Aran Sei

திமுக ஆட்சிக்கு வந்தால் கல்விக்கடன் தள்ளுபடி – ஸ்டாலின்

“மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நாடாளுமன்றத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும், சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கையிலும் இடம்பெற்று திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்” என மக்கள் கிராமசபைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இன்று (03-01-2021) , திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், ஈரோடு தெற்கு மாவட்டம் – ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி, வெள்ளோடு (சென்னிமலை) ஒன்றியத்துக்குட்பட்ட வெள்ளோடு ஊராட்சியில் நடைபெற்ற ‘மக்கள் கிராம சபைக் கூட்டத்தில்’ பங்கேற்று பேசியுள்ளார். அப்போது திமுக ஆட்சிக்கு வந்தால் மாணவர்களின் கல்விக்கடனைத் தள்ளுபடி செய்வதாக்க் கூறியுள்ளார்

கூட்டத்தில் பேசிய அவர், கிராமசபை கூட்டத்தை நடத்தக் கூடாது என்று ஆட்சியில் இருக்கக்கூடிய, அதிகாரத்தில் இருக்கக்கூடிய, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் உத்தரவு போட்ட்தாக குற்றம் சாட்டியுள்ளார்..

மக்களின் குறைகளைக் கேட்பதற்கான கூட்டம் தான் கிராமசபைக் கூட்டம் என்றும் அதற்காகத்தான் இந்தக் கூட்டத்தை நடத்திக் கொண்டிருப்பதாக கூறிய அவர், கிராமசபை கூட்டம் என்பது வருடத்திற்கு 4 முறை நடைபெற வேண்டும் என்றும் அவை காந்தி ஜெயந்தி, குடியரசு தினவிழா, சுதந்திர தினவிழா, மே 1 – தொழிலாளர் தினம் ஆகிய நான்கு நாட்கள் இதை நடத்த வேண்டும் என்பது மரபு என்பதை சுட்டிக்காட்டினார்.

அதிமுக ஆட்சி அதை முறையோடு நடத்தவில்லை என்றும் அதனால்தான், கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு திமுக நடத்தியதாகவும் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 12,600க்கும் மேற்பட்ட ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டத்தை நடத்தியதையும் நினைவுகூர்ந்தார்..

”நான் மட்டுமல்ல, நம் கழக பொறுப்பில் இருக்கக்கூடிய முன்னோடிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், நகரச் செயலாளர்கள் அனைவரும் அந்தந்த ஊராட்சிப் பகுதிக்கு சென்று, ஊராட்சிக் கூட்டத்தை நடத்தி முடித்தார்கள். அதில் சில மனுக்களை வாங்கிக்கொண்டு, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித்தலைவர்கள் இடத்திலும், உரிய அதிகாரிகள் இடத்திலும் எடுத்துக் கூறி ஓரளவிற்கு அதை தீர்த்து வைக்கக்கூடிய பணியில் நாம் ஈடுபட்டோம்.” என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கிராம சபை கூட்டத்தைக் கூட்டியதால்தான் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், மக்கள் திமுக மீது நம்பிக்கை வைத்து, தமிழ் நாட்டில் இருந்த 39 தொகுதிகளில் 38 தொகுதிகளில் வெற்றி பெற வைத்தார்கள் என்றும். தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திராவிட முன்னேற்றக் கழகம் அமர்ந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

”எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இல்லை. கடந்த சட்டமன்ற தேர்தலில் அம்மையார் ஜெயலலிதா அவர்கள் முதலமைச்சராக வரவேண்டும் என்று, அதுவும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று அவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். மண்புழுவாக ஊர்ந்து சென்று அந்தப் பதவியைப் பெற்றவர். அவருக்கு இன்னும் நான்கு மாதங்கள் தான் அவகாசம் உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்..

திராவிட முன்னேற்றக் கழகம் 5 முறை ஆட்சியில் இருந்துள்ளது. தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் இருந்த பொழுது பெண்களுக்கு, சகோதரிகளுக்கு, தாய்மார்களுக்கு, பல்வேறு திட்டங்களை, சாதனைகளை கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது செய்தை ஸ்டாலின் நினைவுகூர்ந்தார்.

”சொத்தில் பெண்களுக்குச் சம உரிமை. வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு. ஆரம்ப பள்ளிகளில் கட்டாயமாக பெண்களைத்தான் ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்று சட்டம். ஏழை எளிய குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு திருமணம் என்றால் அந்தத் திருமணத்திற்கு உதவி செய்யக்கூடிய ஒரு அற்புதமான திட்டம். ஏழைக் குடும்பங்களில் பெண்களுக்கு திருமணம் என்றால், அதற்கு யாரிடம் கடன்வாங்கலாம் என பெற்றோர் பரிதவிப்பார்கள். அவர்களது துயரத்தைப் போக்குவதற்கான திட்டம்தான் திருமண உதவித் திட்டம். கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவித் தொகை. விதவைகளுக்கு மறுவாழ்வு திட்டம்” போன்ற திட்டங்களை திமுக அரசு கொண்டுவந்ததை குறிப்பிட்டு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்