Aran Sei

‘காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மதுரை’ – முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க சு.வெங்கடேசன் கோரிக்கை

காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக மதுரை இருக்கிறது என்று இந்திய வானிலைத்துறையின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது என்றும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரியுள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஆகஸ்ட் 30), அவர் தமிழ்நாடு முதலமைச்சருக்கு சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதத்தில், “காலநிலை பேரழிவால் வரக்கூடிய பத்தாண்டுகள் மானுடத்திற்கான இருத்தியலை உறுதிசெய்வதற்கான தசாப்பதமாக இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் தெரிவித்துள்ளபடி, மானுட வரலாற்றின் மிக மிக முக்கியத்துவம் வாய்ந்த காலமாக இந்தக் காலம் இருக்கிறது. இக்காலத்தில் பசுமையான தமிழகத்தை உருவாக்க, சூழலியல் பார்வையில் பல முன்னெடுப்புகளை செய்யும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகள்.” என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் “இந்திய வானிலை துறையின் “Observed Rainfall Variability and Changes over Tamil Nadu State” ஆய்வு அறிக்கை வெளிவந்துள்ளது என்றும் இவ்வறிக்கையின் படி தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களிலேயே காலநிலை மாற்றங்களால் அதிகம் பாதிக்கப்பட போகிற மாவட்டமாக மதுரை இருப்பது தெரியவருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மதுரை மாவட்டத்தின் வருடாந்திர சராசரி மழை பொழிவு கடுமையாக குறைய ஆரம்பித்துள்ளது என்றும், தென்மேற்கு பருவமழை காலகட்டத்தில் மதுரை மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் பெய்கின்ற மழையின் அளவு குறைந்து வருகிறது என்றும் இவ்வறிக்கை கூறுகிறது. இதில் வருட சராசரி மழை பொழிவு குறிப்பிடத்தக்க அளவு குறைகின்ற தமிழகத்தின் ஒரே மாவட்டம் மதுரையே என்கிறது இந்த ஆய்வு.” என்று சு.வெங்கடேசன் அவ்வறிக்கையின் கூறுகளை மேற்கோள்காட்டியுள்ளார்.

“ஒவ்வொரு மாதமும் பெய்கின்ற மழையின் அளவை கணக்கில் கொண்டு, எல்லா மாதமும் சராசரி மழை பொழிவு குறைந்து வரக்கூடிய மாவட்டமாக மதுரையை சொல்கிறது புவி அறிவியல் துறையின் ஆய்வு. அதுமட்டுமல்லாமல் வறண்ட நாட்களின் (Dry days) எண்ணிக்கையும் மதுரை மாவட்டத்தில் அதிகரிக்கிறது என்றும் தெரிவிக்கிறது. இவற்றை கணக்கில் கொண்டு, நிகழவிருக்கும் ஆபத்தினை தடுக்க கீழ்கண்ட முன்னெடுப்புகளை செய்வது அவசியமாகிறது.” என்று சில பரிந்துரைகளை அவர் அளித்துள்ளார்.

“1. மதுரை மாவட்டத்தின் பசுமை போர்வையை 33% ஆக அதிகரிக்க சிறப்பு திட்டங்கள் அறிவிக்க வேண்டும். 2. ஏற்கனவே உள்ள காடுகளை வேறு எந்தப் பயன்பாட்டிற்கும் மாற்றம் செய்யக் கூடாது என்று உத்தரவிட வேண்டும், அக்காடுகளை பாதுகாக்க சிறப்புத் திட்டங்களை அறிவிக்க வேண்டும். 3. மதுரை மாவட்டத்தில் உள்ள எல்லா நீர்நிலைகளையும் போர்க்கால அடிப்படையில் மீட்டுருவாக்கம் செய்து அவற்றை முழுக் கொள்ளளவிற்கு தூர்வார வேண்டும்.” என்று சு.வெங்கடேசன் பரிந்துரைத்துள்ளார்.

“4. வைகையின் பிறப்பிடமான மேற்குமலைகளை பாதுகாக்க தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். 5. வைகை நதியை ஐந்து மாவட்ட நிர்வாக கட்டுப்பாட்டு பகுதியாக இல்லாமல் ஒற்றை நிர்வாக அலகின் கீழ் கொண்டுவர வேண்டும். 6. மதுரை மாவட்டம் தமிழகத்தின் கலாச்சார தலைநகரம், அதன் சூழலை மீட்டுருவாக்கம் செய்வதற்கும், காற்று மாசை குறைப்பதற்கும் தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.” என்று அவர் தனது கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய பதிவுகள்:

‘அறிவியல் முனைப்பிற்கும் ஆங்கிலம், இந்திக்கும் என்ன சம்பந்தம்?’- திறனறித் தேர்வில் தமிழை புறக்கணிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

மக்களவையில் நடந்ததுதான் அசலான ஜனநாயகப் படுகொலை – சு.வெங்கடேசன்

‘171 பொதுத்துறை நிறுவனங்கள் லாபம் ஈட்டுகின்றன; ஆனாலும் ஏன் தனியாருக்கு விற்கிறது ஒன்றிய அரசு?’ – சு.வெங்கடேசன் கேள்வி

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்