மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்டச்செலவு ரூ.2000 கோடியாக அதிகரித்துள்ளதால், பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளை நியமிக்கக்கோரி, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மத்திய சுகாதாரத்துறைச் செயலரிடம் மனு அளித்துள்ளார்.
இதுகுறித்து, இன்று (ஜனவரி 21) சு.வெங்கடேசன் தரப்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக 2019 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு வேலைகள் எதுவுமே நடைபெறாமல் உள்ளது. இதே காலகட்டத்தில் அறிவிக்கப்பட்ட மற்ற இடங்களில் எல்லாம் மாணவர்கள் சேர்க்கை ஆரம்பித்துவிட்டது.” என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு விருப்பமில்லையா? – உயர் நீதிமன்றம் கேள்வி
இது தொடர்பாக, இன்று (ஜனவரி 21) மத்திய மக்கள் நல்வாழ்வுதுறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் இணைச் செயலர் (எய்ம்ஸ்) நிலம்பூஜ் சரண் இருவரையும் சந்தித்து கோரிக்கைகளை வைத்தாக சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
“மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான செலவு ரூ.2,000 கோடியாக அதிகரித்துள்ளதை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கென தேவைப்படும் ’நிர்வாக அனுமதியை’ உடனடியாக வழங்கவேண்டும். இதற்கென கடன் வாங்குவதற்கான ஒப்பந்தத்தை விரைவாக கையெழுத்திட்டு செயல்படுத்தி வேலைகளை துரிதப்படுத்துவது.” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மதுரை எய்ம்ஸ் : மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை – சீ. நவநீத கண்ணன்
மேலும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக நிர்வாக இயக்குனர், மருத்துவ கண்காணிப்பாளர், துணை இயக்குனர் (நிர்வாகம்), மற்றும் நிர்வாக அலுவலர்களை உடனடியாக நியமித்து, இத்திட்டத்திற்கான நிர்வாக வேலைகளை விரைவுபடுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை வைத்துள்ளார்.
“மதுரை எய்ம்ஸ் திட்டத்திற்கான செலவு ரூ.1200 கோடியிலிருந்து ரூ.2000 கோடியாக உயர்வதற்கான காரணம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் தொற்றுநோய்த் தடுப்பு மருத்துவமனை புதிதாக இணைப்பதால் திட்டமிடப்பட்ட செலவுத்தொகையில் பெரும் உயர்வு ஏற்பட்டுள்ளது என்றனர். இதற்கான நிர்வாக அனுமதி மற்றும் அமைச்சரவை ஒப்புதல் பெறவேண்டிய நிலையுள்ளதால் விரைவாக அமைச்சரவை ஒப்புதல் பெற்று முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளேன்.” என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
‘மதுரை வீதியில் படகு ஓட்டலாம்; மாநகரின் நடுவில் ஒரு குளம்’ – ஸ்மார்ட் சிட்டி குறித்து பழனிவேல் ராஜன்
“அதே போல ஜப்பான் நிறுவனத்தோடு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடுவதில் இன்னும் ஏன் காலம் தாழ்த்தப்படுகிறது ? அதற்கான தேதியை வரையறுங்கள் என்று கேட்டதற்கு மார்ச் இறுதிக்குள் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று கூறியுள்ளனர். இதன் தொடர்சியாக நிர்வாகத்துக்கு தேவையான அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று கூறினார்.” என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.