு கொள்கையாக இருக்க வேண்டும்.

9. ‘மறுவாழ்வு’ குறித்து வரிசை எண் 6 இல் – ‘மக்களின் வேலைவாய்ப்பு – வாழ்வாதாரம்’ குறித்து எந்த திட்டமும் இடம்பெறவில்லை (சுயதொழில் செய்வோருக்கு பொருளாதார உதவி தவிர்த்து) இதறகான சிறப்பு திட்டங்களை தமிழக அரசு வகுத்திடவேண்டும்.

10. மாற்றுகுடியிருப்பு (வரிசை எண் 6 (i) – மாற்று குடியிருப்பு 5கி.மீ மிகாமல் இருக்கவேண்டும், ‘பயனீட்டாளர் தொகை’ உள்ளிட்ட கட்டணம் ஏதும் இல்லாமல் வீடுகள் வழங்கவேண்டும் மக்கள் தொகை செறிவு (Population Density) குறைவாக இருக்க வேண்டும். 4 தளத்திற்கு மேலாக குடியிருப்புகள் இருக்கக்கூடாது. பராமரிப்புப் பணிகள மேற்கொள்ள வாரியமே பொறுப்பேற்க வேண்டும் என்ற விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.

11. மாற்றுகுடியிருப்பு வழங்கும் திட்டத்தில் மக்கள் ‘பயனாளர்கள்’, ‘தற்காலிக குடியிருப்போர்’ என்ற நிலையை மாற்றி குடியிருப்பு மீதும், நிலத்தின்மீதும் உரிய சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும்.

12. அத்தியாவசியமான உள்கட்டமைப்புகள் (வரிசை எண் 7.1 (j) ‘2km தொலைவுக்குள் துணை சுகாதார மையங்கள் இருக்க வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை ‘அப்பகுதியிலேயே இருக்கவேண்டும்’ என்று மாற்றிடவேண்டும்.

13. மறுவாழ்வு (வரிசை எண் 10 (b) இல் ‘அனைத்து குடும்பங்களுக்கும் 2 ஆண்டுகளுக்குள் அணைத்து நலத்திட்டங்களை’ சென்றடையவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் ‘6 மாதங்களுக்குள்’ என்று மாற்றிடவேண்டும்.

தமிழ்நாட்டில் நகரங்கள் வேகமாக விரிவாக்கம் அடைந்து வந்துள்ளது, தற்போது மொத்த மக்கள் தொகையில் சுமார் 50 % நகர்புறத்திலேயே வாழ்கின்றனர். கட்டுமானம், தூய்மைப்பணி, வீட்டு வேலை, ஆட்டோ-டாக்சி ஓட்டுநர், சாலையோர வியாபாரிகள் எனக் கூலித் தொழிலாளர்களாக உள்ள மக்கள் பெரும்பாலும் குடிசை பகுதிகளில் வாழ்கின்றனர். நகரத்தைக் கட்டியமைத்து, பராமரித்து வரும் இம்மக்கள் சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட தலித்துகள், மீனவர்கள், இசுலாமியர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அதிமுக ஆட்சியின் மக்கள் விரோத போக்கிற்கு மாற்றாக ‘சமூக நீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி’ என்ற முழக்கத்தோடு ஆட்சிக்கு வந்துள்ள திமுக அரசு, நகரத்தில் வாழும் பூர்வக்குடிகள் மற்றும் இதர உழைக்கும் மக்களுக்கு இந்நிலத்தின் மீதான உரிமை மற்றும் வேலைவாய்ப்பு, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட வாழ்வுரிமையை உறுதிசெய்யும் வண்ணம் ‘குடியிருப்பு மற்றும் நில உரிமை’ கொள்கையை வகுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று  பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த செயற்பாட்டார்கள்தெரிவித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்