Aran Sei

மாணவர் அப்துல் ரஹீம் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுங்கள் – மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்தல்

சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீம் மீது தாக்குதல் நடத்திய காவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா கோரிக்கை விடுத்துள்ளார். இதனையொட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“சட்டக் கல்லூரி மாணவரான அப்துல் ரஹீம் என்பவர் கொடுங்கையூரில் பகுதி நேரமாக மெடிக்கல் கடையில் வேலை பார்த்து வருகிறார். அவர் இரவில் வேலையை முடித்து விட்டுச் சைக்கிளில் வீட்டிற்குச் செல்லும் நேரத்தில் முகக்கவசம் சரியாக அணியாததற்காக ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் அபராதம் செலுத்துமாறு கூறியுள்ளனர்.

அந்த மாணவர் இதனையொட்டி காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து மிகவும் கடுமையாகத் தாக்கியுள்ளனர். காவல் துறையின் இத்தகைய செயல் மனித உரிமைக்கு எதிரான செயலாகும். இது போன்ற ஒரு சில காவல் துறையினரின் மனித நேயமற்ற செயல் ஒட்டு மொத்த காவல் துறையினருக்கும் ஆளும் அரசுக்கும் கெட்ட பெயரை உண்டாக்கும் வகையில் உள்ளது.

சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமைக் கைது செய்து இரவு முழுவதும் கடுமையாகத் தாக்கியதோடு மாணவன் மீதே பொய் வழக்குப் பதிவு செய்து கைது செய்திருப்பது கொடுங்கையூர் காவல் துறையின் அதிகார துஷ்பிரயோகத்தையும், மனித உரிமைக்கு எதிரான ஆணவப் போக்கையும் காட்டுகிறது.

சட்டக் கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை மிகவும் கடுமையாகத் தாக்கிய காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, பணி இடை நீக்கம் செய்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருப்பதை வரவேற்கிறேன். அதே நேரத்தில் கடுமையான பிரிவுகளைச் சேர்க்காமல் சாதாரண பிரிவுகளைச் சேர்த்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பதும், இதுவரை அவர்களைக் கைது செய்யாமல் இருப்பதும் வருந்தத்தக்கது.

ஆகவே சம்பந்தப் பட்ட காவல் துறை அதிகாரிகள் மீது எந்த வித பாரபட்சமுமின்றி கடுமையான வழக்கு பிரிவுகளைச் சேர்த்து வழக்குப் பதிவு செய்ய வேண்டும். மேலும் துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுத்து பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்ய வேண்டும் எனவும் காவல்துறையில் பணி புரியும் காவல்துறை அதிகாரிகள் அனைவருக்கும் மனித உரிமை கல்வி மற்றும் உளவியல் கல்வி ஆகியவற்றைப் பயிற்றுவிக்க நடவடிக்கை எடுப்பதோடு தவறு செய்யும் காவல்துறையினர் மீது உடனடி நடவடிக்கை எடுத்துப் பொது மக்களுக்குக் காவல்துறை மீது நம்பிக்கை உண்டாக்க வழி வகை செய்ய வேண்டும்” என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்