Aran Sei

தப்லிகி ஜமாத் மீதான வெறுப்பு அரசியல் – பாஜகவும் இனவாத ஊடகங்களும்

credits : financial express

வம்பர் 17 அன்று, ஒரு விநோதமான வாக்குமூலத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் உச்சநீதி மன்றத்தின் முன் சமர்ப்பித்தது. இந்தியாவில் கொரோனா பரவலின் போது, டெல்லியில் தப்லீக் அமைப்பு ஒன்று கூடிய நிகழ்வை வைத்து இனவாதத்தை தூண்டும் செய்திகளை செய்தி நிறுவனங்கள் வெளியிட்டன.

இதைப்பற்றி ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் அளித்த மனுவிற்கு பதிலாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, இந்திய ஊடகங்கள் “நடுநிலைமை தவறாமல், சீரான செய்திகளை” தான் வெளியிட்டன என பதிலளித்திருக்கிறது.

இந்த பதிலை நிரூபிக்க, அமைச்சகம் தேர்ந்தெடுத்த ‘சாட்சியங்கள்’ மேலும் அதிர்ச்சியளிப்பவையாக இருக்கின்றன.

இண்டியன் எக்ஸ்பிரஸ், தி வயர், தி ப்ரிண்ட் போன்ற தளங்களின் செய்திகளை மட்டுமே மிகக் கவனமாக தேர்ந்தெடுத்துக் கொண்டு, தப்லீக் ஜமாஅத் நிகழ்வை இந்திய ஊடகங்கள் அறம் தவறாமல் கையாண்டதாக அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

மேலும், வைரஸை வைத்து இனவாதத்தை பரப்புவதைத் தவிர்க்க அரசியல் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக காண்பித்துக் கொள்ள ஒய்.எஸ்.ஜகன்மோகன் ரெட்டி, சரத் பவார் போன்றோரை உதாரணமாக காட்டியிருக்கிறது தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்.

எதைக் காட்டாமல் மறைத்திருக்கிறார்கள் என்றால் , செய்தி சேனல்கள், குறிப்பாக ஹிந்தி மற்றும் பிராந்திய சேனல்கள் இந்த நிகழ்வை வைத்து பாரபட்சமான செய்திகளை வெளியிட்டு இனவாதத்தை பரப்பியதை. நாடு முழுதும் பாஜக தலைவர்களும் அமைச்சர்களும் இதை ஊதி பெரிதாக்கியதை குறித்தும் அமைச்சகம் எதுவும் பேசவில்லை.

ஆனால், அமைச்சகத்தின் இந்த பூசி மெழுகுதல் வேலையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தியாவின் தலைமை நீதிபதியான எஸ்.ஏ.பாப்டேவின் தலைமையில் இயங்கிய நீதிபதிகளின் அமர்வு இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாமல், புதிதாக ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும் என கேட்டது. இன்னும் மூன்று வாரங்களில் இது மீண்டும் விசாரணைக்கு வரும். கேபிள் தொலைக்காட்சி இணைய சட்டத்தின் கீழே , செய்தி தொலைக்காட்சிகளில் இது போன்ற நிகழ்ச்சிகள் வெளியிடப்படுவதை தடுக்க விதிமுறைகளை கொண்டு வர வேண்டும் என நீதிமன்றம் அரசை அறிவுறுத்தியிருக்கிறது.

செய்திகள் எவ்வளவு ‘சீராக’ இருந்தன?

மார்ச் மாதம், பல்வேறு காரணங்களினால், மக்களுக்கு மிகவும் கடினமான காலமாக இருந்தது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருந்தது, நரேந்திர மோடி தலைமையிலான அரசு இந்தியா முழுக்க லாக்டவுன் அறிவித்திருந்தது. அறிவித்த நான்கு மணி நேரத்தில் அமலுக்கு வந்த லாக்டவுனால் பலரும் தடுமாறினர். ஆயிரக்கணக்கான தப்லீக் ஜமாஅத் வருகையாளர்கள் – உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் – நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாட்டிக் கொண்டனர்.

இதைப் போன்ற ஒரு சமயத்தில், திடீர் லாக்டவுன் உண்டாக்கிய தாக்கம், அந்த சூழலை சமாளிக்க அரசின் தயார்நிலை எப்படி இருக்கிறது என்பது எல்லாம் பற்றி ஊடகவியலாளர்கள் பேச வேண்டியதாக இருந்தது. ஆனால், இதில் கவனம் செலுத்தாமல், ஸீ ந்யூஸ், ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், அமர் உஜாலா, ஏ.என்.ஐ போன்ற வலது சாரி செய்தி அமைப்புகளும் ஊடக நிறுவனங்களும் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராக அவதூறு பரப்பத் தொடங்கின. இந்தியாவில் கோவிட் கேஸ்கள் அதிகரிக்க தப்லீக் ஜமாஅத் தான் காரணம் என நேரடியாகவே குற்றம்சாட்டினர்.

டைம்ஸ் நவ் “மர்கஸ் மேஹம்” ( Markaz mayhem) என அந்த செய்தித் தொகுப்பிற்கு பெயரிட்டது. ஸீ நியூஸின் ஆசிரியர் சுதிர் சௌதரி தப்லீக் ஜமாஅத் அமைப்பின் கெட்ட எண்ணங்கள் தான் இந்தியாவின் கொரோனா கேஸ்கள் அதிகரிகக் காரணம் என குற்றம் சாட்டினார். தங்களுடைய “மத நம்பிக்கைகளுக்காக” ஒரு நாட்டையே அவர்கள் நெருக்கடி நிலைக்கு தள்ளியதாகவும் சொன்னார்.

ஏப்ரல் மாதம், இஸ்லாமிய-வெறுப்பு அதே அளவில் இருந்த போது, உத்தர பிரதேசத்தின் சஹரன்பூரில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தகராறு செய்ததாக அமர் உஜாலா ஒரு செய்தியை வெளியிட்டது.

“ஜமாஅத் உறுப்பினர்களுக்கு அசைவ உணவு கிடைக்காததால், தங்களுக்கு கொடுத்த உணவை தூக்கி வீசிவிட்டு, பொது வெளியில் மலம் கழித்தார்கள்” என அமர் உஜாலா செய்தியில் இருந்தது.

இந்தச் செய்தி பயங்கரமாக பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது. பிறகு, சஹரன்பூர் காவல்துறை இது “போலியான, தவறான” செய்தி என ஒரு அறிக்கை வெளியிட்டது. இந்தச் செய்திக்கு கண்டனமும் தெரிவித்திருந்தது.

மார்ச் கடைசி வாரத்தில் இருந்து ஏப்ரல் வரை, ரிபப்ளிக் டிவியின் முதன்மை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி ஒவ்வொரு நாளும் உச்சஸ்தாயில் தப்லீக் ஜமாஅத்திற்கு எதிராக கத்திக் கொண்டிருந்தார். நாளின் முக்கியமான நேரத்தில், ஒரு மணி நேரம் நீண்ட இந்த நிகழ்ச்சிகள் போலியாக, பாரபட்சமானவையாக, உண்மை என நிரூபிக்க எந்த கள சாட்சியமும் இல்லாதவையாக இருந்தன.

ஒரு நிகழ்ச்சியில், “எப்படி ஒரு குழு எல்லாரையும் நெருக்கடிக்கு தள்ளலாம்” என கேள்வி எழுப்பினார். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க நரேந்திர மோடி அரசு எடுக்கும் முயற்சிகளை எல்லாம் தோற்கடிக்க தப்லீக் ஜமாஅத் குழுவினர் திட்டம் போட்டிருக்கிறார்கள் என்று சொன்னார். உலகம் முழுக்க இருக்கும் பல்வேறு இஸ்லாமிய மதகுருக்களும், இஸ்லாமிய அமைப்புகளும் தான் இந்தியாவில் வைரஸை பரப்ப இப்படி திட்டம் போட்டிருக்கிறார்கள் என்றும் சொல்லியிருந்தார்.

வேறு பல பிராந்திய ஊடக நிறுவனங்களும் இனவாதத்தை தூண்டும் படி வெறுப்பை பிரச்சாரம் செய்து கொண்டிருந்தன. தெற்கில், கன்னட ஊடகம் கொரோனா வைரஸை ‘தப்லீக் வைரஸ்’ என்று பெயரிட்டு இனவாத ஊடகவியலை வழி நடத்திச் சென்றது.

இந்தி ஊடகம் போலவே, கன்னட ஊடகங்களும் தப்லீக் ஜமாஅத் கூட்டத்தை பற்றிய செய்திகளில் ‘சைத்தான்’, ‘கொரொனா கிரிமினல்கள்’ மற்றும் ‘கொரொனா ஜிஹாத்’ போன்ற வார்த்தைகளை எல்லாம் பயன்படுத்தின.

ஜூன் மாதம் வரை இப்படி தப்லீக் ஜமாஅத்தை தாக்குவது நடந்தது. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலைக்கு பிறகு, ஊடக நிறுவனங்கள் அதில் கவனம் செலுத்தத் தொடங்கின.

‘வெறுப்பிற்கான ஊதியம் : இருண்ட சமயத்தில் ஊடகவியல்’ (The Wages of Hate: Journalism in Dark Times) எனும் ஆய்வில், கன்னட ஊடகங்கள் போலி செய்திகளை ஒளிபரப்பு செய்தது மட்டுமில்லாமல், இனவாத உணர்ச்சிகளை தூண்டும்படியான படங்களையும், வார்த்தைகளையும், அரசியல்வாதிகளின் இனவாத பேச்சுக்களையும் தொடர்ந்து ஒளிபரப்பியது தெரிய வந்திருக்கிறது.

அந்த ஆய்வில் “தப்லீக் ஜமாஅத் சமயத்தில் இஸ்லாமியர்கள் எனும் ஒரு சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்ச்சி வெளிப்பட்டது; இதன் தாக்கமாக நம் கண் முன்னே, இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையும் அதிகரித்ததும், இஸ்லாமியர்கள் சமூக/பொருளாதார தளங்களில் புறக்கணிக்கப்பட்டதையும் பார்க்க முடிந்தது. இந்த வெறுப்பு சில சமயங்களில் இனப்படுகொலையை தூண்டுவதாகவும், இஸ்லாமியர்களை இரண்டாம் தர குடிமக்களாக குறைக்க வேண்டும் என்பதாகவும் இருந்தது”.

இந்த ஆய்வு செய்தி தொலைக்காட்சிகள் வெளியிட்ட தொகுப்புகளை பகுத்தறிந்து இயற்றப்பட்டது. இந்த ஆய்வு, உச்ச நீதிமன்றத்தில் ஜமியத் உலாமா-ஐ-ஹிந்த் அளித்த மனுவிற்கு ஆதரவளிப்பதாகவே இருக்கிறது. இதனால், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகமோ, “மனுதாரை சில கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்து ஊடகம் இனவாதத்தை தூண்டுபடி இயங்கியதாக சொல்கிறார்” என குற்றம் சாட்டியிருக்கிறது.

அதே சமயம், எந்த டிவி விவாதங்களும், செய்தி தொகுப்புகளும் ஆதாரங்களோடு நடத்தப்படவில்லை. தொலைக்காட்சி ஸ்டுடியோவில் உற்பத்தி செய்யப்பட்டு, உலகம் முழுதும் இருக்கும் மக்களுக்கு கொடுக்கப்பட்டது.

ஊடகம் மட்டுமா?

மத்திய உள்துறை அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் கூட கொரோனா பரவுவதற்கு தப்லீக் அமைப்பு தான் காரணம் என தொடர்ந்து குற்றம் சாட்டிக் கொண்டே இருந்தனர், செப்டம்பர் 21 அன்று, மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷான் ரெட்டி, பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு, “ தில்லி போலீசார் தெரிவித்தது போல, கொரோனா பரவலை தடுக்க பல்வேறு அதிகாரிகளின் ஆணைகளையும், விதிகளையும் மீறி, ஒரு அடைக்கப்பட்ட வளாகத்திற்குள் பெரிய மக்கள் திரள் கூடியது; சமூக இடைவெளி கடைபிடிக்கவில்லை, முகக்கவசங்களோ, சானிடைசர்களோ வைத்திருக்கவில்லை. மக்கள் மத்தியில் கொரொனா வைரஸ் பரவ இதுவும் காரணம்” என்றார்.

இது போலவே ஏப்ரல் மாதத்தில், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை செயலாளரான லவ் அகர்வால், கொரோனா வைரஸ் பரவலுக்கு ஜமாஅத் சிறப்பு காரணம் என்றார். நாடு முழுவதும் இருந்த 14,378 கொரோனா தொற்று நோய்களில், 4291 டெல்லியின் நிசாமுதீன் பகுதியில் இருக்கும் தப்லீக் அமைப்போடு தொடர்புடையவர்கள் என்றார்.

இப்படி ஒரு சமூகத்தை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வது, “ எந்த ஒரு சமூகத்தையும், பகுதியையும் கொரோனா பரவலுக்கு காரணமாக சொல்லக் கூடாது” என அதே அமைச்சகத்தின் ஏப்ரல் 8 விதிமுறையை மீறுவது ஆகும்.

உலக சுகாதார அமைப்பு மக்கள்தொகையின் எந்தவொரு பகுதியினருக்கும் களங்கத்தை ஏற்படுத்தக் கூடாது என அரசுகளுக்கும், ஊடகங்களுக்கும் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே தான் இருந்தது. “ கொரோனா போன்ற ஒரு பரவக்கூடிய நோயை ஒரு குறிப்பிட்ட மக்கள்தொகையோடு தொடர்புபடுத்தும் போது களங்கம் ஏற்படுகிறது” என்றொரு ஆலோசனை அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், களங்கம் என்றால் “கொரோனா உடன் தொடர்புபடுத்துவதனால் வேற்றுமைபடுத்தப்படுவதும், விலக்கப்படுவதும், முத்திரைகள் குத்தப்படுவதும், சமுதாய நிலையை இழப்பதும் தான்” என விளக்கியிருந்தது.

இந்தியாவிலோ, சில அரசியல் தலைவர்களும் இனவாத வெறுப்பை பரப்புவதில் பங்காக இருந்தார்கள்.

தப்லீக் ஜமாஅத் கொரோனா வைரஸை பரப்பியதற்கு கண்டனம் தெரிவித்து உத்திர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் ஒரு அறிக்கை விடுத்திருந்தார்.

தனிமைப்படுத்தப்பட்ட ஜமாஅத் உறுப்பினர்கள் விதிகளை மீறினார்கள், செவிலியர்களை துன்புறுத்தினார்கள் என செய்திகள் வெளியானதும், “ இவர்கள் சட்டத்தை பின்பற்றவும் மாட்டார்கள், அரசு ஆணைகளை ஏற்றுக் கொள்ளவும் மாட்டார்கள். பெண் சுகாதார ஊழியர்களுக்கு எதிராக இவர்கள் செய்திருப்பது பெரிய குற்றம். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்வோம். இவர்களை விடப் போவதில்லை”. முதல்வரின் பொதுமைப்படுத்தும் தொனியை கவனிக்க வேண்டியது முக்கியம்.

கன்னட செய்தி சேனலான சுவர்ணா டிவிக்கு பேட்டியளித்த பாஜக பாரளுமன்ற உறுப்பினர் ஷோபா கரண்ட்லஜே தப்லீக் ஜமாஅத் உறுப்பினர்கள் ‘கொரொனா ஜிஹாத்தில்’ ஈடுபட்டிருப்பதாக சொன்னார். வேறொரு ஊடக அறிக்கையில் பாஜக பாராளுமன்ற உறுப்பினர் அனந்த் குமார் வேகமாக பரவும் கொடிய கொரோனாவை இஸ்லாமோடு ஒப்பிட்டு பேசினார். இந்த குற்றச்சாட்டுகள் செய்திகளாக வெளியிடப்பட்டன. இவற்றுக்கு எதிராக பதில் சொல்ல எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.

“ஒன்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள். நான் எல்லோரிடமும் வெளிப்படையாக சொல்கிறேன். மியான்களிடம் (இஸ்லாமியர்கள்) இருந்து காய்கறிகள் வாங்காதீர்கள்” என உத்தரபிரதேசத்தின் தியோரியா நகரை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் திவாரி ஒரு அலைபேசி வீடியோவில் சொன்னது வெளியானது. இது பல செய்தி சேனல்களிலும், யூட்யூப் சேனல்களிலும் தொடர்ந்து வெளியிடப்பட்டுக் கொண்டிருந்ததே தவிர, இதை கண்டித்து எந்த செய்தித் தொகுப்பும் வரவில்லை.

ஆனால் அரசாங்கமோ இனவாத அச்சம் வெகு சில பொழுதுகளில் மட்டும் தான் நிலவியது என உச்ச நீதிமன்றம் முன் சொல்லியிருக்கிறது.

இஸ்லாமியர்களை வேற்றுமைபடுத்தும் குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக டெல்லியில் பிப்ரவரி மாதம் நடந்த போராட்டங்களை தொடர்ந்து, இந்தியாவின் இனவாத தவறுகளை அப்பட்டமாக்கியிருக்கிறது , ஜமாஅத்திற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள்.

தினசரி செய்தி ஒன்றை இனவாத பிரச்சாரமாக்கி, அதோடு பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் சொன்ன போலிச் செய்திகளை வைத்தது, சட்ட நிறுவனங்கள் தப்லீக் ஜமாஅத் அமைப்பினர்கள் மீது ஒட்டுமொத்தமாக வழக்கு பதிய காரணமாக இருந்தது. ஏறத்தாழ அனைத்து மாநிலங்களிலும், உள்ளூர் மற்றும் வெளியூர் வருகையாளர்கள் மீது வைரஸை பரப்பியதற்காக வழக்கு பதியப்பட்டது. மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில், ஜமாஅத் உறுப்பினர்கள் மீது, “கொலை முயற்சி” போன்ற ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த இனவாத ஊடகவியல் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல்களும் நடத்தபட்டன. வடமேற்கு தில்லியில், மெஹ்மூப் அலி எனும் 22 வயதான இஸ்லாமிய இளைஞர் கொரோனா வைரஸை பரப்புவதாக தாக்கப்பட்டார்.

செப்டம்பர் மாதம், மஹாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில், தப்லீக் ஜமாஅத் உறுப்பினர் தாக்கப்பட்டார்கள். சுஹைல் தம்போலி, அஸ்லாம் அதெர், சய்யத் லயெக் மற்றும் நிசாமுதீன் க்வாசி ஆகிய நால்வர் தரூரில் இருந்து அம்பஜோகாய் எனும் கிராமத்திற்கு பயணித்துக் கொண்டிருந்த போது, ஹொல் எனும் கிராமத்தில் ஆறு பேர் குழு ஒன்று அவர்களை தாக்கி,பழுதாகி இருந்த அவர்கள் காரையும் உடைத்தது. தாக்குதலில் தம்போலி நினைவிழந்தார். அவரையும் அவர் நண்பர்களையும் கொல்வதற்காகவே தாக்குதல் நடந்ததாக பிறகு ஊடகங்களிடம் தெரிவித்தார். நாற்பது நிமிடங்கள் இழிவாக பேசி, அடித்ததாக தம்போலி கூறினார்.

இவற்றை கடந்து, நிறைய இடங்களில் இஸ்லாமியர்கள் உணவு விற்க தடை செய்யப்பட்டார்கள், அடிக்கடி தாக்கப்பட்டார்கள். கொரொனா வைரஸ் பரிசோதனை செய்து கொண்டால் மட்டுமே மருத்துவமனையில் அனுமதி என மீரட்டில் இருக்கும் ஒரு புற்றுநோய் மருத்துவமனை இஸ்லாமியர்களுக்கு அனுமதி மறுத்திருக்கிறது. பிறகு, ஊடகங்கள் கொடுத்த அழுத்தத்தால், மருத்துவமனை மன்னிப்பு கேட்டது. பெங்களூரில் மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்கிக் கொண்டிருந்த இஸ்லாமிய தன்னார்வலர்களை க்ரிக்கெட் பேட்கள் கொண்டு தாக்கியிருக்கிறார்கள்.

முன்னோடியான தமிழ்நாடோ, புது தில்லியில் நிசாமுதின் மர்கஸில் இருந்துவிட்டு மாநிலத்தின் மற்ற பகுதிகளுக்கு பயணித்த 129 வெளிநாட்டினருக்கு காவல் முகாம் ஒன்றை அமைத்தது. இது தகவல்களையோ சாட்சிகளையோ வைத்து எடுக்கப்பட்ட முடிவுகளாக அல்லாமல், நாட்டில் நிலவிய பொதுக்கருத்தை வைத்து எடுக்கப்பட்ட முடிவாகவே இருந்தது. நாட்கள் போகப் போக அத்தனை பேரும் விடுவிக்கப்பட்டனர்.

சில விசாரணை மற்றும் உயர் நீதிமன்றங்கள், எந்த அடிப்படையும் இல்லாத புகார்களை வைத்து ஒரு சமூகத்தை தாக்கியதற்கும், இந்த சூழலை தவறாக கையாண்டதற்காக அரசை விமர்சித்திருக்கின்றன. மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி டி.வி.நலவாடே அச்சு ஊடகமும், மின் ஊடகமும் தில்லியில் இருக்கும் மர்கஸுக்கு வந்த வெளிநாட்டினருக்கு எதிராக பிரச்சாரம் செய்தது என கடுமையான விமர்சித்து எழுதியிருந்தார்.
“இந்தியாவில் கொரோனா பரவியதற்கு இந்த வெளிநாட்டினர் தான் காரணம் என ஒரு பிம்பத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன” என்றார்.

நாட்டில் ஒரு நோய்த்தொற்று பரவுவதற்கு ஜமாஅத் உறுப்பினர்களை பலிகடா ஆக்கியதாக அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டினார். “இனி, இதுவரை செய்த சேதங்களை எல்லாம் சரி செய்ய வேண்டும், வெளிநாட்டினருக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை எல்லாம் எண்ணி சம்பந்தபட்டவர்கள் வருந்த வேண்டும்” என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார்.

35 நாடுகளை சேர்ந்த – கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் உள்ளடங்கிய- 3500 வெளிநாட்டினர், சில நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டு, ஒரு புதிய பகை நாட்டில் தங்களை தாங்களே காத்துக் கொள்ள வேண்டும் என தனித்து விடப்பட்ட பிறகு தான் இந்த நீதிமன்ற ஆணைகள் வரத் தொடங்கின.

தி வயர் இணையதளத்தில் வெளியான செய்தியின் மொழியாக்கம்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்