Aran Sei

‘ஒன்றிய அரசே, செவி மடு; தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு’ – மத்திய சுகாதார அமைச்சருக்கு சு. வெங்கடேசன் கடிதம்

மிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடனே உயர்த்தப்பட வேண்டும் என்றும் அனைத்து பொதுத் துறை நிறுவனங்களில் பயன்படுத்தாத இயந்திரங்ளை உடனே உற்பத்தி திறனை அதிகரிக்க இயக்க வேண்டும் என்றும் இந்திய ஒன்றிய அரசை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

இன்று (மே 8), இந்திய ஒன்றியத்தின் சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்த்தனுக்கு  சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், “நேற்று மாண்புமிகு தமிழக முதல்வர், பிரதமருக்கு மாநிலத்தில் நிலவும் ஆக்சிஜன் நெருக்கடி குறித்து கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் ஏற்கெனவே ஏற்றுக் கொண்டுள்ள கூடுதல் ஆக்சிஜன் ஒதுக்கீடை உடனடியாக வழங்குமாறும், ஆக்சிஜன் தேவை அதிகரிப்பை கருத்திற்  கொண்டு தமிழகத்திற்கு ஒதுக்கீட்டை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளார். இது புதிய தமிழக முதல்வரின் முதல் கடிதம். தமிழக மக்களின் உயிர்களைக் காப்பாற்ற பிரதமரின் உடனடி தலையீட்டை கோரியுள்ளார்.” என்று முதல்வரின் கடிதத்தை நினைவூட்டியுள்ளார்.

‘அதிகரிக்கும் ஆக்சிஜன் தேவை; வாக்குறுதிபடி 476 மெட்ரிக் டன் ஆக்சிஜன் வேண்டும்’ – பிரதமருக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம்

“ஆனால் ஒன்றிய அரசின் துறை அதிகாரிகள் உடனான விவாதங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒதுக்கீடான 476 மெட்ரிக் டன், அவ்விவாதங்கள் முடிந்து 5 நாட்கள் ஆகியும் இன்னும் வந்து சேரவில்லை என்பது வேதனைக்குரியது. தற்போது ஒதுக்கீடு 220 மெட்ரிக் டன்னாகவே உள்ளது. தினமும் கோவிட் மரணங்கள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன. ஒரு நாள் தாமதம் கூட பல உயிர் இழப்புகளை விலையாய்க் கேட்கின்றன. மாண்புமிகு முதல்வர் தனது கடிதத்தில் செங்கல்பட்டில் 13 உயிர்கள் வீழ்ந்த துயரத்தைக் குறிப்பிட்டுள்ளார். எனது முந்தைய கடிதத்திலும் அந்தப் பெருந்துயர் இடம் பெற்றிருந்தது. மாண்புமிகு முதல்வர் கடிதத்தில், ஆக்சிஜன் தேவை 840 மெட்ரிக் டன்னாக இன்னும் இரண்டு வாரங்களில் உயரும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

“நான் இங்கு மீண்டும் வலியுறுத்துவது என்னவெனில், ஒன்றிய அரசு சற்றும் தாமதிக்காமல் உடனடியாக செயலாற்ற வேண்டிய நெருக்கடி மிக்க நேரம் இது.  ஒவ்வொரு உயிரும் காப்பாற்றப்பட வேண்டும். நிர்வாக இடைவெளிகள், ஆதார ஏற்பாடுகளின் குறைபாடு ஆகியனவற்றால் மனித உயிர்கள் வீழ்வது கூடாது” என்று சு.வெங்கடேசன் தன் கடிதத்தில் ஒன்றிய அரசிடம் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டுள்ளார்.

‘தமிழகத்தில் இருமடங்காகும் ஆக்சிஜன் தேவை; ஒதுக்கீடு செய்ய மறுக்கும் ஒன்றிய அரசு’ – சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

“நான் மாண்புமிகு முதல்வரின் அனைத்துக் கோரிக்கைகளையும் முழுமையாக ஆதரிக்கிறேன். அக்கடிதத்தின் ஒவ்வொரு வரியும் தமிழகத்தின் கள நிலைமையைப் பிரதிபலிக்கின்றன. ஒன்றிய அரசின் கவனம் உடனடியாக ஈர்க்கப்பட வேண்டிய கோரிக்கைகள். நான் வலியுறுத்துவது, 1) ஏற்றுக் கொண்ட ஆக்சிஜன் ஒதுக்கீடுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும், 2) தமிழகத்திற்கு ஆக்சிஜன் ஒதுக்கீடு 840 மெட்ரிக் டன்னாக உடனே உயர்த்தப்பட வேண்டும், 3) அனைத்து பொதுத் துறை நிறுவனங்கள் அவற்றின் பயன்படுத்தப்படாத உற்பத்தி திறன் ஈடுபடுத்தப்பட்டு, ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டும். ஆதார ஏற்பாடுகளான ஐ.எஸ்.ஓ கிரையோஜினிக் சாதனங்கள், ரயில்கள் உறுதி செய்யப்பட வேண்டும்.” என்று கோரிக்கைகளை அவர் பட்டியலிட்டுள்ளார்.

இறுதியாக, “ஒன்றிய அரசே, செவி மடு. தமிழகத்திற்கு மூச்சுக் காற்றை உடனே கொடு.” என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்