Aran Sei

செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் மீது அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படும் ஒன்றிய அரசு – மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு

ந்திய அரசை விமர்சிக்கும் செயல்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், விமர்சகர்களை அமைதிப்படுத்துவதற்கு வரி ஏய்ப்பு, நிதி முறைகேடுகள் போன்ற அரசியல் உள்நோக்கத்துடன் கூடிய குற்றச்சாட்டுகள் பயன்படுத்தப்படுகின்றன என மனித உரிமை கண்காணிப்பகம் இன்று (செப். 17) அறிக்கை வெளியிட்டுள்ளது.

மனித உரிமைகள் செயல்பாட்டாளர் ஹர்ஷ் மந்தருக்கு சொந்தமான இடங்களில் நேற்று (செப். 16) அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ள நிலையில், இன்று இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

நியூயார்க்கில் இருந்து வெளியாகியிருக்கும் அந்த அறிக்கையில், “ஸ்ரீநகர், டெல்லி, மும்பை பகுதிகளில் உள்ள ஊடகவியலாளர்கள் வீடுகள், அலுவலகங்கள்; நடிகர்களின் வீடுகள், செயல்பாட்டாளர்களின் வீடு மற்றும் அலுவலகம் ஆகியவற்றில் அரசின் நிதித்துறை அதிகாரிகள் இந்த மாதத்தில் சோதனை நடத்தியது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”கருத்து சுதந்திரம், அமைதியான வழியில் போராட்டம் ஆகியவற்றை ஒடுக்குவதற்காக ரெய்டுகள் நடத்துவதை ஒரு வழிமுறையாக 2014 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பாஜக அரசு மேற்கொண்டு வருகிறது. அரசுக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள் உள்ளிட்டவர்கள் மீது தேச துரோகம், தீவிரவாதம் போன்ற பிரிவுகளின் கீழ் அரசியல் உள்நோக்குடன் கூடிய கிரிமினல் வழக்குகளை அதிகாரிகள் பதிந்துள்ளனர். நிதிமுறைகேடுகள் மற்றும் தவறான வழியில் நிதி பெறுதல் போன்ற புகார்களும் பயன்படுத்தப்பட்டுள்ள்து” என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

”அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை அச்சுறுத்த, துன்புறுத்த சோதனைகள் நடத்தப்படுகிறது. அனைத்து விமர்சனங்களை ஒடுக்குவதற்கான பரந்த பார்வையை கட்டுப்படுத்துகிறது” என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் தெற்காசிய இயக்குநர் மீனாக்‌ஷி கங்குலி குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தக் குற்றச்சாட்டுகள் இந்தியாவின் முக்கிய ஜனநாயக நிறுவனங்களைப் பலவீனப்படுத்துவதோடு, அடிப்படை சுதந்திரத்தை பறிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

”மத சிறுபான்மையினர் மற்றும் வகுப்புவாத கலவரங்களில் பாதிப்புக்குள்ளானவர்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் பாஜகவின் கொள்கையை விமர்சித்ததற்காக  மந்தர் அதிகாரிகளால் குறிவைக்கப்பட்டார். பிப்ரவரின் 2020ல் டெல்லியில் நடைபெற்ற கலவரத்திற்கு காரணமான பாஜகவினர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாறாக, வெறுப்பு பேச்சு மற்றும் கலவரத்தைத் தூண்டுதல் போன்ற போலியான குற்றச்சாட்டுகளை மந்தர் மீது டெல்லி காவல்துறை பதிவு செய்தது” என மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

காஷ்மீரை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கு எதிராக சோதனை நடத்துவது, அவர்கள்மீது தேச விரோதம் மற்றும் தீவிரவாத குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவது, 2019 ஆம் ஆண்டு மாநில அந்துஸ்து விலக்கிக் கொள்ளப்பட்டதில் இருந்து ஊடக சுதந்திரத்திற்கு எதிராக ஒடுக்குமுறை ஆகியவற்றையும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Source : The Hindu

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்