மாவோயிஸ்டுகளுடன் தொடர்பிருப்பதாகவும் பீமா கோரேகான் கலவர வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ள 83 வயதான ஸ்டேன் சாமிக்கு அவர் கோரிய உறிஞ்சுக் குழலும், உறிஞ்சுக் குவளையும் வழங்கப்பட்டுள்ளன. இந்தத் தகவலை அவருடைய வழக்கறிஞர் ஷெரீப் ஷேக் சிறப்பு நீதிமன்றத்தில் தெரிவித்ததாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.
தன்னை தலோஜா சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்றக் கூடாது. தன்னிடமிருந்து பறிமுதல் செய்த உடமைகளையும் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்க்கையும் திரும்ப அளிக்க தேசியப் புலனாய்வு முகமைக்கு (என்ஐஏ) உத்தரவிட வேண்டும் எனக் கோரி ஸ்டேன் சாமி சிறப்பு நீதிமன்றத்தில் மூன்று மனுக்களைத் தாக்கல் செய்திருப்பதாக தி இந்து கூறுகின்றது.
அந்த மனுவில், தன்னை தலோஜா சிறையிலிருந்து வேறு சிறைக்கு மாற்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்டேன் சாமி குறிப்பிட்டுள்ளார்.
நடுக்கவாத (Parkinson Disease) நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஸ்டேன் சாமி, கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை என்று கூறி, தன்னிடமிருந்து கைப்பற்றிய உறிஞ்சுக் குழல் மற்றும் உறிஞ்சுக் குவளையை வழங்க என்ஐஏவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி கடந்த மாதம் சிறப்பு நீதிமன்றத்தை அணுகினார்.
கை நடுக்கத்தால் தண்ணீர் கூட குடிக்க முடியவில்லை – ஸ்ட்ரா வழங்கக் கோரி ஸ்டேன் சாமி மனு
இதற்கு என்ஐஏ தரப்பில், ஸ்டேன் சாமியிடமிருந்து உறிஞ்சுக் குழலும், உறிஞ்சுக் குவளையும் கைப்பற்றப்படவில்லை என்று பதில் அளிக்கப்பட்டது. ஆகவே, அதைத் திரும்பத் தர வேண்டிய தேயை எழவில்லை என்றும் கூறப்பட்டது.
83 வயது ஸ்டேன் சாமிக்கு வழங்க உறிஞ்சு குழல் இல்லை – நீதிமன்றத்தில் என்ஐஏ தகவல்
கடந்த நவம்பர் 26ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இதுகுறித்து தலோஜா சிறைக் கண்காணிப்பாளர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தற்போது ஸ்டேன் சாமிக்குச் சிறை நிர்வாகம் உறிஞ்சுக் குழலையும், உறிஞ்சுக் குவளையையும் வழங்கியுள்ளது.
மருத்துவக் காரணங்களால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று ஸ்டேன் சாமி மனுத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவிற்குப் பதில் அளிக்கச் சிறை அதிகாரிகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்த வழக்கை நீதிபதி டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
மாவோயிஸ்ட் கட்சியின் உறுப்பினர் மற்றும் 2018 ஆம் ஆண்டு புனே அருகே உள்ள பீமா கோரேகான் என்ற இடத்தில் நடைபெற்ற வன்முறையைத் தூண்டினார் ஆகிய குற்றச்சாட்டின் பேரில், ஜார்க்கண்ட் மாநிலம், ராஞ்சியில் ஸ்டேன் சாமியை என்ஐஏ கைது செய்தது. உடனடியாக மும்பை அழைத்துவரப்பட்ட ஸ்டேன் சாமி, நீதிமன்ற உத்தரவின் பேரில், அக்டோர் 9 ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.