Aran Sei

‘வாழ்தலுக்கான உரிமையை மறுக்கும் உபா சட்டம்’ – சட்டப் பிரிவை எதிர்த்து ஸ்டான் சுவாமி நீதிமன்றத்தில் மனு

பீமா கோரகான் வன்முறை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் பழங்குடியின உரிமைகள் செயல்பாட்டாளர் ஸ்டான் சுவாமி, சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (ஊபா) கீழ் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மையை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஊபா சட்டத்தின் பிரிவு 43 (D) (5) எதிர்த்து அவர் மனுதாக்கல் செய்துள்ளார். சட்டத்தின் இந்த பிரிவு அவர் பிணை பெற தடையாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

சட்டபிரிவின் 4 ஆம் அத்தியாம் (பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான தண்டனை) மற்றும் 6 ஆம் அத்தியாயம் (பயங்கரவாதத்திலிருந்து வருமானம் அல்லது பயங்கரவாதத்திற்கு பயன்படுத்த விரும்பும் சொத்தைப் பறிமுதல் செய்தல்) கீழ் தண்டிக்கப்படக்கூடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருக்கும் எவரும் பிணையிலோ அல்லது சொந்த பத்திரத்தின் பெயரிலோ விடுவிக்கப்பட்ட கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட எவருக்கும் ஜாமீன் வழங்க இந்த விதிகள் தடையை உருவாக்குகிறது என ஸ்டான் சுவாமி, அவரது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 14 (சட்டத்தின் கீழ் அனைவரும் சமம்) மற்றும் 21 (வாழ்தலுக்கான உரிமை) கீழ் வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளை அப்பட்டமாகவும் தன்னிச்சையாகவும் மீறுவதற்காக அதிகார அமைப்புகளால் இது போன்ற சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊபா சட்டங்களின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு, அக்டோபர் 9, 2020 ஆம் தேதி ராஞ்சியில் கைது செய்யப்பட்டு மகாராஷ்டிராவில் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஸ்டான் சுவாமி, மும்பை நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்