Aran Sei

வரலாற்று ஆவணங்களை ஏலம் விட பிரசார் பாரதி முடிவு: ‘அரசியல் தேவைகளுக்காக வரலாறு சிதைக்கப்படுகிறது’- சு.வெங்கடேசன்

ரலாற்று ஆவணங்களை ஏலம் விடும் முடிவை பிரசார் பாரதி அமைப்பு கைவிட வலியுறுத்தி ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு, மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இன்று(அக்டோபர் 18), சு.வெங்கடேசன் வெளியிட்ட அக்கடிதத்தில், “தன்னிடம் உள்ள வரலாற்று ஆவணங்களை ஏலம் விடப் போவதாக பிரசார் பாரதி அமைப்பு (அக்:8) முடிவெடுத்துள்ளது. இவர்கள் ஏலம் விடப் போகிற ஆவணங்களில் அரசியல் நிர்ணய சபை விவாதங்கள் உள்ளிட்ட இந்திய வரலாற்றின் மகத்தான சாட்சியங்கள் அடங்கும். நிகழ்கால அரசியல் தேவைகளுக்காக வரலாற்றினை சிதைக்க முயலும் எந்த ஒரு முயற்சியையும் அனுமதிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.

காந்தியின் ஆலோசனையின்படி தான் சாவர்க்கர் கருணை மனு போட்டாரா? – உண்மை என்ன?

இந்திய வரலாற்றின் நிகழ்வுகள் அதன் காலம், சூழல் சாராது தவறாகப் பயன்படுத்தப்பட்டால் அது தேசத்தின் அரசியலை, அமைதியை, சமாதானத்தை எதிர்மறையாக பாதிக்கக் கூடும் என்றும் ஆகவே கார்ப்பரேட் ஊடகங்கள் கைகளில் இதன் உரிமைகள் செல்வது அறிவார்ந்த செயலாக இருக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

“இந்த சேமிப்பு ஆவணங்களுக்குச் சந்தையில் நல்ல விலையும், தேவையும் இருப்பதால் அதை “பணமாக்க” போவதாக பிரசார் பாரதிஅறிவித்துள்ளது. இப்படித் தரப்படும் உரிமைகளில் “தனி உரிமைகளும்” (Exclusive rights) அடக்கம். இது அரசின் நிதிப் பற்றாக்குறையை ஈடு கட்டுவதற்கான பணம் பண்ணும் பிரச்சினை அல்ல. சமூகத்தின் மீது நீண்ட கால விளைவுகளை உருவாக்குகிற பிரச்சினை.” என்று சு.வெங்கடேசன் கூறியுள்ளார்.

“கண்களில் படுவதையெல்லாம் விற்க முனையக் கூடாது. கண்ணும் கருத்துமாய் பாதுகாக்கப்பட வேண்டியது வரலாறு. ஆகவே பிரசார் பாரதியின் முடிவை தடுத்து நிறுத்துமாறு வேண்டுகிறேன்.” என்று ஒன்றிய தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாகூருக்கு எழுதிய கடிதத்தில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கோரியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்