Aran Sei

நீட் தேர்வில் மோசடி- தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க எஸ்.டி.பி.ஐ. கட்சி வேண்டுகோள்

நீட் தேர்வு மோசடியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு நீதி கிடைக்க தமிழக அரசு துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தகுதி, திறமையின் அடிப்படையில் தகுதியான மருத்துவர்களை கொண்டு வரப்போவதாக அறிவித்து, நாடு முழுவதும் ஏராளமான கெடுபிடிகள், கட்டுப்பாடுகளுடன் நீட் எனும் தேர்வு ஒன்றிய அரசால் நடத்தப்பட்டு வருகின்றது. ஆனால் தகுதி, திறமையை தாண்டி பெரும் முறைகேடுகளும், மோசடியும் நீட் தேர்வு விவகாரத்தில் நடைபெற்று வருவது தொடர்ச்சியாக அம்பலமாகி வருகின்றது. ஆள் மாறாட்டம், வினாத்தாள் கசிவு உள்ளிட்ட பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல் நீட் தேர்வை நன்றாக எழுதிய மாணவர்களின் விடைத்தாள் எண்ணில் திருத்தம் செய்து அந்த மதிப்பெண்ணைக் கொண்டு நடைபெறும் மோசடியும் தற்போது வெளிச்சமாகியுள்ளது. இந்த மோசடியால் முறைகேடு நடைபெறுவது மட்டுமின்றி, நன்றாக தேர்வெழுதிய மாணவர்களின் எதிர்காலமும் பாழாகிவிடும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தேனியை சேர்ந்த ராஜா முகமது என்பவரின் மகள் ஆயிஷா ஃபிரோஸ் என்ற மாணவி மருத்துவக் கல்வி கனவுடன் இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். தேர்வு முடிவுக்காக அவர் உட்பட ஒட்டுமொத்த குடும்பத்தினரும் ஆவலுடன் காத்திருந்த வேளையில், தேர்வு முடிவை கண்டு அதிர்ச்சியடைந்த்தனர். காரணம் தேர்வில் குறைந்தது 576 மதிப்பெண்களுக்கான விடையை சரியானமுறையில் எழுதியிருந்தும் வெறும் 199 மதிப்பெண்கள் மட்டுமே மாணவிக்கு கிடைத்துள்ளது.

மாப்ளா போராட்டமும் சில குறிப்புகளும் – பகுதி 3

தற்போது நீட் தேர்வு முடிவின் அடிப்படையில் இந்த மாதம் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெறவுள்ள நிலையில், தேர்வில் பங்கேற்றவர்களுக்கு விடைத்தாள் நகலை மின்னஞ்சல் வாயிலாக மருத்துவ தேசிய தேர்வு வாரியம் அனுப்பியுள்ளது. அதனைக் கண்ட மாணவி ஆயிஷா ஃபிரோஸ் அதிர்ச்சியடைந்துள்ளார். காரணம் மாணவியின் ரோல் எண் விடைத்தாளில் முறைகேடாக திருத்தப்பட்டுள்ளது. ரோல் எண் திருத்தப்பட்டு மாணவிக்கு கிடைக்க வேண்டிய மதிப்பெண் மூலம் முறைகேடு நடந்துள்ளது தெரிய வருகிறது. இதுகுறித்து மருத்துவ தேசிய தேர்வு வாரியத்திடம் முறையிட்டும் மாணவிக்கு முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை. இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவிலும் மாணவி முறையிட்டுள்ளார். தொடர்ந்து தனக்கு நீதி கிடைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை மாணவி ஆயிஷா நாடியுள்ளார்.

இதேபோன்ற குற்றச்சாட்டுடன் தென்காசி மாவட்டம் கடையத்தை சேர்ந்த முப்புடாதி என்ற மாணவரும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையை நாடியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஏற்கனவே நீட் மூலம் தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவை சீர்குலைக்கும் நடவடிக்கை நடைபெற்று வரும் வேளையில், நீட் தேர்வை நல்ல முறையில் எழுதிய தமிழக மாணவர்களின் மதிப்பெண்களை முறைகேடான வழியில் திருடுவது பெரும் மோசடியாகும்.

வெனிசூலாவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணை – அமெரிக்கா மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிப்பு

இந்த விவகாரத்தில் தனக்கு நீதி வேண்டும் என்று மாணவி ஆயிஷா ஃபிரோஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார். ஆனால் நீதி பெறுவதற்கான வழி என்னவென்று தெரியாமலும், வசதி இல்லாமலும் இன்னும் இதுபோன்று எத்தனை மாணவர்கள் உள்ளனரோ என்ற கேள்வி எழுகிறது.

ஆகவே, தமிழக அரசு இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி ஆயிஷா ஃபிரோஸ் உள்ளிட்ட அனைத்து மாணவர்களுக்கும் நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது போன்று அநீதி இழைக்கப்பட்ட மாணவர்களை கண்டறிந்து அவர்கள் அனைவருக்கும் உரிய நீதி கிடைக்கவும், இந்த ஆண்டே மாணவி ஆயிஷா உள்பட பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கலந்தாய்வில் இடம் பெறவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக அனைத்து ஜனநாயக சக்திகளும் அரசுக்கு கோரிக்கை விடுக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதாக நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

மேலும், சமூக நீதிக்கு எதிரானது மட்டுமின்றி, இத்தகைய மோசடிக்கும், முறைகேடுக்கும் வழிவகுக்கும் நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு நிரந்தரமான விலக்கை பெறுவதன் மூலம் மட்டுமே தமிழக மாணவர்களின் நலனை பாதுகாக்க முடியும் என்பதால், தமிழக அரசு அதற்கான நடவடிக்கைகள் துரிதப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொள்வதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்