Aran Sei

கொரோனா பரப்பியதாக அவதூறு : மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் – எம்.எச்.ஜவாஹிருல்லா

Image Credits: Bar And Bench

ப்லீக் ஜமாத்தினர் மீது அவதூறு பரப்பிய மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா பரவுவதற்கு காரணம் டெல்லியில் நடைபெற்ற தப்லீக் ஜமாத் மாநாடுதான் என்று மத்திய அரசு தரப்பில் பரப்பப்பட்டது. தப்லீக் ஜமாத்தினர்தான் இந்தியாவில் கொரோனவை பரப்பும் உச்சபட்ச நபர்கள் என்றும் இவர்கள் வெடிகுண்டு போன்று நடமாடி வருகின்றார்கள் என்றும் பாஜகவினர் கடந்த மார்ச்  ஏப்ரல் மாதங்களில் அவதூறு பரப்பி வந்தார்கள். இந்த அவதூறு பரப்புரைகள் காரணமாகத் திட்டமிட்டு இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை பரப்பப்பட்டு வரப்பட்டது” என்று கூறப்பட்டுள்ளது.

“வெறுப்பு பரப்புரையுடன் நிற்காமல் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் இந்தியாவிற்கு ஆன்மீக சுற்றுப்பயணம் வந்திருந்த 950க்கும் மேற்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் நாடு முழுவதும் கைது செய்யப்பட்டார்கள். தமிழகத்திலும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் அடிப்படையில் 12 பெண்கள் உட்பட 129 தப்லீக் ஜமாத்தினர் கைது செய்யப்பட்டனர்” என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

“இந்தச் சூழலில் பெரும்பாலான வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் தமது தாய்நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என்ற நிர்பந்தத்தின் காரணமாக நீதிமன்றத்தில் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறையிலிருந்த காலம் தண்டனை காலமாகக் கருதப்பட்டு அதற்கு மேல் அபராதமும் செலுத்தி தம் வழக்கை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பினர்” என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

‘குற்றச்சாட்டிற்கு ஆதாரம் எதுவும் இல்லை’ – தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் அனைவரும் விடுதலை

“இவர்களில் 44 வெளிநாட்டினர் மட்டும் தம் மீது சுமத்தப்பட்ட வழக்கை எதிர்த்து வழக்காடினர். இந்த வழக்கை விசாரித்த டெல்லி பெருநகர தலைமை குற்றவியல் நடுவர் இவர்கள் அனைவரையும் விடுதலை செய்துள்ளார். இவ்வாறு விடுதலைச் செய்யப்பட்ட 8 வெளிநாட்டினர் மீது பூர்வாங்க ஆதாரம் இல்லை என்றும் எஞ்சிய 36 நபர்கள் மீது கொரோனாவை பரப்பியதற்கான ஆதாரங்கள் இல்லை என்று விசாரணையில் தெரிய வருவதாகக் குறிப்பிட்டு குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்” என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“டெல்லியில் உள்ள தப்லீக் தலைமையகம்தான் கொரோனாவை பரப்பிய மையம் என்று வர்ணிக்கப்பட்டது. இவர்களில் ஒருவர் கூடக் குறிப்பிட்ட அந்தக் காலத்தில் அங்கு இருக்கவில்லை என்றும் இவர்களைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீய நோக்கத்தை நிறைவேற்றும் வகையில்தான் இவர்கள் பல்வேறு இடங்களிலிருந்து கைது செய்யப்பட்டார்கள் என்றும் டெல்லி தலைமை குற்றவியல் நடுவர் தனது தீர்ப்பில் மோடி அரசிற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்” என்று ஜவாஹிருல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆதாரம் இல்லை”- வெளிநாட்டு தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் விடுவிப்பு

“இதே போல் மும்பை உயர் நீதிமன்றத்தின் அவுரங்காபாத் கிளை அமர்வு கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்து உத்தரவிட்டபோது அரசியல் காரணங்களுக்காகக் கொரோனா பரவலாக்கத்திற்கு தப்லீக் ஜமாத்தினர் பலிகிடவாக்கப்பட்டனர் என்று குறிப்பிட்டது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சிறுபான்மை இஸ்லாமிய சமுதாயத்தின் மீதான தனது வெறுப்புணர்வின் காரணமாக வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினர் மீது கொரோனாவைப் பரப்பினார்கள் என்று அவதூறு பரப்பி அவர்களை ஆறு மாதங்களுக்கு மேலாகத் தமது தாய்நாட்டிற்குத் திரும்ப விடாமல் சிறையில் அடைத்துப் பன்னாடுகளின் பார்வையில் இந்தியாவின் மதிப்பைச் சீர்குலைத்தமைக்காகப் பிரதமர் மோடி தப்லீக் ஜமாத்தினரிடமும் சம்பந்தப்பட்ட நாடுகளிடமும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கைது செய்யப்பட்ட வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினருக்கு இழப்பீடு வழங்குவதுடன் அவர்களை இந்தியாவிற்குள் மீண்டும் வருவதற்குப் பிறப்பிக்கப்பட்ட தடை ஆணையை நீக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.

தப்லிகி ஜமாத் மீதான வெறுப்பு அரசியல் – பாஜகவும் இனவாத ஊடகங்களும்

“மோடி அரசின் உத்தரவிற்கு அடிபணிந்து தமிழகத்திற்கு விருந்தினராக வந்த 129 வெளிநாட்டு தப்லீக் ஜமாத்தினரை கைது செய்து சிறையில் அடைத்துப் பெரும் துன்பத்தை அளித்த தமிழக அரசின் சார்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” எனவும் ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்