Aran Sei

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

க்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்றும், 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்றப் பட்டிருக்கின்றன என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஆகஸ்ட் 11), சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இன்று மாநிலங்களவையில் ஜனநாயகத்தின் விழுமியங்கள் பற்றி மாண்புமிகு வெங்கையா நாயுடு கண்ணீர் மல்க பேசியிருக்கிறார். மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை என்பதை அவரும் அறிந்திருப்பார். 150க்கும் அதிகமான எதிர்க்கட்சி உறுப்பினர்களின் குரல் கேட்கப் படாமலேயே 19 மசோதாக்கள் நிறைவேற்ற பட்டிருக்கின்றன.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

“குடிமகன்களின் அடிப்படை சுதந்திரத்தையும், கண்ணியத்தையும் சீர்குலைத்துள்ள பெகசிஸ் வேவு பார்த்தல் பற்றி ஒரு நிமிடம் கூட விவாதிக்க மறுத்தனர். எதிர்கட்சிகளைக் கேட்காமலே, அறிவிக்கப்பட்ட தேதிக்கு முன்பாகவே கூட்டத்தொடர் முடிந்து விட்டதாக அறிவித்துள்ளனர். நாடாளுமன்றம் என்கிற மதிப்புமிகு அவையை கேலிப் பொருளாக ஆக்கி இருக்கிறது ஆளும்கட்சி.” என்று அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், “எங்கள் குரல்கள் ஏன் கேட்கப்படவில்லை? இது என்ன ஜனநாயகம் என்று நாங்கள் கேட்கிறோம். கட்சி சாராத நடுநிலை பொறுப்பு வகிக்கும் மாண்புமிகு வெங்கையா நாயுடு எங்கள் உரிமைகளுக்காகவும் எங்கள் ஜனநாயகத்திற்காகவும் கொஞ்சம் பேச வேண்டும் என்றும் கேட்கிறோம்.” என்று சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

அரண்செய் சிறப்பிதழ் – பெகசிஸ் எனும் உளவுக்குதிரை

‘பெகசிஸ் குறித்து விவாதிக்காமல் நாடாளுமன்றத்தை நடத்த விடமாட்டோம்’ – நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந் சாவந்த்

’நாடாளுமன்ற விதிப்படி பெகசிஸ் குறித்து விவாதிக்க அனுமதிக்காத ஒன்றிய அரசு – மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்