Aran Sei

மரணப்படுக்கையில் இருக்கும் தாய் – மகனின் ஜாமீன் மனுவை விசாரிக்க காலம் தாழ்த்தும் உச்சநீதிமன்றம்

ரணப்படுக்கையில் இருக்கும் தன் தாயை சந்திக்க கோரி, பத்திரிகையாளர் சித்திக் காப்பான் தாக்கல் செய்துள்ள இடைக்கால ஜாமீன் மனு விசாரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லியில் உள்ள ஒரு மலையாள செய்தி இணையதளத்தில் செய்தியாளராக பணிபுரிந்து வந்த சித்திக் காப்பான், கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் 5-ம் தேதி. ஹத்ராஸ் பாலியல் வன்புணர்வு சம்பவத்தை பற்றி தகவல் சேகரிப்பதற்காக, உத்தர பிரதேச மாநிலத்துக்குச் சென்றார். அவரை ஹத்ராசுக்குள் நுழைய விடாமல் வழிமறித்த காவல்துறையினர், ”பொது அமைதிக்கு குந்தகம்” விளைவிப்பதாக கூறி அவரை கைது செய்தனர்.

அர்னாப் ஜாமீன் விவகாரம் – மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியது என்ன?

அவருடன் செய்தி சேகரிக்க சென்ற சக ஊழியர்களான அதிக் உர் ரஹ்மான், மசூத் அகமது, ஆலம் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். சித்திக்கினுடைய லேப்டாப், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

உத்தர பிரதேசத்தில் ஒரு பெரிய சதி திட்டத்தை அரங்கேற்ற, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பின்னணியில் சித்திக் வந்துள்ளதாக, முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்த மதுரா காவல்துறை, சித்திக் காப்பான் மீது தேசதுரோக சட்டத்தின் கீழும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் கீழும் (UAPA) வழக்குகளை பதிவு செய்தது.

சித்திக்கின் மனைவி ராய்ஹானாத் மற்றும் அவரது வயதான தாயாரைக் கூட சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு அவர் சிறைபடுத்தப்பட்டுள்ளதாக தி வயர் தெரிவிக்கிறது.

கேரள உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சித்திக் காப்பானை விடுவிக்க கோரி சட்ட போராட்டத்தை நடத்தி வந்தாலும் அவருக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

அர்னாப்புக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் – எதிர்ப்புகளுக்கிடையில் அவசர வழக்காக விசாரித்து உத்தரவு

இந்நிலையில் கடும் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு, மரணப் படுக்கையில் இருக்கும் சித்திக் காப்பானின் தாயார், தன் மகனைப் பார்ப்பதே அவரின் கடைசி ஆசை என கூறியுள்ளதாக தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதையடுத்து கடந்த ஜனவரி 29 ஆம் தேதி, சித்திக் காப்பானுக்கு இடைக்கால ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கேரளாவின் உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம் மனு தாக்கல் செய்தது. ஆனால் அந்த ஜாமீன் மனு, இன்னும் விசாரிக்கும் பட்டியலில் இணைக்கப்படாமல் இருக்கிறது என அவருடைய வழக்கறிஞர் தெரிவித்ததாக தி வயர் கூறுகின்றது.

அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனுவை உடனடியாக விசாரித்து ஜாமீன் வழங்கிய உச்ச நீதிமன்றம், சித்திக் காப்பானின் வழக்கை விசாரிக்க மறுப்பது ஏன் என காங்கிரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் உட்பட பலர் கேள்வியெழுப்பியுள்ளனர்.

தற்கொலைக்கு தூண்டிய குற்றச்சாட்டில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம், மும்பை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ரிபப்ளிக் தொலைகாட்சியின் மூத்த ஆசிரியர் அர்னாப் கோசாமி, உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை மறுநாளே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், அன்றைய தினமே அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்