Aran Sei

ஊரடங்கால் கோலார் தங்கவயலில் பட்டினியால் வாடும் 3000 தமிழ்க் குடும்பங்கள் : தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கோலார் தங்கவயலில் 3000 தமிழ்க் குடும்பங்கள் கொரோனா ஊரடங்கில் வேலையிழந்ததால், தினசரி உணவிற்கே வழியின்றி தவித்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலத்தின் கோலார் மாவட்டத்தில் கோலார் தங்க வயல் உள்ளது. இப்பகுதியில், ஆங்கிலேயர் காலத்தில் தங்கச் சுரங்கத்தில் பணி செய்வதற்காக, தமிழ் நாட்டின் அப்போதைய ஆர்காடு மாவட்டம் உட்பட பகுதிகளில் இருந்து, தமிழர்கள் அழைத்து வரப்பட்டு, கோலாரிலேயே குடியமர்த்தப்பட்டனர்.

2001 ஆண்டு தங்கச் சுரங்கம் மூடியதைத் தொடர்ந்து, பல தமிழ்க் குடும்பங்கள் அருகிலுள்ள மாநில தலைநகரான பெங்களூருவுக்கு புலம்பெயர்ந்தனர். மற்றவர்கள் அப்பகுதியிலேயே கூலி வேலைகளை செய்துவந்தனர்.

ஊரடங்கு தந்த பரிசு – வாழ்விடங்களில் இருந்து வெளியேறும் பழங்குடிகள்

இந்நிலையில், கடந்தாண்டு கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கின் காரணமாக, கொலாரில் உள்ள தமிழர் குடும்பங்கள் வேலையின்றி வறுமையில் தள்ளப்பட்டனர்.

பின்னர், கொரோனா இரண்டாம் அலையால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, அத்தமிழர்களை பசி பட்டினியை நோக்கி தள்ளியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழக மக்கள் புரட்சிக் கழகத்தின் தலைவர் அரங்க.குணசேகரனிடம் அரண்செய் பேசியபோது, “கோலார் தங்கவயலில் 3,000 தமிழர் குடும்பங்கள் கொரோனா ஊரடங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தங்க வயல் மூடப்பட்ட பிறகு, அக்குடும்பங்களுக்கு கர்நாடக அரசு ரூ.52,000 தருவதாக கூறியது. ஆனால், இதுவரை அவர்களுக்குக் கொடுக்கவில்லை. அதைத் தொடர்ந்து, அவர்கள் கூலித் தொழிலாளர்களாக ஆனார்கள். தினமும் பெங்களூருவுக்கு ரயிலில் சென்று உதிரி வேலைகளை செய்து வந்தனர். அதுதான் அவர்களின் பொருளாதாரமாக இருந்தது.” என்று தெரிவித்தார்.

இந்தியாவில் வேலையின்மை விகிதம் 14.7 விழுக்காடாக அதிகரிப்பு – பொருளாதார ஆய்வில் தகவல்

மேலும், “இப்போது ஊரடங்கு காரணமாக போக்குவரத்து இல்லை. வேலையும் இல்லை. கடுமையான பசி பட்டினியில் தவிக்கிறார்கள். 3000 குடும்பங்களுக்கு ஒரு தனி நபரோ அல்லது சிலர் ஒன்று சேர்ந்தோ உதவி செய்ய முடியாது. தமிழ்நாடு அரசு கருணை மனம் கொண்டு கோலார் தங்கவயல் தமிழர்களுக்கு கொரோனா சிறப்பு தொகுப்பு ஒன்றை அளித்து, அவர்கள் வருமையிலும், பட்டினியிலும் வாடுவதை தடுக்க வேண்டும்.”  என்று அரங்க.குணசேகரன் கோரினார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்