Aran Sei

‘விவசாய சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ – தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

மூன்று விவசாய சட்டங்களையும் ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்ப  வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரியுள்ளது.

இதுகுறித்து, இன்று (ஜூன் 19), தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழக முதல்வர் ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது தமிழக அரசின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்துப் பேசியுள்ளார். அக்கோரிக்கைகளில், ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மின்சாரத் திருத்த மசோதா 2020-ஐ திரும்பப் பெற வேண்டுமென்றும் கோரியுள்ளார். தமிழக முதல்வரின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

‘எங்கள் போராட்டம் 2024 வரை தொடர்ந்தாலும், அதற்கும் நாங்கள் தயார்’ – போராடும் விவசாயிகள்

“மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் ஏறக்குறைய ஏழு மாத காலமாக தலைநகர் புதுடெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் அளிக்கும் வகையில் தமிழக அரசின் சார்பில் முதல்வர், பிரதமரிடம் ஒன்றிய அரசின் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியிருப்பது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக் காட்டுகிறது. ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின் சார்பில் முதல்வருக்கு வாழ்த்துகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.” என்று அவர் கூறியுள்ளார்.

அதிமுக விவசாய விரோதச் சட்டங்களுக்கு ஆதரவளித்ததன் வழியாக தமிழகத்திற்கு மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருந்தது என்றும் அதைப் போக்கும் வகையிலும் தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்குக் கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் தமிழக முதல்வரின் நடவடிக்கை அமைந்துள்ளது என்றும் பெ.சண்முகம் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

‘தொற்று காலத்தில் விவசாய சட்டங்களை இயற்ற முடிந்த அரசால், அதே தொற்று காலத்தில் ஏன் அவற்றை ரத்து செய்ய முடியாது’ – ராகேஷ் திகாயத் கேள்வி

இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நடைபெறவுள்ள சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே விவசாயிகளுக்கு விரோதமான மூன்று விவசாய சட்டங்களையும் மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பெ.சண்முகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்