கர்நாடக வேளாண் துறை அமைச்சர் பி.சி. பட்டீல், தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளைக் கோழைகளுடன் ஒப்பிட்டுள்ளதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது இந்தக் கருத்தை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.
கர்நாடகா, கோடகு மாவட்டத்தில் உள்ள பொன்னம்பேட்டையில் உரையாற்றிய படீல், “தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள் கோழைகள். மனைவியையும் குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள முடியாத ஒரு கோழை மட்டுமே தற்கொலை செய்துகொள்வான். நாம் கடலில் விழுந்தாலும், நீந்தி வெற்றிபெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவர்கள் இந்தக் கருத்துகளுக்காக அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
பொன்னம்பேட்டையின் மூங்கில் விவசாயிகளிடம் பேசிய பி.சி.பட்டீல், “விவசாய வணிகம் எவ்வளவு லாபகரமானது என்பதை உணராமல் சில ‘கோழைகள்’ தற்கொலை செய்து இறந்து விடுகிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
தனது கருத்தைத் தெரிவிப்பதற்காக, தங்க வளையல்களை அணிந்த ஒரு பெண்ணுடன் உரையாடியதாகப் பட்டீல் கூறியுள்ளார். “அவருடைய கைகளில் தங்க வளையல்கள் எப்படி வந்தது என்று நான் அவரிடம் விசாரித்தபோது, அவர் என்ன சொன்னார் என்று உனக்குத் தெரியுமா? இது 35 வருட உழைப்பிற்காக எனது தாய் பூமி எனக்குக் கொடுத்த பரிசு என்று அவர் சொன்னார்” எனப் பட்டீல் தெரிவித்துள்ளார்.
அவரது கருத்தை விமர்சித்த கர்நாடக முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, இது விவசாயச் சமூகத்தை அவமதிக்கும் செயல் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் பல கருத்துகளைப் பதிவிட்ட குமாரசாமி, சுயமரியாதை உள்ள விவசாயிகள் ஒரு தீவிரச் சூழ்நிலைக்குத் தள்ளப்படும்போது தங்கள் வாழ்க்கையை முடித்துக்கொள்கிறார்கள். அவர்களுக்கு அதற்கான கட்டாயம் ஏற்படுகின்றது எனக் கூறியுள்ளார்.
ರೈತ ಹುಟ್ಟು ಸ್ವಾಭಿಮಾನಿ ಹಾಗೂ ಮರ್ಯಾದಸ್ತ. ಸಾಲ ಕೊಟ್ಟವರು ಬಂದು ಕಿಬ್ಬದಿಯ ಕೀಲು ಮುರಿದಂತೆ ಪೀಡಿಸುವಾಗ ಮರ್ಯಾದೆಗೆ ಅಂಜಿ ದಿಕ್ಕು ತೋಚದಂತಾಗಿ ಆತ್ಮಹತ್ಯೆಗೆ ಶರಣಾಗುತ್ತಾನೆ. ಕೃಷಿ ಸಚಿವರು ಹೇಳಿದಂತೆ ರೈತ ಹೇಡಿಯಲ್ಲ.
1/4— H D Kumaraswamy (@hd_kumaraswamy) December 3, 2020
“விவசாயிகள் சுயமரியாதையுடன்தான் பிறக்கிறார்கள். பணம் கொடுத்தவர்கள் அவர்களின் வீட்டு வாசல்களில் அவர்களைத் துன்புறுத்தும்போது என்ன செய்வது என்று தெரியாத அவர்கள் இது போன்ற முடிவுக்கு வருகிறார்கள். வேளாண்துறை அமைச்சர் கூறுவது போல விவசாயிகள் கோழைகள் அல்ல” என்று குமாரசாமி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சி, கர்நாடகப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் வி.எஸ்.உக்ரப்பாவும் அமைச்சரின் கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். விவசாயச் சமூகத்தைப் பட்டீல் அவமதித்திருப்பதாக அவர் கூறியுள்ளார். “அவர் அதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று உக்ரப்பா பிடிஐ-யிடம் தெரிவித்துள்ளார்.
கடுமையான எதிர்ப்புகள் எழுந்தவுடன், “விவசாயிகளைக் கோழைகள் என்று நான் எப்போதும் கூறியது இல்லை. தற்கொலை போன்ற செயல்கள் கோழைத்தனமானது என்று கூறினேன். யாராக இருந்தாலும் தற்கொலை போன்ற கோழைத்தனமான முடிவை எடுக்கக் கூடாது. கஷ்டங்களை எதிர்கொண்டு அதிலிருந்து மீண்டு வர வேண்டும் என்றுதான் நான் கூறினேன்” எனக் கூறி பட்டீல் விளக்கம் அளித்துள்ளார்.
தேசியக் குற்றப்பதிவு பணியகத்தின் தரவுகளின்படி, 2019-ம் ஆண்டு, மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாகக் கர்நாடகாவில்தான் பெரும்பாலும் விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
நாடு முழுவதும் உள்ள அரசுகள் விவசாயத் துயரங்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு அதைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்காவிட்டால், விவசாயிகளின் நெருக்கடி மற்றும் தற்கொலைகள் தொடரும் என்று விவசாயச் சங்கத் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.