Aran Sei

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

க்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இன்று (மே 7) வரை மட்டுமே இருக்கும் என்றும் அதற்கு நாளை (மே 8) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டிவிடுவோம் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு மருந்துக்கழக நிர்வாக இயக்குனர் உமாநாத் தெரிவித்துள்ளார். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள நிலை என்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்

இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாமும் நமது நகரமும் சுற்றியுள்ள மாவட்டங்களும் மருத்துவ அபாய நிலையை அடைந்துள்ளோம். ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிக்குப் படுக்கை கிடைக்க வேண்டுமென்றால் ஏற்கனவே படுக்கையில் இருக்கும் நோயாளி படுக்கையைவிட்டு அகன்றால் மட்டுமே புதிய நோயாளிக்குப் படுக்கை கிடைக்கும். இதுதான் இன்று தனியார்,  அரசு மருத்துவமனைகளின் நிலைமை. இதுதான் அபாய கட்டத்தின் ஆரம்பம்.” என்று தெரிவித்துள்ளார்.

‘தமிழ் மக்களின் உயிர்கள் முக்கியமில்லையா’ – ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

“ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இன்று (7-மே-2021 வெள்ளி) வரை மட்டுமே இருக்கும் என்றும்  நாளை (8-மே-2021 சனிக்கிழமை) மிகவும் மோசமான சூழ்நிலையை எட்டி விடுவோம் என்றும் சென்னை உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு மருந்துக்கழக நிர்வாக இயக்குனர் உமாநாத் தெரிவித்துள்ளார். இதுதான் தமிழகம் முழுவதும் உள்ள நிலை.” என்று சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.

கேரளாவில் உள்ள கஞ்சிக்கோட்டில் இருந்து தென்தமிழகத்துக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்த 40 டண் ஆக்சிஜன் ஒன்றிய அரசின் புதிய உத்தரவால் நிறுத்தப்பட்டுள்ளது என்றும் உடனடியாக அதனை வழங்க ஒன்றிய அரசு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு

நேற்று முன்தினம் (மே 5) ஒன்றிய அரசு பிறப்பித்த உத்தரவில் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவையை முற்றிலும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத அணுகு முறையையே கடைபிடித்துள்ளது என்றும் நமது ஆக்சிஜன் தேவை இரண்டு மடங்காக அதிகரித்த நிலையிலும் மத்திய ஒதுக்கீட்டில் இருந்து நமக்கு அதிகப்படுத்தித்தர மறுக்கிறார்கள் என்றும் தனது அறிக்கையில் சு.வெங்கடேசன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மேலும், “நிலைமை அனைத்து வகையிலும் கைமீறிக்கொண்டிருக்கிறது. ஒன்றிய அரசிடமிருந்து நமக்கான உரிமையைக் கேட்டுப் பெறுகின்ற போராட்டத்தைத் தொடர்ந்து நடத்துவோம். இப்பொழுது உடனடித்தேவை போர்கால அடிப்படையிலான மேலாண்மைத்திறன். ஆக்சிஜன் தேவைப்படும் நோயாளிகளுக்குப் படுக்கைகளை உறுதிப்படுத்துவது, ஆக்சிஜன் தேவைப்படாத நோயாளிகளை ஆக்சிஜன் படுக்கையில் இருந்து மாற்றுவது, கூர்மையான மருத்துவக் கண்காணிப்பின் அடிப்படையில் இப்பணியை செய்தால் நம்மால் பலரின் உயிரை இந்த அபாய கட்டத்திலும் காப்பாற்ற முடியும்.” என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் உயிரிழப்பது இனப்படுகொலைக்குக் குறைவானதல்ல – அலகாபாத் உயர்நீதிமன்றம்

“மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஒவ்வொரு மணிநேரத்துக்கு ஒரு முறை நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து பணியாற்ற வேண்டும். இன்று பொறுப்பேற்கப் போகும் நம் முதல்வர் அவர்கள் மருத்துவ அவசரநிலை போன்று நிலைமை உள்ளதால் கட்டளை அறை அமைக்க உத்தரவிட்டுள்ளார். மாவட்ட அளவிலான கட்டளை அறைகளின் செயல்பாடும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.” என்று சு.வெங்கடேசன் கோரியுள்ளார்.

பேரிடர் காலத்தில் அதிகாரத்தில் இருப்பவர்களின் சிறு அசைவும் செயல்களும் மனித உயிர்களைக் காக்கும் பெருவாய்ப்பினைப் பெற்றிருக்கிறன என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவோம் என்று அவர் அறிவுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்