இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் முன்மொழியப்பட்ட தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து, திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும் என்று இரண்டு நாட்களுக்கு முன் நான் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்த வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இலங்கைக்கு ஆதரவாக வெளிநடப்பு செய்து நழுவியுள்ளது இந்திய அரசு. ஈழத் தமிழர்களுக்கு விரோதமான பாஜக அரசின் இந்த நிலைப்பாட்டுக்கு என்னுடைய கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் – வாக்கெடுப்பை புறக்கணித்தது இந்தியா
“இலங்கையின் போர்க்குற்றங்கள் குறித்து, ஐ.நா. மனித உரிமை மன்றத்தில், ஆறு நாடுகளின் சார்பில் கொண்டுவரப்படும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில், இந்தியா, இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும்” என அந்நாட்டின் வெளியுறவுச் செயலாளர் ஜெயநாத் கொலம்பகே பேட்டி அளித்திருந்தார் என்றும் அதனைச் சுட்டிக் காட்டி, பிரதமர் நரேந்திர மோடி அதுகுறித்து கருத்து சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருந்தேன் என்றும் அவர் நினைவூட்டியுள்ளார்.
“மத்திய அரசு முறையான விளக்கம் எதையும் சொல்லவில்லை. ஐ.நா. மனித உரிமை மன்றத்திலாவது ஈழத் தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை மோடி அரசு எடுக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால், உலகத் தமிழர்களை ஏமாற்றிவிட்டது மோடி அரசு.” என்று ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“இன்றைய தினம் நடந்த வாக்கெடுப்பில் இந்திய அரசின் பிரதிநிதி பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்துள்ளார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத மாபெரும் பச்சைத் துரோகம்.
கனடா தமிழர்கள் – இலங்கை மீது இனப்படுகொலை, போர்க்குற்ற விசாரணை கோரி பேரணி
இந்தியாவின் தொப்புள்கொடி உறவுகளாம் ஈழத் தமிழர்களை வஞ்சிப்பதை – உலகெங்கும் வாழும் 9 கோடி தமிழர்கள் எந்நாளும் மறக்கவோ மன்னிக்கவோ மாட்டார்கள். இது தமிழ் இனத்திற்கு முற்றிலும் எதிரானது, துரோகமானது. இலங்கையின் நிர்பந்தத்திற்கு இந்தியா அடிபணிவது ஏன் என்ற ஆதங்கமும் ஆத்திரமும் ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் எரிமலையாய்க் குமுறுகிறது.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால் வெளிநடப்பு செய்து நடித்துள்ளார்கள். இல்லாவிட்டால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள் என்பது விளங்கிவிட்டது. இது இலங்கைக்கு மிகவும் சாதகமான நிலைப்பாடுதான் என்பதை இலங்கை அரசே ஒப்புக்கொண்டுவிட்டது. வெளிநடப்பு செய்ததற்காக இந்தியாவுக்கு இலங்கை அரசு நன்றி சொல்லி இருக்கிறது. ஈழத் தமிழர்க்கு மோடி இழைத்திருக்கும் பச்சைத் துரோகத்துக்குக் கிடைத்த பாராட்டு நன்றிப் பட்டயம்தான் இது.” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானம்: இலங்கை சீதை கோயிலில் இருந்து வரும் கல்
இது தொடர்பாக, மதிமுக பொது செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009-ம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது இலங்கை அரசு.” என்று அக்கொடுந்துயரை நினைவுப்படுத்தியுள்ளார்.
“தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்தார்கள். இல்லையேல், இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப் போட்டு இருப்பார்கள். இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.” என்று வைகோ கூறியுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.