Aran Sei

“ஈஷா மையத்தை அரசு ஏற்க வேண்டும்” – ஆர்எஸ்எஸ், ஈஷாவால் மிரட்டப்படும் பெ.மணியரசன்

க்கி வாசுதேவின் ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

கடந்த 18.04.2021 அன்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் சிதம்பரத்தில் அதன் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது.

இக்குழுக்கூட்டத்தில் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட கட்சியின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

கும்பமேளாவில் பங்கேற்று கொரோனா சிகிச்சை பெற்றுவந்தோர் தப்பியோட்டம் : 20 பேர் மீது வழக்குகள் பதிந்த காவல்துறை

இந்நிலையில் இந்தக் குழுக்கூட்டத்தில் ஜக்கி வாசுதேவ் கோவை வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் நடத்தி வரும் ஈஷா மையத்திற்கு எதிராகவும் அந்த மையத்தை அரசுடமை ஆக்க வேண்டுமெனக் கோரி தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் ஈஷா மையத்தில் தொடர்ந்து சுற்றுச்சூழல் சட்டங்கள் மீறப்படுவதை சுட்டிக்காட்டி, அவற்றை நிறுத்திக் கொள்ளுமாறு வலியுறுத்தி மே 2017லேயே அறிவிப்பாணை வெளியிட்டுள்ளது.

மேலும் , ஜக்கி வாசுதேவ் “காவிரிக் கூக்குரல்” என்ற பெயரில் மரம்நடும் இயக்கத்தை தமிழ்நாட்டில் பரவலாக நடத்தியுள்ளார். அவ்வாறு காவிரியின் இரு கரைகளிலும் மரம் நடப்பட்டால் காவிரியில் பன்னிரெண்டு மாதங்களும் தண்ணீர் ஓடும் என்று அதன் வழியாக ஒரு பொய்யைப் பரப்பி வருகிறார். கர்நாடகம் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்குத் தர வேண்டியத் தண்ணீரை கர்நாடகம் தர மறுத்து வரும் நிலையில்
தமிழ்நாட்டு மக்கள் கர்நாடகத்தை நோக்கித் தங்களுக்கு உரிமையுள்ள காவிரி நீரை கேட்காமல் தடுக்கும் நோக்கத்துடன் தமிழ் மக்களை மடைமாற்றும் சூழ்ச்சித் திட்டம் இது.

‘கொரோனாவால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான உயிர்பலிகள்; கட்டுப்படுத்த இயலாத பிரதமர் பதவி விலக வேண்டும்’ – திருமாவளவன் வலியுறுத்தல்

அதுமட்டுமல்லாது ,தியான லிங்கம் கோயில், ஆதியோகி சிலை ஆகியவை தமிழர் சிவநெறி மரபுக்கும், ஆகமங்களுக்கும் முரணான வகையில் எதேச்சாதிகாரமாக நிறுவப்பட்டுள்ளன.

மேலும், இந்து சமய அறநிலையத்துறையின் பொறுப்பில் உள்ள 44,121 இந்துக் கோயில்களில் 11,999 கோயில்கள் மூடிக் கிடப்பதாக ஜக்கி வாசுதேவ் தெரிவித்து வருகிறார். உண்மை என்னவெனில், இந்தக் கோயில்களில் வருமானம் போத வில்லை என்ற குறைபாடு இருக்கிறதே தவிர, கோயில்கள் மூடிக் கிடக்கவில்லை.இக்கோவில்களில் தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டத்தின் கீழ் ஒருநாளைக்கு ஒரு கால பூசையாவது நடந்து வருகிறது.

இந்து சமய அறநிலையத்துறையைக் கலைத்துவிட்டு இந்துக் கோயில்களைத் தனிநபர்களிடம் ஒப்படைத்தால் ஜக்கி வாசுதேவ் போன்ற கார்ப்பரேட் ஆன்மிக ஏகபோகவாதிகளிடமும், வர்ணாசிரம ஆதிக்கவாதிகளிடமும்தான் தமிழ்நாட்டுக் கோயில்கள் போய்ச் சேரும்.

எனவே, ஜக்கி வாசுதேவின் இந்து அறநிலையத்துறைக் கலைப்புக் கோரிக்கையை மறுத்து, தமிழ்நாடு அரசு உடனடியாக அறிக்கை வெளியிடுவதோடு, ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் ,தமிழ்நாடு அரசு தமிழ்வழி அர்ச்சர்களை உருவாக்க பயிற்சிக் கல்வி நிலையங்களை நடத்தி, இருநூறுக்கும் மேற்பட்ட அர்ச்கர்களுக்கு சான்றிதழும் வழங்கியுள்ளது. அவர்கள் அனைவருக்கும் உடனடியாகத் தமிழ்நாடு அரசு அர்ச்சகர்களாக பணி வழங்க வேண்டும்.

தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படும் குழந்தைகள் – என்ன செய்ய போகிறோம் நாம்?

தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழியில் கருவறை பூசையும், குடமுழுக்கும் நடைபெறுவதை தமிழ்நாடு அரசு அனைத்துக் கோயில்களிலும் உறுதி செய்ய வேண்டும். சமஸ்கிருதத்தில் அர்ச்சனை கோருவோருக்கு மட்டுமே அம்மொழியில் பூசை நடத்த வேண்டும். மற்றபடி வழக்கமாக, தமிழில் மட்டுமே பூசைகள் நடப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டுமெனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜக்கி வாசுதேவின் ஈஷா அறக்கட்டளையை அரசுடைமையாக்கக் கோரி கடந்த 13.04.2021 அன்று தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் தீர்மானம் இயற்றப்பட்டது.

இந்நிலையில், இதனால் ஆத்திரப்பட்ட ஜக்கிவாசுதேவ் அமைப்பைச் சேர்ந்தவர்ககளும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்களும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் அவர்களின் தொலைப்பேசியில் வன்முறை மிரட்டல் விடுத்தும், அவரது வீட்டு முகவரியை கேட்டும் மிரட்டி வருகின்றனர்.

எனவே, உண்மைக் குற்றவாளிகளைக் கண்டறிந்து அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தீர்மானம் இயற்றியுள்ளது.

ரெம்தேசிவிர் மருந்துகளை அவசரமாகக் கோரிய மகாராஷ்டிரா அரசு – அலட்சியமாகப் பதிலளித்த பிரதமர் அலுவலகம்

மேலும், ஈஷா மையத்தை அரசுடைமையாக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டுக் கோயில்களில் தமிழ்வழியில் பூசையும் குடமுழுக்கும் நடத்திட வலியுறுத்தியும், இந்து அறநிலையத்துறையைக் கலைத்திடக் கோரும் ஜக்கி வாசுதேவின் கோரிக்கையை மறுத்து தமிழ்நாடு அரசு அறிக்கை வெளியிட வலியுறுத்தியும் வருகின்ற 08.05.2021அன்று தஞ்சையில் தெய்வத் தமிழ்ப் பேரவை சார்பில் நடைபெறும் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஆன்மிகச் சான்றோர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொள்ளுமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழுவில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.

source: தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு தீர்மானம்-18.04.2021

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்