Aran Sei

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றுக – தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ வேண்டுகோள்

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க ஆலை நிர்வாகம் முனைப்புக் காட்டுவதால் அதற்கு எதிராக துரிதமாக சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரம் முழுக்க முழுக்க அரசியல் உள்நோக்கம் கொண்டது எனவும்,  ஸ்டெர்லைட் ஆலை எந்த காற்று மாசையும், சுற்றுசூழல் மாசையும் ஏற்படுத்தவில்லை எனவும், இது போன்ற எந்த விசயத்துக்கும் அறிவியல் பூர்வ ஆதாரமும் இல்லை எனவும் ஸ்டெர்லைட் நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் உண்மைக்குப் புறம்பாக தனது வாதத்தை முன்வைத்துள்ளது.

பெட்ரோல் விலையை குறைக்க முடியாததற்கு காங்கிரஸ் காரணமா? – நிர்மலா சீதாராமன் கூறுவதில் உண்மை உள்ளதா?

ஸ்டெர்லைட் ஆலையை எந்த வழியிலாவது திறந்துவிட வேண்டும் என ஆலை நிர்வாகம் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உள்ளூர் அளவில் பணத்தை வாரியிறைத்து போலியான ஆதரவு கோரிக்கையையும், அணி திரட்டலையும் மேற்கொண்டுவரும் அதேநேரத்தில் உச்ச நீதிமன்றம் வாயிலாகவும் ஆலையை திறக்க பெரும் முயற்சிகளை நிர்வாகம் மேற்கொண்டுவருகின்றது.

ஆகவே, தமிழக அரசு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் அமைவதை தடுக்கும் வகையிலும், திறப்பதற்கான எந்த ஒரு வாய்ப்பும் கிடைத்திராத வகையிலும், இத்தகைய நாசகார ஆலை தமிழகத்தின் எந்தப் பகுதியிலும் அமைந்து விடாத வகையிலும், சட்டமன்றத்தில் கொள்கை தீர்மானம் நிறைவேற்றி  சிறப்புச் சட்டம் இயற்ற வேண்டும். அவ்வாறான துரித நடவடிக்கைகள் மூலம் மட்டுமே தூத்துக்குடி மக்களை மிரட்டிக் கொண்டிருக்கும் ஸ்டெர்லைட் ஆலையிடமிருந்து மக்களுக்கு நிரந்தர நிம்மதி கிடைக்கும். ஆகவே அதனை நோக்கிய நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இந்த சூழலில், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் வகையில் சட்டம் இயற்ற  வலியுறுத்தி, தூத்துக்குடி பாத்திமா நகர் பகுதி மக்கள் நடத்திவரும் போராட்டத்திற்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி முழு ஆதரவளிப்பதோடு, போராடும் மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி என்றும் துணை நிற்கும் எனவும் தெரிவித்துக் கொள்வதாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்