Aran Sei

‘வந்தனாவின் பின் நாடே இருக்கிறது என்று கூறுங்கள்’ – ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கடிதம்

ந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னணி வீராங்கனை வந்தனா கட்டாரியா மீதான சாதி ரீதியான இழிவை நீக்கி புகழை மீட்க வேண்டுமென ஒன்றிய விளையாட்டுத்துறை அமைச்சருக்கு நாடாளுமன்ற உறுப்பினர்  சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,”டோக்யோ ஒலிம்பிக்கில் அரை இறுதி ஆட்டம் வரை அழைத்து சென்ற இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் உறுப்பினர் வந்தனா கட்டாரியா வீட்டின் முன்பு சாதி இந்துக்கள் அநாகரிக நடனம் ஆடியுள்ளனர். மேலும்,  அணியில் அதிகம் தலித்துகள் என்பதால் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வி என சாதி ரீதியில் வசைமொழிந்துள்ளனர். எல்லா விளையாட்டுகளில் இருந்தும் தலித்துகளை வெளியே அனுப்ப வேண்டுமென்று கூச்சலுமிட்டுளனர். அரித்துவார் ரோஷனாபாத் என்ற கிராமத்தில் இந்தியாவின் செல்ல மகள் வந்தனா குடும்பத்தினருக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும்” என்றும் தெரிவித்துள்ளார்

அதுமட்டுமல்லாது, “இதே போட்டியில் மூன்று முறை தங்கம் வென்ற முன்னாள் சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இதே அணிதான்.  கால் இறுதி போட்டிக்கு இந்தியாவை தகுதியாக்கிய தென் ஆப்ரிக்காவுடனான போட்டியில் ஹாட் ட்ரிக் கோல் அடித்து சாதனை புரிந்து வெற்றிக்கு பங்களித்தது வந்தனாதான்.” என்றும் குறிப்பிட்டுள்ளார்

மேலும், உலகம் முழுவதுமுள்ள மக்கள் குறிப்பாக விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் இந்தியாவின் மதிப்பை குறைத்துள்ளதுள்ளதாகவும்,தேசத்திற்காக விளையாடும் பெருமை மிக்க வீரர்கள் மனதை இரணமாக்கியுள்ளதாகவும்  சு.வெங்கடேசன்  கூறியுள்ளார்.

அதோடு,”இம்முறை இந்திய பெண்கள் ஹாக்கி அணி நாடு முழுக்க பெரும் எழுச்சியை உருவாக்கியது. இந்த எழுச்சியை உருவாக்கிய பெண்கள், மிக எளிய பின்னணியிலிருந்து வந்தவர்கள். வேளாண் குடும்பம், வீட்டில் மகள் ஆடுவதை பார்க்க சரியாக ஒரு தொலைக்காட்சி கூட இல்லாத குடும்பம், போட்டிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பு தந்தையை இழந்த ஒரு வீராங்கனை, குடிக்கு அடிமையான தந்தை தந்த மனவுளைச்சலை மீறி டோக்கியோவில் வெற்றியை நிலை நாட்டிய இன்னொரு வீராங்கனை என்று இவர்களது கதைகளை கேட்க கேட்க நெஞ்சு விம்முகிறது. இந்த வீராங்கனைகளை நாம் சரியாகதான் கொண்டாடுகிறோமா என்கிற சந்தேகம் எழுகிறது. தேசம் கொண்டாடுகிறது. மக்கள் கொண்டாடுகிறார்கள். அரசு?”என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

எனவே, “இந்திய மகளிர் ஹாக்கி அணி  அரசால் பெருமை செய்யப்பட்டு உற்சாகப்படுத்தப்பட வேண்டும்.  ஒவ்வொருவருக்கும் ரூ 1 கோடி சிறப்பு பரிசை அறிவிக்க வேண்டும். குற்றவாளிகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுவதை உறுதி செய்யுங்கள்.மிகப்பெரும் பெரிய பாராட்டு விழா நடத்துங்கள். வந்தனா வீட்டிற்கு நீங்களே நேரில் சென்று தேசம் உன் பின்னால் முழுமையாக நிற்கிறது என்று சொல்லுங்கள்” என்றும் சு.வெங்கடேசன் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்