Aran Sei

`சூரப்பா, 280 கோடி ரூபாய் ஊழல் செய்தாரா’ – விசாரணை தொடக்கம்

credits : the hindu

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளில் விரிவான விசாரணை நடத்தப்படும் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

கடந்த பிப்ரவரி மாதம் அண்ணா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நியமனத்தில் 200 கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடைபெற்றுள்ளதாக முதலமைச்சரின் தனிப் பிரிவுக்குத் திருச்சியைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் புகாரளித்தார்.

“அண்ணா பல்கலைக்கழக வளாகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை நியமிக்க ஒவ்வொருவரிடமும் 13 முதல் 15 லட்சம் ரூபாய் வசூலித்துள்ளனர்” என்று சூரப்பா மீதும் அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லுாரிகளின் நிர்வாகப் பிரிவு துணை இயக்குநர் சக்திநாதன் மீதும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

“சூரப்பாவுக்கும் அதிமுகவுக்கும் இடையில் நடக்கும் பேரம் என்ன?” – மு.க.ஸ்டாலின் கேள்வி

“அண்ணா பல்கலைக்கழகத்தைப் பாதுகாக்க வேண்டும்” (save anna university) என்ற அமைப்பைச் சார்ந்த சி.வரதராஜனும் செல்லதுரையும், துணை வேந்தர் சூரப்பா முறைகேடு செய்துள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

ஆர்.ஆதிகேசவன் சூரப்பாவின் மகளை அண்ணா பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தியது குறித்துப் புகாரளித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடு, மகளைப் பணியில் சேர்த்தது உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் தொடர்ந்து வந்த நிலையில் சூரப்பாவுக்கு எதிராக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழுவை அமைத்துள்ளது தமிழக அரசு.

சூரப்பாவின் பதவிக்காலத்தில் கல்வி மற்றும் நிர்வாகத் தரப்பில் செய்யப்பட்ட தற்காலிக நியமனங்கள் குறித்தும் கட்டணம், உதவி, நன்கொடைகள் மற்றும் மானியங்களில் பல்கலைக்கழகத்தால் பெறப்பட்ட தொகைகள் குறித்தும் நீதிபதி விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரப்பா மீதான புகார்களை விசாரித்து, மூன்று மாதங்களில் அறிக்கை அளிக்க வேண்டும் என விசாரணைக் குழுவுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. குழு தரும் விசாரணை அறிக்கை அடிப்படையில் சூரப்பா மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“இதுபோன்ற குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க பொருத்தமான வழிமுறைகளை அந்தக் குழு பரிந்துரைக்கும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள சூரப்பா, தான் ஒரு பைசா கூட லஞ்சம் வாங்கவில்லை எனவும் விசாரணையை எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவர் மீது குற்றம்சாட்டி புகார் மனு அளித்தவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்துவோம் என நீதிபதி கலையரசன் தெரிவித்துள்ளார்.

அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் சூரப்பா மீதான குற்றச்சாட்டுகளில் விரிவாக விசாரணை நடத்தப்படும் என்றும் அவருடன் இணைந்து முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள நபர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டு அவர்களுக்குச் சம்மன் அனுப்பப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

280 கோடி ரூபாய் வரை நிதி மோசடிப் புகார் என்பதால் நிதி அலுவலர்கள், ஆடிட்டர்கள் துணையுடன் விசாரணை நடத்தத் திட்டமிட்டு இருப்பதாக நீதிபதி கலையரசன் கூறியுள்ளார்.

சூரப்பா உடனடியாகப் பதவி விலகக் கோரி திராவிடர் கழகத் தலைவர் கீ.வீரமணி, எதிர்க் கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொல்.திருமாவளவன் ஆகியோர் வலியுறுத்தியுள்ளனர்.

சூரப்பாவை விசாரிக்க தமிழக அரசு அமைத்துள்ள விசாரணைக் குழுவைக் கலைக்கக் கோரி கையெழுத்துப் போராட்டமும் ஒருபுறம் நடைபெற்று வருகிறது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்