Aran Sei

‘மன்னிப்பு மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றியது ஒன்றிய அரசு’- சு.வெங்கடேசன்

ன்றிய அரசு மன்னிப்பு மசோதாவை விவாதமின்றி நிறைவேற்றியது என்றும் மக்கள் விரோத மசோதாக்கள் அனைத்தும் திரும்ப பெறும் வரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 29),  சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இன்று இந்திய வரலாற்றில் முக்கியமான நாள். ஆம். மூர்க்கத்தனமாக அரசாங்கம் கடந்த ஆண்டு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெறுவதற்கான சட்டம் இன்று நாடாளுமன்றத்தின் முதல் நாளிலேயே கொண்டு வரப்பட்டுள்ளது. மக்கள் கருத்தே உயிர்ப்பு மிக்க சனநாயகத்தின் அடித்தளம் என்பதை இந்திய விவசாயிகள் நிரூபித்துள்ளார்கள்.

திரும்பப்பெறப்பட்ட விவசாய சட்டங்கள்: மக்களவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றம்

உலகமே கண்டிராத நீண்ட நெடிய போராட்டம்.  ஒராண்டைக் கடந்து முன்னேறி இருக்கிறது. எவ்வளவு அடக்குமுறைகள்… எவ்வளவு அவதூறுகள்… எவ்வளவு உயிர்ப் பலிகள்… ஆனால் இவ்வளவையும் கடந்து, கலப்பைகள் கார்ப்பரேட் லாப வெறியை ஆழ உழுது அகற்றி இருக்கின்றன.

1990 களில் இருந்து உலகமயம் இந்தியாவில் அமலாகி வருகிறது. விவசாயம், பொதுத் துறை, மக்களின் வாழ்வுரிமை, ஜனநாயகம், தொழிற்சங்க உரிமைகள் கடுமையான தாக்குதல்களுக்கு ஆளாகி வந்துள்ளன. இதற்கான  எதிர்வினைகள் அனைத்தும், வெற்றி கண்டவை கூட தற்காப்பு நிலையிலேயே இருந்து வந்துள்ளன. பறிப்பதை தடுப்பது, இழந்ததை மீட்பது என்ற வகையிலேயே அவை எல்லாம் அமைந்தன. ஆனால் பிரதமர் நவம்பர் 19 அன்று விவசாய சட்டங்களை திரும்ப பெறுகிறோம்… வீட்டிற்கு செல்லுங்கள் என்று அறிவித்த போதும் அவர்கள் கலைந்து செல்லவில்லை.

நாடாளுமன்றத்தில் திரும்பப் பெறுவதற்கான சட்டத்தை நிறைவேற்றுங்கள், பிறகு போகிறோம் என்று சொல்லி நகராமல் அமர்ந்தார்கள் . அதோடு நிற்கவில்லை. குறைந்த பட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்ட வடிவம் தாருங்கள், இலவச மின்சாரம் உள்ளிட்ட சலுகைகளை பறிக்க கூடிய மின்சார சட்ட திருத்தத்தையும் நிறுத்துங்கள் என்ற கோரிக்கைகளையும் முன் வைத்தார்கள். முப்பது ஆண்டு உலகமயம் இப்படி தற்காப்பு நிலையில் இருந்து தாக்குதல் நிலைக்கு நகர்ந்த போராட்டத்தை சந்தித்ததே இல்லை.

எவ்வளவு அடக்குமுறைகள்!

கண்ணீர் புகை, வாட்டர் கேனான், தடியடி, கைது, விவசாயிகள் திரளுக்குள் வாகனத்தை ஓட்டி உயிர் பறிப்பு… இப்படி எத்தனை தாக்குதல்கள். கடுமையான தாக்குதலில் உயிர் பறிக்கப்பட்ட  அரியானா சுசில் கஜோல் உட்பட 700 விவசாயிகளின் உயிர்கள் வீழ்ந்துள்ளன. இவ்வளவு மகத்தான தீரம், தியாகம், போராட்ட உறுதி விடுதலை இந்தியாவின் புதிய வரலாறு.

எவ்வளவு அவதூறுகள்? காலிஸ்தானிகள், மாவோயிஸ்ட்கள், நக்சலைட்டுகள் என அவர்களை சித்தரித்தனர்.  மதத்தால் பிரிக்க முடியுமா? சாதியால் பிரிக்க முடியுமா? என்றெல்லாம் பார்த்தார்கள். ஆனால் அவர்களின் எழுச்சி முன்பாக சதியும் நிற்கவில்லை. சாதியும் நிற்கவில்லை. மதக்கலவரம் தாண்டவமாடிய முசாபர் நகரில் மதங்கள் கடந்து விவசாயிகள் கை கோர்த்ததுதான் மோடி – யோகி தூக்கத்தை கெடுத்தது. விவசாயிகளின் எழுச்சி அவர்களின் நாற்காலிகளை அசைக்க ஆரம்பித்ததுதான் பிரதமரின் அறிவிப்புக்குக் காரணம்.

கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று – சு.வெங்கடேசன்

நாடாளுமன்றத்தில் இன்று கொண்டு வரப்பட்டுள்ள “திரும்பப் பெறும் சட்ட வரைவு” கூட பழைய வசனங்களையே பேசியுள்ளது. “சட்ட வரைவின் நோக்கங்கள், இலக்குகள்” (Objects and Intent of the bills) என எதை எதை மசோதாவை நிறைவேற்றும்போது சொன்னார்களோ அதையே திரும்ப பெறும் போதும் சொல்லி இருக்கிறார்கள். விசித்திரமான அரசாங்கம். உலகம் பார்த்து சிரிக்கிறது.

என்ன சொல்கிறார்கள்?

விவசாயிகளுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்க வழி செய்தார்களாம். எங்கு வேண்டுமானாலும், யார்க்கு வேண்டுமானாலும் விற்றுக் கொள்ள சுதந்திரம் தந்தார்களாம். எப்படி இந்த சட்டங்கள் வாயிலாக கூடுதல் வருமானம் கிடைக்கும்? ஏற்கெனவே 23 விளை பொருட்களுக்குக் குறைந்த பட்ச விலை அறிவிக்கப்பட்டாலும் நெல், கோதுமை தவிர மற்ற விளை பொருட்களுக்கு கொள்முதல் ஏற்பாடு உண்டா? ஏற்கெனவே குறைந்த பட்ச ஆதார விலையால் பயன் பெறுபவர்கள் மொத்த விவசாயிகளில் 6 சதவீதம் பேர்தான்.  எனில் மீதம் 94 சதவீதம் பேருக்கு இந்த சட்டம் என்ன உத்தரவாதம் தந்தது? 2014 இல் பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கையில் சொன்னது போல எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கை பரிந்துரைத்த C 2 + 50 % – அதாவது சாகுபடி செலவுகள், குடும்ப உழைப்பு, நில வாடகை, கடன் வட்டி ஆகியவற்றை உள்ளடக்கிய –  என்ற அளவில் குறைந்த பட்ச ஆதார விலையை ஏழு ஆண்டுகள் ஆகியும் கொண்டு வந்தீர்களா? இந்த சட்டங்கள் அதை உறுதி செய்தனவா? நெல்லுக்கு குவிண்டால் ரூ 1960 என நீங்கள் நிர்ணயித்த குறைந்த பட்ச ஆதார விலையை விட குறைவாக ரூ 1100 க்கு குவிண்டால் நெல்லை விற்க வேண்டிய அவலம் நீங்கள் ஆளுகிற உத்தரப் பிரதேசத்திலேயே இல்லையா? ஒரு ஏக்கருக்கு 20 குவிண்டால் நெல் விளைச்சல் என்றால் மொத்த இழப்பு ஏக்கருக்கு ரூ 17200 இல்லையா? இந்த சட்டம் தனியார்கள் கொள்முதல் குறைந்த பட்ச விலைக்கு கீழே இருக்கக் கூடாது என்று சொன்னதா?

விவசாயிகள் இடைத் தரகர்கள் இல்லாமல் நேரடியாக விற்கலாம் என்று சொன்னது யாருடைய நலனுக்காக? காண்ட்ராக்ட் விவசாயம் என்ற பெயரில் கார்ப்பரேட் கைகளுக்கு விளை பொருள் மீதான ஆதிக்கத்தை தருவதுதானே. மின்னணு வர்த்தகம் வாயிலாக வருமானத்தை அதிகரிப்போம் என்கிறீர்களே, தொழில் நுட்பமா கூடுதல் விலை தரும்?

பிரதமர் நவம்பர் 19 அன்றும் சொன்னார், இந்த சட்ட வரைவும் சொல்கிறது. சில விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை, ஒரு சில குழுக்கள் மட்டுமே எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் என்று… இதை விட ஒரு நகைச்சுவை ஏதாவது இருக்க முடியுமா? உலக நாடுகள் சிரிக்காதா? ஓராண்டு காலம் லட்சக்கணக்கான விவசாயிகள் தலை நகர் டெல்லியை முற்றுகை இட்டு அமர்ந்திருப்பது அரசின் கண்களுக்குத் தெரியவில்லையா? உலகம் இருட்டு என்று கண்ணை மூடிக் கொண்டு சொன்ன பூனைக்கு இவ்வளவு உளவு ஸ்தாபனங்களா கைவசம் இருந்தன? பிரதமரே… உங்களால் விவசாயிகளுக்கு புரிய வைக்க முடியவில்லை என்கிறீர்கள். ஆனால் விவசாயிகள் உங்களையும் புரிந்து வைத்திருக்கிறார்கள், நீங்கள் கொண்டு வந்த சட்டங்களையும் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள்.

விடுதலை இந்தியாவில் எந்த ஒரு பிரதமருக்கும் மார்பளவு பெருமையோடு சொல்லப்பட்டதில்லை. எவ்வளவு விரிந்த மார்பு என்பதில் இல்லை ஒரு அரசின் பலம். விரிந்து பரந்த இதயமே அரசின் தேவை என்பதை விவசாயிகள் சொல்லிக்கொடுத்துள்ளனர்.

‘விடுதலை செய்யக்கோரும் நளினியின் மனு’- தள்ளுபடி செய்து உத்தரவிட உயர்நீதி மன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு

இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள உங்களின் “மன்னிப்பு மசோதாவில் ” இந்த ஆண்டு மட்டும் 123 லட்சம் கோடிகள் விவசாயத் திட்டங்களுக்கு செல்விடப்படுவதாக கூறி இருக்கிறீர்கள். இந்த ஆண்டு மொத்த பட்ஜெட் செலவினமே 34, 83, 236  கோடிகள்தான். எப்படி 123 லட்சம் கோடிகள் விவசாயத்திற்கு மட்டும் செலவாக முடியும்? விவசாயம் மற்றும் விவசாயிகளின் நலனுக்கு ஒதுக்கீடு 2021 – 22 இல் மொத்தம் ரூ 1,31,531 கோடிகள்தான் என்று உங்கள் பட்ஜெட் ஆவணங்கள் கூறும் போது அதைப் போல கிட்டத்தட்ட 100 மடங்கு தொகையை செலவினம் என அச்சு அடித்து கொடுத்திருக்கிறீர்களே! எங்கே அந்த தொகை?

பிரதமரே ! நீங்கள் நவம்பர் 19 அன்று என்னை மன்னியுங்கள் என்றீர்கள்.

குறைந்த பட்ச ஆதார விலையை சட்டமாக்கும் வரை, மின்சார மசோதா திருத்தங்களை நிறைவேற்றமாட்டோம் என்று அறிவிக்காதவரை, உயிரை ஈந்த 700 விவசாயிகளுக்கு இழப்பீடு தராதவரை, எல்லா மக்கள் விரோத கொள்கைகளையும் திரும்பப் பெறாத வரை மக்கள் உங்களை மன்னிக்க மாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்