Aran Sei

நிறுவனங்களை விழுங்கும் நவீன கிழக்கிந்திய கம்பெனி – பறிபோகும் இந்தியாவின் செல்வம்

ந்தியாவில் புதிதாக தொடங்கப்படும் சிறு நிறுவனங்களை (ஸ்டார்ட்-அப்) ஆக்கிரமிக்கும் நவீன கிழக்கிந்திய கம்பெனியாக வெளிநாட்டு நிதிகள் இருக்கின்றன என, நௌக்ரி (naukri.com) மற்றும் சொமாட்டோ (Zomato) நிறுவனங்களின் முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவின் கட்டுப்பாடுகளையும் வரிகளையும் தவிர்க்க வெற்றிகரமான இந்திய ஸ்டார்ட்-அப்களை அயல்நாட்டு நிதிகளை வைத்து வாங்கி வெளிநாட்டு உடைமையாக்கும் காலனித்துவமயமாக்கல் நடந்து கொண்டிருக்கிறது என, இணையதள தொழில்முனைவில் ஈடுபட்டிருக்கும் சஞ்சீவ் பிக்சந்தானி தெரிவித்திருக்கிறார்.

உடனடி லாபம் பார்க்க, ஒரு சொத்தை வாங்கி அதை விற்கும் ‘ஃப்லிப்பிங்’ எனும் தொழில் நடவடிக்கைக்கு எதிரான முதல் எதிர்ப்பாக, இந்த அறிக்கை அமைய வாய்ப்பிருக்கிறது என்கிறது பிடிஐ.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் ஸ்டார்ட்-அப்களின் வளர்ச்சிக்கு தேவையான நிதி உதவி செய்வதாக வாக்குறுதியளித்து இந்திய ஸ்டார்ட்-அப்களின் தலைமையகங்களை வெளிநாடுகளுக்கு மாற்றச் சொல்லி கட்டாயப்படுத்தியதால், 17 ட்ரில்லியன் ரூபாய் சந்தை முதலீடு வெளிநாட்டிற்கு மாற்றப்பட்டிருக்கிறது என சஞ்சீவ் சொல்கிறார்.

இது குறித்து டிவிட்டரில் அவர் செய்திருக்கும் பதிவில், “ கிழக்கிந்திய கம்பெனி போன்ற சூழல் ஒன்று இங்கே உண்டாகியிருக்கிறது. இந்தியச் சந்தை, இந்திய வாடிக்கையாளர்கள், இந்திய வடிவமைப்பாளர்கள், இந்திய தொழிலாளர்கள். ஆனால் 100% வெளிநாட்டு முதலீட்டாளர்கள், உரிமையாளர்கள். அறிவுசார் சொத்து மற்றும் தரவுகள் வெளிநாடுகளுக்கு மாற்றப்பட்டிருக்கின்றன.இடமாற்ற செலவு பிரச்சினைகளில் குழப்பம்” என்று கூறியிருக்கிறார்.

பத்மஸ்ரீ விருது பெற்றவரான சஞ்சீவிடம் இது குறித்து பிடிஐ பேசிய போது, “இந்திய நிறுவனங்களை வாங்குவதற்கு என்றே தொடங்கபட்ட ஒரு வெளிநாட்டு நிறுவனத்திடம் ஸ்டார்ட்-அப்கள் கைமாறும் போது, அவை முழுமையாக வெளிநாட்டு சொத்துக்கள் ஆகின்றன” என்று தெரிவித்துள்ளார்.

குறுகிய காலத்தை மட்டுமே கணக்கில் எடுத்துப் பார்த்தால், இது ஒரு பிரச்சினையாக இருக்காதென்றும், நெடுங்கால வளர்ச்சியை கருதினால், இது இந்திய பொருளாதாரத்திற்கு எதிர்மறை தாக்கத்தையே உண்டாக்கும் என்றும் சஞ்சீவ் கூறியுள்ளார்.

இப்படி, இந்திய ஸ்டார்ட்-அப்களை வெளிநாட்டு உடைமையாக்குவது, இந்தியாவின் செல்வத்தை பெரிய அளவில் இந்தியாவிற்கு வெளியே கொண்டு போவதற்கான யுக்தி எனும் சஞ்சீவ், இந்திய சட்டங்கள் மாற்றப்பட வேண்டும் என முதலீட்டாளர்கள் நினைத்தால், அது குறித்து அரசோடு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்