Aran Sei

‘சென்னை வானிலை ஆய்வு மையத்தின் ரேடார் செயல்படாத அவலம்’- சரிசெய்ய ஒன்றிய அமைச்சருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை

சென்னை வானிலை ஆய்வு மையத்தில் செயல்படாமல் இருக்கும் ரேடாரை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோரி ஒன்றிய அமைச்சருக்கு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(நவம்பர் 7), சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த பல ஆண்டுகளாக தமிழ்நாட்டிற்கு மழை அதிகமாக கிடைப்பது வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் என எல்லோரும் அறிந்ததே. குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக புயல்களின் தன்மை, மழையை அவதானிப்பது என எல்லாமும் காலநிலை மாற்றத்தால் கடினமாகி வருகிறது. எந்தளவிற்கு முடியுமோ அந்தளவிற்கு நாம் தயாராக இருப்பது பேரிடர் காலங்களில் அறிவுப்பூர்மானது” என்று தெரிவித்துள்ளார்.

‘அதிகாரப் பேச்சை தவிர்க்காவிட்டால் பாஜக தலைவர்களின் நாக்கை அறுப்போம்’ – தெலுங்கானா முதலமைச்சர்

“கனமழை குறித்த முன்னறிவிப்புகளை மேற்கொள்ள உதவும் சென்னை துறைமுகம் அருகேயுள்ள உள்ள Doppler Weather Radar 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து பலமுறை பழுதாகியுள்ள இந்த ரேடார் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையிலும் கூட வேலை செய்யாமல் உள்ளது. இதனை சரி செய்வதில் கூட அலட்சியம்; இப்போதுதான் உதிரி பாகங்களுக்கான பணி ஆணை கொடுக்கப்பட்டுள்ளதை அறிந்துகொள்ளமுடிகிறது. இதில் ஒன்றிய அமைச்சர் தலையிட்டு உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு ரேடார் செயல்படுவதை உறுதிபடுத்த கோருகிறேன்” என்று அவர் கூறியுள்ளார்.

“பருவமழை தீவிரமடைந்துள்ள இந்தச் சூழலில் உடனடியாக புதிய ரேடார் ஒன்றை சென்னையில் நிறுவ நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதைய ஒன்றிய புவி அறிவியல் அமைச்சகத்தின் செயலாளர் கடந்த ஆண்டே புதிய ரேடார் சென்னையில் பொறுத்தப்படும் எனக் கூறியிருந்தார். ஆனால், தற்போது வரை புதிய ரேடார் அமைக்கப்படவில்லை. இது 8 கோடி தமிழ்மக்களின் வாழ்வியலோடு சம்மந்தப்பட்டது என்பதை நினைவில் கொண்டு செயலாற்ற வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்