Aran Sei

‘தமிழ் மக்களின் உயிர்கள் முக்கியமில்லையா’ – ஆக்சிஜன் ஒதுக்கீட்டில் தமிழகத்திற்கு அநீதி இழைக்கப்பட்டதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

மாநிலங்களுக்கான மத்திய அரசின் மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டத்தில் தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது என்றும் மன வலியோடு கேட்கிறேன் தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (மே 6), மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு சு.வெங்கடேசன் அனுப்பியுள்ள அவசர கடிதத்தில், “தேசிய சுகாதார முகமையின் இயக்குனர் டாக்டர் சஞ்சய் ராய் அவர்கள் வெளியிட்டுள்ள மே 5 தேதியிட்ட “மாநிலங்களுக்கான மருத்துவ ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம்” (D No. Z 20015/ 46/ 2021- ME – I) பார்த்து அதிர்ந்து போய் விட்டேன். தமிழகத்திற்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

ஆக்சிஜன் பற்றாக்குறையில்லையென கண்ணை மூடிக்கொண்டிருக்கும் மத்திய அரசு – உயர்நீதிமன்றம் விமர்சனம்

“10 நாட்களுக்கு முன்பு தமிழகத்திற்கு 280 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது மாநிலம் முழுவதும் ஏற்பட்டுள்ள கோவிட் பரவல் ஆக்சிஜன் தேவையை செங்குத்தாக அதிகரித்துள்ளது. மருத்துவ நிபுணர்கள் கருத்துப்படி 500 மெட்ரிக் டன்னாக தமிழகத்திற்கான தேவை உயர்ந்திருக்கிறது. மத்திய அரசு சார் நிறுவனங்களின்  சில மதிப்பீடுகளே 400 மெட்ரிக் டன்கள் என்று கூறுகிறது. ஆனால் மேற்கண்ட கடிதம், அதில் உள்ள திட்டம் இது பற்றி மௌனம் சாதிக்கிறது. அதன் பொருள், தமிழகத்திற்கு கூடுதல் ஒதுக்கீடு இல்லை. நான் ஒரு கேள்வியை மன வலியோடு எழுப்பும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளேன்.  தமிழ் மக்கள் உயிர்கள் முக்கியமில்லையா?” என்று அக்கடிதத்தில் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

“செவ்வாய் இரவு செங்கல்பட்டு அரசு மருத்துவ மனையில் 13 மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆக்சிஜன் பற்றாக்குறையே காரணம். அங்கு கோவிட் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள 447 பேரில் 309 பேர் ஆக்சிஜன் தேவைப்படுபவர்கள். இது தனித்த உதாரணம் அல்ல. தமிழகத்தின் பல பகுதிகளில் இதுதான் நிலைமை. பல அரசு, தனியார் மருத்துவமனைகள் பல சிரமங்களோடும், உயிர் பயத்தோடும் வரும் நோயாளிகளைத் திருப்பி அனுப்பி வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் இன்னும் நிலைமை மோசமாகக் கூடும்.” என்று சு.வெங்கடேசன் எச்சரித்துள்ளார்.

செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் 11 நோயாளிகள் உயிரிழப்பு – ஆக்சிஜன் பற்றாக்குறை என உறவினர்கள் குற்றச்சாட்டு

இந்த நிலைமையில் ஆக்சிஜன் ஒதுக்கீடு திட்டம் தமிழகத்திற்கு நீதி தரவில்லை என்றும் தமிழக அரசின் தொடர்ந்த வேண்டுகோள்களுக்குப் பின்பும் ஒதுக்கீடு அதிகரிப்பு மறுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“நான் வருத்தத்தோடு சொல்கிறேன். ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிர் இழப்புகள் ஏற்பட்டால் தமிழக மக்களுக்கு மத்திய அரசே பதில் சொல்ல வேண்டி வரும்.  இது அவசர வேண்டுகோள். காலதாமதம் எதுவுமின்றி உங்கள் தலையீட்டை எதிர் நோக்குகிறேன்.” என்று அவர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வர்தனிடம் கோரியுள்ளார்.

‘ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் செத்துக்கொண்டிருக்க தனது அதிகார வெறியை தம்பட்டம் அடிக்கிறார் பிரதமர்’ – சீதாராம் யெச்சூரி

இறுதியாக, தமிழ் மண்ணில் ஒரு உயிர் கூட ஆக்சிஜன் பற்றாக்குறையால், மருத்துவ ஏற்பாடுகளில் உள்ள இடைவெளிகளால் வீழ்ந்து விடக் கூடாது என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்