Aran Sei

வரவர ராவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்கவும் – உச்சநீதி மன்றம்

credits : the newindian express

ல்கர் பரிஷத் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள வரவர ராவின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரிக்கும்படி உச்ச நீதிமன்றம் மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருக்கிறது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு மனுவை விரைவில் விசாரிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதாக தி வயர் இணையதளத்தில் செய்தி வெளியாகியிருக்கிறது.

81 வயதான வரவர ராவ், எல்கர் பரிஷத் வழக்கில் 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். 10,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மற்றும் தேசிய விசாரணைச் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றங்கள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் சமூகச் செயல்பாட்டாளர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், பேராசிரியர்கள், கலைஞர்கள் உட்பட 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

‘மனித கௌரவத்தைச் சீர்குலைக்கும் செயல்’ – பெண்ட்யலா ஹேமலதா

வரவர ராவின் மனைவி (பெண்ட்யலா ஹேமலதா) சார்பாக ஆஜராகிய வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “வரவர ராவ் பல்வேறு உடல்நிலை கோளாறுகளால் அவதிப்படுகிறார், அவரால் சுயமான முடிவுகள் கூட எடுக்க முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

மேலும், “தீவிரமான இதய நோய்களை கொண்டுள்ள அவர் சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் முழுமையாக குணம் அடையாமலே மீண்டும்  சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்” என தெரிவித்துள்ளார்.

மேலும், “விசாரணையில் இருக்கும் கைதிகளின் உடல்நல உரிமையை நிலைநாட்ட வேண்டியது நீதிமன்றத்தின் கடமை. அவர்கள் வாழ்வதற்கான் உரிமை மற்றும் அவர்களுக்கான மரியாதை இங்கு மறுக்கப்பட்டிருக்கிறது. எனவே விசாரணையில் இருக்கும் கைதிகளின் மருத்துவ உரிமைகளை பாதுகாக்க வழிவகை செய்ய வேண்டும்” என இந்திரா ஜெய்சிங் வாதாடியதாக லைவ் லா செய்தி வெளியிட்டுள்ளனர்..

இதை விசாரித்து மூன்று  நீதிபதிகள் (யு.யு.லலித், வினித் சரண் மற்றும் எஸ்.ரவிந்திர பாட்) அடங்கிய அமர்வு இது சிறைவாசியின் அடிப்படை மனித உரிமை மீறல் பற்றிய கேள்விகளை எழுப்புவதாக கூறியுள்ளனர்.

வரவர ராவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கை ஜுலை மாதம் தான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அவரது ஜாமீன்  மனு மும்பை உயர் நீதிமன்றத்தால் எப்பொழுது கடைசியாக விசாரிக்கப்பட்டது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர்.

‘தலித் மக்களுக்கான ஆயுதப்படை’ உருவாக்க முயற்சி – என்ஐஏ குற்றச்சாட்டு

இதற்கு பதிலளித்த ஜெய்சிங், “கடைசியாக ஆகஸ்ட் மாதத்திலும் செப்டம்பர் மாதத்திலும்  ஜாமீன் மனு விசாரிக்கப்பட்டதாகவும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகளில் ஒருவர் மேற்கொண்டு விசாரிப்பதில் ஈடுபாடு காட்டவில்லை” எனவும் தெரிவித்தார்.

மேலும் “பல முறை வேண்டுகோள் விடுத்தும் விசாரணை நடைபெறவில்லை எனவும்  அவருடைய உடல்நிலையில் உள்ள கோளாறுகள், நிலையற்ற மனநிலை, மருத்துவ அறிக்கைகள் முதலியவற்றை சமர்ப்பித்தும் செப்டம்பர் 17-ம் தேதிக்குப் பிறகு மனுவை விசாரிக்கவில்லை” என்று பதிலளித்தார்.

“இந்தக் காரணங்கள் அனைத்தும் நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்டதா” எனும் நீதிபதிகள் கேள்விக்கு, “முன் வைக்கப்பட்டது” என பதிலளித்தார் ஜெய்சிங்.

இந்த ஜாமீன் மனுவை விரைந்து விசாரிக்கும்படி மும்பை உயர் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞர் ஜெய்சிங் “காலம் கடந்து விட்டது” எனவும், “வரவர ராவின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் அவர் சிறையிலே கூட இறந்து போக நேரலாம்” எனவும் தெரிவித்திருந்தார்.

“ஒரு மாதத்துக்குப் பிறகும் மனு விசாரிக்கப்படாமல் இருப்பது நீதிமன்றத்தின் கவலைக்குரியது” என்று கூறிய நீதிபதிகள், “வரவர ராவை நானாவதி மருத்துவமனையிலிருந்து சிறைக்கு மாற்றியது ஏன்” என்று கேள்வி எழுப்பினர்.

“சிறையில் மரணம் ஏற்படுவதை தாங்கள் விரும்பவில்லை” எனக் கூறிய நீதிபதிகள், வர வர ராவுடைய ஜாமீன் மனுவை விரைந்து விசாரிப்பதற்கும்படி  மும்பை உயர் நீதிமன்றத்திற்கு உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்