மகாராஷ்ட்ரா மாநிலத்தில், மராட்டியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
மாநில அரசுகள் வழங்கும் இடஒதுக்கீடு 50 சதவீதத்தை மீறக் கூடாது என்கின்ற இந்திரா சஹானி வழக்கின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்சநீதிமன்றம் நிராகரித்திருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 1992 ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு, ”கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு 50 சதவீதத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். கிராமங்கள் மற்றும் தொலைதூர பகுதிகளில் வசிக்கும் மக்களை மைய நீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கான சில விதிவிலக்கான மற்றும் அசாதாரண சூழ்நிலைகளில் மட்டுமே 50 சதவீத விதியை தளர்த்த முடியும்” என்று உத்தரவிட்டது.
ஆனால், தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா உட்பட சில மாநிலங்கள், 60 சதவீதத்திற்கும் மேல் இடஒதுக்கீடு வழங்கும் சட்டங்களை நிறைவேற்றியுள்ளன.
இந்தச் சூழலில், கடந்த 2018 ஆம் ஆண்டு, நவம்பர் 30 ஆம் தேதி, மகாராஷ்ட்ரா அரசு, சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பின் தங்கியுள்ள மராட்டியர்களுக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 16 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கும் மராத்தா இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றியது.
இந்த சட்டத்தை எதிர்த்து, பலர் மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மராத்தா இடஒதுக்கீட்டை ரத்து செய்யவில்லை என்றாலும், இடஒதுக்கீட்டின் சதவீதத்தை குறைத்து கல்வியில் 12 சதவீதமும், வேலைவாய்ப்பில் 13 சதவீதமும் வழங்க வேண்டும் என உத்தரவிட்டது.
மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அதில் 1992 ஆம் ஆண்டு, இந்திர சஹானி வழக்கின் தீர்ப்பில் உறுதி செய்யப்பட்டுள்ள 50 சதவீத இடஒதுக்கீட்டை மீறி, மஹாராஷ்ட்ரா அரசு கூடுதலாக இடஒதுக்கீடு வழங்கிருப்பதாக கூறப்பட்டது.
மாற்றுப்பாலினத்தவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும்- பீகார் அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
இந்த வழக்கு நீதிபதிகள் அசோக் பூஷண், எல்.நாகேஷ்வர ராவ், எஸ்.அப்துல் நசீர், ஹேமந்த் குப்தா மற்றும் எஸ்.ரவீந்திர பாட் ஆகிய ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வால் விசாரிக்கப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மும்பை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
முன்னதாக, இந்த வழக்கில், மகாராஷ்ட்ரா தரப்பில், மராட்டிய சமூகத்துக்கு இடஒதுக்கீடு வழங்குவது சட்டவிரோதம் இல்லை எனவும் பீகார், ஜார்க்கண்ட், தமிழ்நாடு, கர்நாடகம், பஞ்சாப், ராஜஸ்தான், ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்கள் 50 சதவீதத்திற்கு அதிகமாக இடஒதுக்கீடு வழங்கி இருப்பதாகவும் அதை உச்ச நீதிமன்றம் தடை செய்யவில்லை எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.
பல மாநில அரசுகள் மராத்தா இடஒதுக்கீட்டை ஆதரித்தும், கடந்த 1992 ஆம் ஆண்டு, இந்திரா சஹானி வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அமர்வு அளித்த தீர்ப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
69% இடஒதுக்கீடு மீறலா?: என்ன நடக்கிறது தமிழக பல்கலைக்கழகங்களில்? – தமிழ் நாசர்
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட அமர்வு மராட்டிய சமூகம், சமுதாய ரீதியாகவும் கல்வி ரீதியாகவும் பின் தங்கிய நிலைமையில் இல்லை என்று கூறி, மராட்டியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை, ஒருமனதாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
மேலும், இந்திரா சஹானி வழக்கில் வழங்கப்பட்ட 50 சதவீத இடஒதுக்கீட்டை தளர்த்தி, மராட்டிய மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் அளவிற்கு, எந்த அசாதாரணமான அல்லது விதிவிலக்கான சூழல் நிலவவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.