Aran Sei

விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை – பிரச்சனையை தீர்க்க தனி குழுவை அமைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

மூன்று விவசாய சட்டங்களுக்கு இடைக்கால தடை விதித்தும், விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்க்க தனி குழுவை அமைத்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

த்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களைத் திரும்ப பெறக் கோரி கடந்த 47 நாட்களாக, டெல்லி எல்லையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘விவசாயச் சட்டங்களை நீங்கள் நிறுத்தி வைக்கறீர்களா? அல்லது நாங்கள் செய்யவா?’ – உச்ச நீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்வி

இந்நிலையில்,  அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக இருக்கும் மூன்று விவசாயச் சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா, ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மனோஜ் குமார் ஜா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களும், போராடும் விவசாயிகளை அப்புறப்படுத்த கோரி தாக்கல் செய்த பல்வேறு மனுக்களும்  உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன், இன்று (ஜனவரி 12) இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்துள்ளது.

விசாரனைக்கு பின் உத்தரவு வழங்கிய தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “இந்திய அரசியலமைப்பு சட்டங்கள் மீது எங்களுக்கு அக்கறை உள்ளது. மேலும், இந்த  போராட்டங்களால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை பற்றியும் அவர்களின் சொத்துக்கள் பாதுகாக்கப்படுவது பற்றியும் நாங்கள் கவலை கொள்கிறோம். எங்களிடம் உள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி இந்த விவசாய பிரச்சினையைத் தீர்க்க முயற்சிக்கிறோம். அந்த வகையில், எங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களில் ஒன்று, இந்தச்  சட்டத்தை அமல்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிப்பது. மேலும், ஒரு குழுவை உருவாக்குவது தான். இதை நாங்கள் இப்போது செய்கிறோம்.” என்று தெரிவித்ததாக ஏஎன்ஐ செய்தி வெளியிட்டுள்ளது.

விவசாயிகள் போராட்டம் : பிரச்சனைக்கு காரணமே நீங்கள் தானா ? – உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு கேள்வி

மேலும், “விவசாய சட்டங்கள் தொடர்பாக எங்களுக்கு தெளிவான தகவல்கள் வேண்டும். அதனால்தான் நாங்கள் இந்தக் குழுவை உருவாக்குகிறோம். போராடும் விவசாயிகள் இந்த குழுவுக்கு வர மாட்டார்கள் என்ற வாதங்களை எல்லாம் நாங்கள் கேட்க விரும்பவில்லை. நாங்கள் இந்தப் பிரச்சனையை தீர்க்க பார்க்கிறோம். அதற்கு குழுவை உருவாக்குகிறோம்.  அதேநேரம், இந்தப் பிரச்சனையை தீர்ப்பதற்காக காலவரையின்றி போராடுவோம் என்று நீங்கள் (விவசாயிகள்) கூறினால், தாராளமாக போராடுங்கள்.  இந்தக் குழு உருவாக்கப்பட்டதே, இந்த வழக்கு தொடர்பான நீதித்துறையின் செயல்பாட்டின் ஒரு அங்கம்தான். நாங்கள் சட்டங்களுக்கு இடைக்கால தடை விதிக்கிறோம். ஆனால் நிரந்தரமாக ரத்து செய்ய முடியாது.” என்று நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.

விவசாயிகளின் போராட்டம் கொரோனா மையமாக மாறிவிடுமா? – உச்ச நீதிமன்றம் கவலை

“இந்தக் குழு நமக்காக உருவாக்கப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க நினைப்பவர்கள் யார் வேண்டுமானாலும் (போராடும் விவசாயிகள்) இந்த குழுவின் முன் வந்து உரையாடலாம். இது உத்தரவுகளையோ தண்டனைகளையோ உங்களுக்கு வழங்காது. மாறாக,  அது எங்களுக்கு(உச்ச நீதிமன்றத்திற்கு) இந்த விவசாய சட்ட பிரச்சனையைப் பற்றி ஒரு அறிக்கையை மட்டுமே சமர்ப்பிக்கும்.” என்று தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே உறுதியளித்ததாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

மனுதாரர்களில் ஒருவராக வழக்கறிஞர் எம்.எல்.சர்மா, தன் வாதத்தில், “தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பலர் வந்ததாகவும், ஆனால் இந்தப் பிரச்சனையின்  முக்கிய நபரான பிரதமர் மோடி மட்டும் பேச்சு வார்த்தைக்கு இன்னும் வரவில்லை என்று விவசாயிகள் கூறிகிறார்கள்.” என்று சுட்டிக்காட்டியதற்கு பதிலளிக்கும் விதமாக தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே,“விவசாயிகளுடன் பேச்சு வார்த்தைக்கு செல்லுமாறு பிரதமருக்கு நாங்கள் உத்தரவிட முடியாது. ஏனென்றால், இந்த வழக்கில் அவர் ஒரு கட்சிக்காரர் இல்லை.” என்று குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்