Aran Sei

தமிழகத்தில் தேர்வு மையம் – பரிசீலிப்பதாக பாபா அணுமின் நிலையம் சு.வெங்கடேசனுக்கு பதில்

ல்பாக்கம் அணுமின் நிலையத்திற்கான பணி நியமனங்களுக்கு மும்பையில் மட்டும் எழுத்துத் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருப்பது, தமிழகத்தை சேர்ந்த தேர்வர்களுக்கு பெரும் சிரமங்களை உண்டாக்குமென்பதால், சென்னையில் இன்னொரு மையத்தை அறிவிக்குமாறு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அணுசக்தி இணை அமைச்சர் ஜிதேந்திர சிங்கிற்கு எழுதியிருந்த கடிதத்திற்கு, பாபா அணு மின் நிலையம் பரிசீலிப்பதாக பதில் அளித்துள்ளது.

இன்று (மார்ச் 2), அக்கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் பகிர்ந்துள்ளார்.

பாபா அணு மின் நிலையம் சார்பில் பதில் அளித்துள்ள அதன் கட்டுப்பாட்டாளர் (Controller) கே.ஜெயக்குமார் தனது கடிதத்தில், “உதவித் தொகையுடனான பயில்நருக்கான (பிரிவு 1 & 2) தேர்வுகள், மூன்று கட்டங்களாக, துவக்க நிலைத் தேர்வு, முன்னேற்ற கட்ட தேர்வு, திறனறித் தேர்வு என நடைபெற வேண்டியுள்ளதால், விண்ணப்ப நிலையில் இருந்து தேர்வுப் பட்டியல் வெளியிடும் வரையிலான பணி மும்பையைத் தலைமையகமாகக் கொண்டே நடத்தப்படுவதாகவும், விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் ஏராளமாக வரப்பெறுவதாலும் எழுத்துத் தேர்வை ஒன்றிற்கு மேற்பட்ட மையத்தில் நடத்துவதில் சிரமம் இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.

கல்பாக்கம் அணுமின் நிலையம்: ‘கதிர்வீச்சை காரணம் காட்டி மக்களை வெளியேற்ற திட்டம்’ – வைகோ குற்றச்சாட்டு

எனினும் விண்ணப்பங்களைத் தொகுக்கும் பணி நிறைவடைந்தவுடன், விண்ணப்ப எண்ணிக்கையைக் கணக்கிற் கொண்டு, சென்னையில் ஓர் மையத்தை அமைக்க வாய்ப்புள்ளதா என்று, பரிசீலிப்பதாக கே.ஜெயக்குமார்  தெரிவித்துள்ளார்.

இந்த பதில் குறித்து கருத்து தெரிவித்துள்ள சு.வெங்கடேசன், “கொரோனா தொற்று சூழலில், தொலை தூரங்களில் மையங்கள் அமைக்கப்படுவது தேர்வர்களுக்கு பெரும் இன்னல்களை ஏற்படுத்தும். போட்டியும் சம களத்தைக் கொண்டதாக இருக்காது. ஆகவே பாபா அணு மின் நிலையம் நல்ல முடிவை எடுக்கட்டும். தமிழ்நாடு, புதுச்சேரி தேர்வர்களுக்கு நல்ல தேர்வுச் சூழல் அமையட்டும்.” என்று கூறியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்