2019ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு சார்பாக உருவாக்கப்பட்ட நில ஆர்ஜித சட்டம் சம்பந்தமாக இன்று உச்சநீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. நில ஆர்ஜித சட்டத்திற்கு எதிரான விவசாயிகளின் மனுக்கள் இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு ஒன்றிய அரசு நில ஆர்ஜித சட்டத்தை உருவாக்கும் போது விவசாய நிலங்களை அரசு திட்டங்களுக்காக கையகப்படுத்துவது கடைசி வாய்ப்பாக தான் இருக்க வேண்டும். அப்படி ஒருவேளை ஈடுபடும்போது அதற்கான கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்றும், உரிய இழப்பீடுகளை உடனுக்குடன் வழங்க வேண்டும் என்றும், போன்ற சரத்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதை அடிப்படையாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு ஒரு முக்கியமான சட்டத்தை உருவாக்கி இருந்தது. அதில், கருத்துக் கேட்புக் கூட்டம், 6 மாதத்திற்குள் இழப்பீடுகளை வழங்க வேண்டும் என்கிற சரத்துக்களை தமிழ்நாடு அரசு சேர்க்காமல் விட்டுவிட்டது.
தமிழ்நாடு அரசின் நில ஆர்ஜித சட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அந்தச் சட்டங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.
கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி
உயர்நீதி மன்றத்தின் தடைக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. அந்த மேல்முறையீட்டு மனுவின் விசாரணை நிலுவையில் இருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்ட 2015 ஆம் ஆண்டு நில ஆர்ஜித சட்டத்துக்கு உயிரூட்டும் நோக்கத்தில்தான் 2019 ஆண்டு நில ஆர்ஜித சட்டத்தை தமிழக அரசு கொண்டுவந்துள்ளது. எனவே, தமிழக அரசின் இந்த 2019 நில ஆர்ஜித சட்டம், விவசாய விளைநிலங்களைக் கையகப்படுத்த வழிவகை செய்துள்ளது.
2019ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டவரைவை எதிர்த்து விவசாயிகள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அம்மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று மனுக்களைத் தள்ளுபடி செய்துள்ளது. இதில் இருக்கக்கூடிய சந்தேகம் என்னவென்றால் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான சட்டங்கள் 2015ஆம் ஆண்டும் 2019 ஆம் ஆண்டும் முந்தைய அதிமுக அரசால் கொண்டுவரப்பட்டது. 2015 ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கூடிய நிலையில், விவசாயிகளுடைய மனு மட்டும் ஏன் ரத்து செய்யப்பட்டுள்ளது என்கிற கேள்வி எழுகிறது. ஒரே மாதிரியான சட்டம் இரண்டு இருக்கக்கூடிய நிலையில் ஒன்று ரத்து செய்யப்பட்டுள்ளது, ஒன்று நிலுவையில் உள்ளது. தொடர்ந்து சட்டத்தை பின்பற்றி நிலங்களை கையகப்படுத்தும் பணிகளை அரசால் மேற்கொள்ள முடியுமா என்ற கேள்வி எழுகிறது. மூன்றாவது 2019ஆம் ஆண்டு திமுக எதிர்க்கட்சியாக இருந்த திமுக சட்டத்தை கடுமையாக எதிர்த்தது. இன்று அவர்கள் தான் ஆட்சியில் இருக்கிறார்கள். எனவே உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று அந்த சட்டத்தை தொடர்ந்து கடைபிடிப்பார்களா அல்லது அந்த சட்டத்தை அவர்களுடைய அதிகாரத்தை பயன்படுத்தி திரும்பப் பெற போகிறார்களா என்கிற வினா எழுந்துள்ளது,
News source: ஊடகவியலாளர் நிரஞ்சன் குமார்
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.