Aran Sei

நிதிபங்களிப்பை காரணம் காட்டி பறிக்கப்படும் மாநில அரசின் இடஒதுக்கீடு – கேள்விக்குறியாகிறதா அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்காலம்?

கில இந்திய நுழைவுத் தேர்வான GAT-B தேர்வு மூலம் 2021 ஆம் ஆண்டில் பயோடெக்னாலஜி சார்ந்த பட்டமேற்படிப்பிற்கு சேர்க்கை நடைபெறும் கல்லூரிகள் பட்டியலில் இருந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

இதனால் இந்த பல்கலைக்கழங்கங்களில் பயோடெக்னாலஜி பட்டமேற்படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் ஆராய்ச்சி நிதி மற்றும் உதவித் தொகை கேள்விக்குறியாகி உள்ளன.

ஒன்றிய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் டிபார்ட்மெண்ட் ஆஃப் பயோடெக்னாலஜி (DBT) துறை சார்பில் ஆண்டுதோறும் GAT-B (Graduate Aptitude Test in Biotechnology) என்ற அகில இந்திய நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வின் மூலம் சேரும் மாணவர்களுக்கு ஆராய்ச்சி நிதியாக தலா ஒரு லட்ச ரூபாய் வரையிலும், மாத உதவித்தொகையாக பன்னிரெண்டாயிரம் ரூபாயும் ஒன்றிய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

டெல்லி கலவரம்: மூன்று இளம் போராளிகளின் விடுதலையும் அரசு மற்றும் நீதிமன்றங்களின் எதிர்வினைகளும் – அ.மார்க்ஸ்

கடந்த ஆண்டு இந்த தேர்வின் மூலம் தமிழ்நாடு முழுவதும் எட்டு கல்லூரிகளில் சேர்க்கை நடைபெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டில் சேர்க்கைக்கு தகுதி பெற்ற கல்லூரிகளின் பட்டியல் DBT அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் தமிழ்நாட்டின் மிக முக்கிய கல்வி நிறுவனங்களான சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகமும் விடுபட்டுள்ளன.

இட ஒதுக்கீடு காரணமா?

கடந்த ஆண்டு சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பயோடெக்னாலஜி பட்டமேற்படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டது. ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பு இருப்பதால், மாநில அரசின் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு கொள்கைக்கு மாறாக ஒன்றிய அரசின் 49.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதற்கான ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தீர்வு காண முடியாமல் சேர்க்கை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

காஷ்மீர் பிரச்சினையும் அதன் வரலாற்றுப் பின்னணியும் – சூர்யா சேவியர்

மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டதற்கு எதிராக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கொரோனா அவசர வழக்காக விசாரித்த உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு 49.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டு கொள்கையை கடைபிடித்துக் கொள்ள உத்தரவிட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டைப் போல அல்லாமல் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசின் 69 விழுக்காட்டின் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாணவர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில், ஒட்டு மொத்த திட்டத்தில் இருந்தும் அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயர் நீக்கப்பட்டிருப்பது மாணவர்களுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.

மேகேதாட்டுவில் அணை என்பது தமிழகத்தை சுடுகாடாக்கும் செயல் – சூர்யா சேவியர்

10% EWS (பொருளாதாரத்தில் நலவுற்ற முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடு)

GAT-B திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு சேர்க்கை நடைபெற்ற தமிழ்நாட்டின் இதர பல்கலைக்கழகங்களான மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகங்களில் ஒன்றிய அரசின் 49.5 விழுக்காடு இட ஒதுக்கீடு கொள்கையே பின்பற்றப்பட்டது. அதற்கும் மேலாக, தமிழ்நாடு அரசின்  கொள்கை முடிவிற்கு எதிராக பொருளாதாரத்தில் நலவுற்ற முன்னேறிய வகுப்பினருக்கான 10 விழுக்காடு இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை தவிர மற்ற மூன்று பல்கலைக்கழகங்களும் இந்த ஆண்டிற்கான சேர்க்கை பட்டியலில் இடம்பெற்றுள்ளனன. அவற்றில், இந்த ஆண்டிலாவது தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு கொள்கை பின்பற்றப்படுமா அல்லது ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையே கடைபிடிக்கப்படுமா என்ற கேள்வி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

பல்கலைக்கழகங்களை போன்றே கடந்த ஆண்டு சேர்க்கை நடைபெற்ற தனியார் கல்லூரிகளான சென்னை வேல்டெக் ரங்கராஜன் கல்லூரி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்லூரி, திருச்சி நேஷனல் கல்லூரி ஆகிய கல்லூரிகளிலும் ஒன்றிய அரசின் இட ஒதுக்கீடு கொள்கையே  பின்பற்றப்பட்டுள்ளன.

ஜகமே தந்திரம்; திரைப்பிரதியும் அதன் பின்னணி அரசியலும் – முகமது இல்யாஸ்

மாநில உரிமை

மாநில அரசின் பல்கலைக்கழகங்களில் மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கையை பின்பற்ற வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழுவும் (UGC – University Grants Commission), அகில இந்திய தொழிநுட்பக் கல்விக் குழுமமும் (AICTE – All India Council for Technical Education) வரையறுத்துள்ளன. ஆனால், இதனை மீறும் விதமாக ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பை காரணம் காட்டி மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கையில் தலையிடுவது மாநில உரிமைகளை பறிக்கும் செயல் என கல்வியாளர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் கல்விக் கனவு நிறைவேறுமா?

இந்தியாவில் GER (Gross Enrolment Ratio) எனப்படும் உயர்கல்வியில் மாணவர் சேர்க்கை என்பது தமிழ்நாட்டில் 51.4 விழுக்காடு ஆகும். இந்தியாவின் சராசரி GER 27 விழுக்காடாகும். இதில் இந்தியாவின் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு திகழ்வதோடு நில்லாமல் சீனாவின் 50.5%ஐ விடவும் முன்னணியில் உள்ளது. இந்திய அளவில் ஒப்பிடும்போது சராசரியாக இரு மடங்கு தமிழக மாணவர்கள் உயர்கல்வியில் சேர்கின்றனர். எனவே, தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டிய நிலையில், ஒன்றிய அரசின் இடஒதுக்கீடு என்னும் பெயரில் நமது மாணவர்களின் இடங்கள் மற்ற மாநிலங்களுக்குத் திறந்துவிடப்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். மேலும், தமிழ்நாட்டு நிதியமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டது போல, ஒன்றிய அரசின் நிதிப்பங்களிப்பு என்பதும் மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட நிதியே ஆகும்.

‘ஆர்எஸ்எஸின் அகண்ட பாரதம் எனும் அபத்தக் கனவு’ – சூர்யா சேவியர்

எனவே, GAT-B பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழகமும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் மீண்டும் அதே திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். மேலும்,  இத்திட்டத்தில் பங்கேற்றுள்ள அனைத்து தமிழக கல்லூரிகளிலும் ஒன்றிய அரசின் 49.5%+10% EWS கைவிடப்பட்டு, தமிழ்நாடு அரசின் 69% இடஒதுக்கீடு முறை மட்டுமே கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இழந்த கல்வி உரிமையை தமிழக அரசு மீட்டுத்தருமா என்னும் எதிர்பார்ப்பில் மாணவர்கள் உள்ளனர்.

பல்கலைக்கழகங்களின் பெயர்கள் நீக்கப்பட்டது தொடர்பாக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தை தொடர்பு கொள்ள முடியவில்லை மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கேட்ட போது இது தொடர்பாக தங்களுக்கு எந்த விவரமும் தெரியாது. தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என பல்கலைக்கழகத்தின் ஏ.சி.டெக் கல்லூரியின் டீன் மீனாட்சி சுந்தரம் அரண்செய்யிடம் தெரிவித்தார்.

மேட்டூர் அணை உருவான வரலாறும் மக்களின் தியாகமும் – சூர்யா சேவியர்

இதனை தொடர்ந்து பெயர்கள் நீக்கப்பட்டதற்கான முறையான காரணத்தை தெரிந்து கொள்ள அரண்செய் சார்பாக டிபார்ட்மெண்ட் ஆஃப் பயோடெக்னாலஜிக்கு மின்னஞ்சல் அனுப்பியுள்ளோம். அதற்கு இன்னும் பதில் வரவில்லை. எதிர்காலத்தில் அவர்கள் பதிலளிக்கும் பட்சத்தில் அதனை தெரியபடுத்துவோம் என்பதை கூறிக்கொள்கிறோம்.

  • நந்தகுமார், அரண்செய்
aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்