தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளைச் சென்னை லேபர் கோர்ட்டில் நியமித்து, தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தித் தீர்க்க வேண்டும் என்று சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, இன்று (பிப்பிரவரி 12) மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் வெளியிட்ட அறிக்கையில்,“பணி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைப் பிரத்யேகமாக முன்னெடுக்கவும், தீர்க்கவும் லேபர் கோர்ட்டுகள் அல்லது மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயங்கள் (Central Government Industrial Tribunal) அமைக்கப்பட்டு இருக்கின்றன.” என்று தெரிவித்துள்ளார்.
” புதிய தொழிலாளர் சட்ட தொகுப்பு ஆலோசனை ஒரு கேலிக்கூத்து ” – 10 மைய தொழிற்சங்கங்கள் கண்டனம்
“அப்படி சென்னையில் சாஸ்திரி பவனில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு இயங்கி வந்தது. எந்தவித முன்னறிவிப்பு இல்லாமல் வேலையை விட்டு நீக்குவது, பழி வாங்கும் விதமாகத் தொழிலாளர்களைத் தண்டிப்பது, தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்க வேண்டிய சலுகைகளை மறுப்பது, கூட்டு பேர உரிமையை மறுப்பது எனத் தொழிற் தகராறு சட்டத்தின் படி எழும் பல்வேறு பிரச்சினைகள்குறித்து விசாரித்துத் தீர்ப்புகள் வழங்குவதற்கு மொத்த தமிழ்நாட்டிற்கும் அது ஒரு இடம் தான். ” என்று சு.வெங்கடேசன் சுட்டிக்காட்டியுள்ளார்.
அணி திரட்டப்பட்ட, அணி திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களின் தாவாக்களை (Disputes) தீர்ப்பதற்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் இடம் அது ஒன்று மட்டுந்தான் என்று குறிப்பிட்ட சு.வெங்கடேசன், “எந்தவொரு தொழில் தாவாவும் (Industrial Dispute) மூன்று மாதத்திற்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் 2003ம் ஆண்டிலிருந்து தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தாவாக்களையும் கொண்டதாகச் சென்னை தீர்ப்பாயம் இருக்கிறது. ” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
உரிமைகளைப் பறிக்கும் தொழிலாளர் சட்ட திருத்தங்கள் : ஷியாம் சுந்தர்
“இந்த ஆக்கத்தில், வருங்கால வைப்பு நிதி (Provident Fund) குறித்த தாவாக்களையும் இந்தத் தீர்ப்பாயத்தோடு இணைத்து 2017ம் ஆண்டில் உத்தரவிட்டது மத்திய அரசு. கொடுமை என்னவென்றால் 2017 ஆம் ஆண்டிலிருந்து 2018 ஆம் ஆண்டுவரை இந்தத் தீர்ப்பாயத்திற்கு நீதிபதி நியமிக்கப்படவில்லை. 2018 ஆம் ஆண்டில் ஒரிஸாவைச் சேர்ந்த மாண்புமிகு திப்தி மல்ஹோத்ரா அவர்கள் நீதிபதியாக நியமிக்கப்படார். ஆனாலும் தாவாக்கள் முறையாகவும், முழுமையாகவும் நடத்தப்படவே இல்லை. வழக்குகள் எல்லாம் மேலும் தேங்கின. கொரோனா வந்தபிறகு எல்லாம் கிணற்றில் போட்ட கல்லாகிக் கொண்டு இருக்கின்றன.” என்று அவர் விமர்சித்துள்ளார்.
மேலும், “இந்தத் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்களை வைத்துத்தான் வழக்கு நடத்த வேண்டுமென்றில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களே தங்களுக்காக வழக்கு நடத்தலாம். அல்லது தொழிற்சங்கத் தலைவர்களே வழக்கு நடத்தலாம். அப்படியானால் தீர்ப்பாயத்தில் புழங்கும் மொழி அந்தந்த மாநிலத்தின் மொழியாக இருக்க வேண்டியது அவசியம். வேறு மாநில நீதிபதிகளை நியமித்தால் எப்படி எளிய, சாதாரண தொழிலாளர்கள் தங்களுக்காக வாதிட முடியும். அதனால் முன்னெடுக்க முடியாத, சரியான தீர்ப்பு கிடைக்காத தீர்ப்புகளும் இருக்கின்றன.” என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.
புதிய தொழிலாளர் நலச் சட்டங்கள்: சீர்த்திருத்தமா? சீர்கேடா? – விரிவான அலசல்
உடனடியாகத் தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை, சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமிக்க வேண்டியதும், தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தித் தீர்க்க வேண்டியதும் அவசியம் என்றும் “இக்கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் அவர்களை நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளேன். சென்னை தீர்ப்பாயத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாகக் கூறினார்.” என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினரான சு.வெங்கடேசன் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.