Aran Sei

கொண்ட கொள்கையை வாழ்வாக்கியவர் – தமுஎகச துணைச் செயலாளர் கருப்பு கருணா மறைவு

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில துணைச் செயலாளர் கருப்பு கருணா மாரடைப்பால் இன்று காலமானார்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இவர் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கம்ம்யூனிஸ்ட் இயக்கத்தில் இயங்கி வந்தவர். தொண்ணூறுகளில் இடதுசாரிகள் நடத்திய கலைவிழாவிற்கு பெரும் பங்காற்றியவர். கலை இலக்கியத்தில் மட்டுமல்லாது போராட்டக் களத்திலும் மக்களோடு இருந்தவர். அறிவொளி இயக்கம், மார்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சியின் ஊழியர், எழுத்தாளர்கள் சங்கம் என்று பல்வேறு களங்களில் பணிபுரிந்தவர். அவரின் மறைவிற்கு தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூக செயல்பாட்டாளர்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

மதுரை நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன், கருப்பு கருணாவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

“நம்புவதற்கோ, ஏற்பதற்கோ முடியவில்லை எனதன்புத் தோழரே. நடுங்கித் தடுமாறும் உள்ளத்தை திடப்படுத்திக் கொண்டு சொல்கிறேன். செவ்வணக்கம்” என்று எழுத்தாளர் அழகியப்பெரியவன் தெரிவித்துள்ளார்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் பொதுச்செயலாளர் சாமுவேல் ராஜ் ” எத்தன ஊர்ல மேடை போட்டு, எத்தன ஊர்ல அரங்கத்த வடிவமைத்து, எத்தன அறிவொளி கலைக்குழுக்கள் அமைத்து உயிர்ப்போடு அடையாளப் படுத்திய குறிப்பிடத்தக்க திறமையாளர் அல்லவா நீங்க! பின்னாளில் சமூக வலைதளங்கள் வந்தவுடன் கருப்பு கருணா என முத்திரை பதித்தவங்க நீங்க! கம்யூனிஸ்ட் இயக்கம் ஒரு நல்ல பிரச்சாகரனை இழந்துதுள்ளது. உங்களது பங்களிப்பு சிறப்பானது கருணா! என்றும் மறவோம்”  என்று தெரிவித்துள்ளார்.

“என் முதல் நூலான ‘கோவேறு கழுதைகள்’ வந்த போதும் நீங்கள்தான் விமர்சனக் கூட்டம் நடத்த துணை இருந்தீர். அந்நூலின் 25 ஆம் ஆண்டு ஒட்டி நீங்கள்தான் கூட்டம் ஏற்பாடு செய்தீர் என்றும் கொண்ட கொள்கையில் ஒரு நூல் மாறதவர்” என்று எழுத்தாளர் இமையம் தன் இரங்கல் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

“கொண்ட கொள்கையே வாழ்வாய் கிடந்த நீங்கள், நிறைய அளித்து விட்டுச் சென்றிருக்கிறீர்கள். போய் வாருங்கள் அண்ணா” என்று எழுத்தாளர் தமிழ்ப்பிரபா தெரிவித்துள்ளார்

எழுத்தாளர்கள் ச.தமிழ்ச்செல்வன், சுகிர்தராணி, ஆதவன் தீட்சண்யா, ஸ்டாலின் சரவணன், இரா முருகவேள் , ராஜன் குறை, அ. மார்க்ஸ், கவிஞர் வெய்யில், சுபாகுணராஜன், நாடகவியலாளர்கள் பிரளயன், கோபி, மொழிபெயர்ப்பாளர் ஜி.குப்புசாமி,  திரைப்பட இயக்குனர் அதியன் ஆதிரை, பாரதி புத்தகாலய பதிப்பாளர் சிராஜுதீன் உள்ளிட்ட பலர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் (தமுஎகச) மாநில துணைச் செயலாளர் கருப்பு கருணா வின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்