Aran Sei

சூயஸ் கால்வாயில் சிக்கி, போக்குவரத்தை முடக்கிய கப்பல் – ஊழியர்கள் அனைவரும் இந்தியர்கள்

image credit : businessinsider.in

சென்ற செவ்வாய்க் கிழமை முதல் எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கிக் கொண்டுள்ள கப்பலில் பணி புரியும் அனைத்து ஊழியர்களும் இந்தியர்கள் என்று, அந்தக் கப்பலின் நிர்வாகத்துக்கு பொறுப்பான கடல்வழி சேவைகள் வழங்கும் நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

“25 கப்பல் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். அவர்கள் அனைவரும் கணக்கில் எடுக்கப்பட்டு விட்டனர். அவர்கள் நல்ல ஆரோக்கியமாகவும் உற்சாகமாகவும் உள்ளனர். அனைத்து ஊழியர்களும் இந்தியர்கள், அவர்கள் கப்பலிலேயே உள்ளனர்.” என்று பெர்ன்ஹார்ட் ஷுல்ட ஷிப் மேனேஜ்மென்ட் ஒரு அறிக்கையில் கூறியுள்ளது.

“தொடர்புடைய அனைத்து தரப்பினருடனும் இணைந்து பணியாற்றி கப்பலை மீண்டும் மிதக்க விட அவர்கள் முயற்சித்து வருகின்றனர். கப்பலின் தலைவரும், பிற ஊழியர்களும் கடுமையாக உழைப்பதையும், களைப்பின்றி தொழில்முறையில் செயல்படுவதையும் பாராட்டுகிறோம்” என்றும் அது கூறியுள்ளது.

“கப்பலில் உள்ள 25 ஊழியர்களும் தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம் போன்ற பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள், 3 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள், எஞ்சியவர்கள் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்று பெர்ன்ஹார்ட் ஷூல்ட ஷிப் மேனேஜ்மென்ட் எங்களுக்கு தெரிவித்துள்ளது.” என்று அகில இந்திய கடல்பயணிகள் மற்றும் பொது தொழிலாளர்கள் சங்கத்தின் செயல் தலைவர் அபிஜித் சங்ளே இந்தியன் எக்ஸ்பிரசிடம் தெரிவித்திருக்கிறார்.

ஊழியர்கள் கப்பலில் நன்கு கவனிக்கப்படுவதால், அவர்களது குடும்பத்தைச் சேர்ந்த யாரும் தங்களை தொடர்பு கொள்ளவில்லை என்றும், சங்கம் நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

400 மீட்டர் நீளமான, 2 லட்சம் டன் எடையுள்ள இந்த பிரம்மாண்டமான எவர் கிவன் கப்பல் ஜப்பானைச் சேர்ந்த ஷெய் கிசனுக்குச் சொந்தமானது, தாய்வான் நிறுவனமான எவர்கிரீன் மரைனால் இயக்கப்படுவது. இந்தக் கப்பல் கடும் காற்றாலும், மணல் புயலாலும் தரை தட்டியது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிடுகிறது.

விபத்து நடந்த போது, எவர் கிவன் கப்பல் வடக்கு நோக்கி நெதர்லாந்தின் ராட்டர்டாமை நோக்கிச் சென்று கொண்டு இருந்தது என்றும், இரண்டு கால்வாய் வழிகாட்டிகள் கப்பலில் இருந்தனர் என்றும் கப்பல் நிர்வாக நிறுவனம் கூறியுள்ளது.

image credit : indianexpress.com
சூயஸ் கால்வாயை அடைத்து விட்ட எவர் கிவன் கப்பல் image credit : indianexpress.com

இந்த சரக்குப் பெட்டி கப்பல், குறுகலான சூயஸ் கால்வாயை கிட்டத்தட்ட முழுமையாக அடைத்து விட்டது. சூயல் கால்வாய் ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைக்கும் முக்கியமான கடல்வழிப் பாதை ஆகும். எனவே, உலகின் மிக சுறுசுறுப்பான வர்த்தக பாதையாக உள்ளது. எவர் கிரீன் கப்பல் விபத்தால், சுமார் $1000 கோடி மதிப்புள்ள சரக்குகளை சுமந்து கொண்டிருக்கும் சுமார் 300 கப்பல்கள் இரு பக்கமும் சிக்கியுள்ளன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

சரக்குப் பெட்டி போக்குவரத்து நிறுவனமான ஏ.பி மொல்லர் மெர்ஸ்க், அதன் 7 சரக்குப் பெட்டி கப்பல்கள் பாதிக்கப்பட்டுள்ளன என்று சென்ற வாரம் தனது வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்திருந்தது. அவற்றி்ல 4 சூயஸ் கால்வாய் அமைப்புக்கு உள்ளேயும், மீதி சூயஸ் கால்வாய்க்குள் நுழைவதற்கு காத்திருப்பதிலும் உள்ளன என்று அது கூறியுள்ளது.

உலகின் மிக முக்கியமான கடல்வழி போக்குவரத்து பாதைகளில் ஒன்று முடக்கப்பட்டிருப்பது  உலகெங்கும் வர்த்தகத்தையும் கப்பல் போக்குவரத்தையும்  பாதிக்கும் என்று கப்பல் துறையைச் சேர்ந்தவர்கள் தெரிவிப்பதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. சூயஸ் கால்வாய் விரைவில் திறக்கப்படா விட்டால், கப்பல்கள் 7 – 8 நாட்கள் கூடுதல் பயணம் செய்து ஆப்பிரிக்காவைச் சுற்றிச் செல்ல வேண்டும், இது செலவுகளை கணிசமாக அதிகரித்து விடும்.

எவர் கிவன் கப்பலை விடுவித்து மீண்டும் மிதக்க விடுவதற்கான முயற்சிகள் நேற்று வரை வெற்றியடையவில்லை என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது.

வெள்ளிக் கிழமை இரவில் கப்பலின் பின் விளிம்பில் பெருமளவு முன்னேற்றம் அடையப்பட்டுள்ளது என்றும் கப்பலின் சுக்கான் சேற்றில் இருந்து விடுவிக்கப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ள பெர்ன்ஹார்ட் ஷூல்ட ஷிப் மேனேஜ்மென்ட், தொடரும் தோண்டும் செயல்களுக்கு கூடுதலாக சனிக்கிழமை அன்று 11 இழுவை படகுகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் கப்பலின் பக்கவாட்டிலிருந்து சேறும் மணலும் நீக்கப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.

நெதர்லாந்து, இத்தாலியைச் சேர்ந்த இரண்டு இழுவை படகுகள் எவர் கிவன் கப்பலை விடுவிப்பதற்கான பணியில் இணைய உள்ளன என்றும் அந்நிறுவனம் கூறியுள்ளது.

இந்த விபத்து காரணமாக மேற்கு இந்திய துறைமுகங்களில் நெருக்கடி ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் எடுத்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவிக்கிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்