Aran Sei

‘ஏழு தமிழர்களையும் காலவரம்பற்ற விடுப்பில் விடுவிக்க வேண்டும்’ – முதல்வருக்கு தமிழ்த்தேசிய பேரியக்கம் வேண்டுகோள்

ராஜிவ் காந்தி கொலை வழக்கில், தண்டிக்கப்பட்டு முப்பது ஆண்டுகளுக்கு மேலாக வாடும் ஏழு தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென தமிழக முதல்வருக்கு தமிழ்த்தேசிய பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து, பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அஇஅதிமுக அமைச்சரவை ஏழு தமிழர்களை விடுவிக்கும் பரிந்துரையை நிறைவேற்றி, ஆளுநரின் ஒப்புதலுக்காக 2018-ஆம் ஆண்டு அனுப்பிவைத்ததை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுமென்றே இரண்டாண்டிற்கு மேல் கிடப்பில் போட்டுள்ளதாக கூறியுள்ளார்.

“ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ், ஈஷாவால் மிரட்டப்படும் பெ.மணியரசன்

மேலும், சட்டங்களுக்கு உட்பட்ட மாநில அரசின் பரிந்துரைகளை ஆளுநர் ஏற்க வேண்டும் என்று பல வழக்குகளில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாகவும், அமைச்சரவையின் உதவி மற்றும் அறிவுரைப்படி (Aid and advise) ஆளுநர் செயல்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட உறுப்பு 163 (1) கூறுவதாகவும் அவர் அந்த அறிக்கையில் மேற்கோள் காட்டியுள்ளார்.

அதுமட்டுமல்லாது, “ஏழு தமிழர் விடுதலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் அப்போதையத் தலைமை நீதிபதி சதாசிவம் தலைமையிலான அமர்வும் , அதேபோன்று, நீதிபதி எச்.எல்.தத் தலைமையிலான அமர்வும் மாநில அரசுகள் பொது மன்னிப்பு வழங்கி சிறையாளிகளை விடுதலை செய்வதற்கு, தங்குதடையற்ற அதிகாரத்தை அரசமைப்புச் சட்ட உறுப்பு 161 வழங்குகிறது.” என்று கூறியுள்ளதையும் தனது அறிக்கையில் பெ.மணியரசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது – தமிழ்த்தேசிய பேரியக்கம் அறிக்கை

மேலும், “காந்தியடிகளைக் கொலை செய்த வழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்ற கோபால் கோட்சேயை 14 ஆண்டுகளில் மராட்டியக் காங்கிரசு ஆட்சி விடுதலை செய்தது. பஞ்சாப் முதலமைச்சர் பியாந்த்சிங்கைக் கொலை செய்த வழக்கில் தண்டிக்கப்பட்ட பல்வந்த் சிங்கின் தூக்குத் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்து. பின்னர் விடுதலை செய்தார்கள்.” என்றும் பெ.மணியரசன் இதற்கு முன்னர் நடந்தவற்றை நினைவூட்டியுள்ளார்.

இந்நிலையில், “ஏழு தமிழர்களை விடுதலை செய்ய உடனடியான மாற்றுச் சட்ட வழிகளைத் தமிழ்நாடு அரசு கையாள வேண்டும். அதற்கு முன்பாக, சிறையாளர்களுக்கு விடுப்புக் கொடுக்க உள்ள அதிகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தி, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, அருப்புக் கோட்டை இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ், செயக்குமார் ஆகிய 7 பேரைக் காலவரம்பு வரையறுக்காமல் நீண்ட கால விடுப்பில் விடுவிக்க வேண்டும். இதற்கான அதிகாரத்தை “தமிழ்நாடு தண்டனை இடைநிறுத்த விதிகள் – 1982 (The Tamil Nadu Suspension of sentence Rules -1982) பிரிவு 40 தமிழ்நாடு அரசுக்கு வழங்கியுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

‘தமிழகத்தை பிரிக்க வேண்டுமென்று இராமதாஸ் ஆர்.எஸ்.எஸ்.சின் கருத்தையே கூறுகிறார்’ – தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டனம்

எனவே, ஏழுதமிழர்களையும் உடனடியாகக் காலவரம்பற்ற விடுப்பில் விடுவிக்க வேண்டுமென தமிழ்நாடு முதலமைச்சரிடம் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்