Aran Sei

எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி நிறுத்தி வைப்பு – தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

’எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய  அனுமதியை நிறுத்திவைத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

எண்ணூர் அனல் மின் நிலையத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் என்பவர் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில்  மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “இத்திட்டத்திற்கு பொதுமக்கள் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தாமல் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியிருந்தது சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு அறிவிக்கை 2006ன் உட்பிரிவு 7(III)ற்கு எதிரானதாகும் என்பதால் இந்தத் திட்டத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை ரத்து செய்ய வேண்டும்” என்றும் கோரியிருந்தார்.

இந்த வழக்கில் இறுதி தீர்ப்பானது  கடந்த 15ஆம் தேதி தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்துறை உறுப்பினர் ராமகிருஷ்ணன் மற்றும் நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் கொண்ட அமர்வால் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கியுள்ள தீர்ப்பில்,  “மத்திய சுற்றுச்சூழல்துறை வழங்கிய சுற்றுச்சூழல் அனுமதி ஆறு மாதத்திற்கு நிறுத்தி வைக்கப்படுகிறது. இரண்டு மாதத்திற்குள் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்தி, அதன் அடிப்படையில் மத்திய அரசிடம் புதிய அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் 6 மாதத்திற்குள் முடிக்க வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் தமிழ்நாடு மின்சாரத் துறை திட்டத்தின் கட்டுமான பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது ஆனால், மின்சார உற்பத்தியைத் துவக்குவதற்கான அனுமதி கிடையாது” என்றும் உத்தரவிட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்