Aran Sei

ஆந்திராவில், பக்தருக்கு ஆபாசப் படம் அனுப்பிய பக்தி சேனல் ஊழியர்

ஸ்ரீ வெங்கடேஷ்வரா பக்தி சேனலில் இருந்து பக்தருக்கு ஆபாச படச் சுட்டி (porn website link) அனுப்பபட்டுள்ளதாக தி இந்து  செய்தி வெளியிட்டுள்ளது.

திருப்பதி திருமலை தேவஸ்தானம், திருப்பதியில் நடக்கும் சிறப்பு பூஜைகளின் நேரலைகள், பக்தி நிகழ்ச்சிகள் ஆகியவற்றை 24 மணி நேரமும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா பக்தி சேனல்(எஸ்விபிசி)  மூலம் ஒளிபரப்பிக் கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த பக்தரான வெங்கட கிருஷ்ணா ”சதமணம் பாவதி“  நிகழ்ச்சியின் தகவல் குறித்து எஸ்விபிசியிடம் கேட்டுள்ளார்.

சதமணம் பாவதி நிகழ்ச்சியில் பக்தர்களின் புகைபடம் அவர்களுடைய பிறந்த நாளின் போது தொலைகாட்சியில் ஒளிபரப்பபடும். அதற்கு திருப்பதி திருமலை தேவஸ்தான பூசாரிகள் ஆசிகள் வழங்குவர்.   இந்த நிகழ்ச்சியில் ”புகைபடத்தை அனுப்புவதற்கான சுட்டியை வெங்கட கிருஷ்ணா கேட்டதற்கு ஆபாசப் படச் சூட்டியை” அனுப்பியுள்ளார் எஸ்விபிசியின் ஊழியர்.

இது குறித்து திருப்பதி திருமலை தேவஸ்தானத்திடம் புகாரளித்துள்ளார் வெங்கட கிருஷ்ணன். திருப்பதி திருமலை தேவஸ்தானத்தின் உள் கமிட்டி கூட்டப்பட்டு இதன் விசாரனை நடத்தப்படும் என உறுதியளித்துள்ளார் தேவஸ்தானத்தின் தலைவர் சுபா ரெட்டி.

இந்தச் சம்பவத்தை விசாரித்த லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் சைபர் கிரைம் எஸ்விபிசியின் நிர்வாக அலுவலகத்தில் உள்ள கணிணிகள், கேமராக்கள், ஹார்ட் டிஸ்க் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளது.

எஸ்விபிசியில் உள்ள ஊழியர்கள் பலர் வேலை நேரத்திலேயே ஆபாசமான படங்களைப் பார்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினர் கூறியுள்ளனர். பக்தருக்கு ஆபாசப்படச்சுட்டியை அனுப்பியரை உடனடியாக வேலையிலிருந்து நீக்கியுள்ளது தேவஸ்தானம்.

”திருப்பதி கோயிலின் புனிதத்தன்மையை” கெடுத்துவிட்டதாக கூறி இந்தச் சம்பவத்தை கடுமையாக எதிர்த்துள்ளது தெலுங்கு தேசம் கட்சி. திருப்பதியின் தெலுங்கு தேச மக்களவை உறுப்பினர் ஜி.நரசிம்ம யாதவ் தலைமையில் எஸ்விபிசி அலுவலகத்திற்கு எதிராக கண்டன போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

“ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாளின் உண்டியிலில் இருந்து சம்பளம் பெறுபவர்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும், தகுதியான நபர்களை இதுபோன்ற வேலையில் நியமனம் செய்ய வேண்டும்” என டிடிடியின் முன்னாள் தலைவர் ஆர்.சி.முன்னிகிருஷ்ணா கூறியுள்ளார்.

தெலுங்கு தேசத்தின் துணை தலைவர் பரச ரத்னம் இந்தச் சம்பவத்தை சிபி-சிஐடி விசாரனைக்கு மாற்ற வேண்டும் என கூறியுள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்