Aran Sei

’மீனவர்களை கொல்லும் ராஜபக்சே சகோதரர்கள்; தட்டிக்கேட்காமல் வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு’ – ஸ்டாலின் கண்டனம்

மிழக மீனவர்கள் 4 பேர் மீது, இலங்கைக் கடற்படையினர் தாக்குதல் நடத்தி, விசைப் படகோடு மூழ்கடித்துக் கொன்றிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, இன்று (ஜனவரி 21) திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கச்சத்தீவுப் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த, கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி, விசைப்படகோடு மூழ்கடித்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“இலங்கை கடற்படை இனி கைது செய்யப்போவதில்லை, மூழ்கடித்து கொலை செய்யப்போகிறது” – வைகோ காட்டம்

“கடலில் மூழ்கடிக்கப்பட்ட மெசியா, நாகராஜ், சாம், செந்தில்குமார் ஆகிய நான்கு மீனவர்களின் உடல்களும் இப்போது மீட்கப்பட்டுள்ளன என்ற பேரிடிச் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. தங்கள் வாழ்வாதாரத்திற்காகவும், மீன்பிடி உரிமையின் அடிப்படையிலும் மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்கள் மீது, கொலைவெறித் தாக்குதல் நடத்துவதும், இழப்பீடுகள் எதுவும் கொடுக்கமாட்டோம் என்று இலங்கை கடற்படை அறிவிப்பதும் அடாவடியானது, அராஜகமானது.” என்று ஸ்டாலின் குற்றச்சாடியுள்ளார்.

’அத்துமீறும் சிங்களக் கடற்படை; வேடிக்கை பார்க்கும் இந்திய கடலோரக் காவல்படை’ – ராமதாஸ் கவலை

இலங்கை அரசின் இந்த அட்டூழியங்களை மத்திய பாஜக அரசு தட்டிக் கேட்காமல் வேடிக்கை பார்ப்பது, மிகுந்த கவலையளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “சமீபத்தில் இலங்கை சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், மீனவர்கள் பிரச்சினை குறித்துப் பேசியதாகத் தெரிவித்திருந்தார். ஆனால், அவர் இந்தியா திரும்பியவுடன் இலங்கைக் கடற்படை நான்கு மீனவர்களைக் கொன்றிருப்பது, இலங்கையில் உள்ள ராஜபக்சே சகோதரர்கள் இந்திய நாட்டையோ, மத்திய அரசையோ துளி கூட மதிப்பதில்லை என்பதைத்தான் காட்டுகிறது.” என்று ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

`பாஜகவுக்குக் கார்ப்பரேட்கள்தான் முக்கியம்; நாங்கள் அல்ல’ – மீனவத் தலைவர் கொந்தளிப்பு

தமிழக மீனவர்கள் நான்கு பேரை மூழ்கடித்துக் கொன்றிருப்பதற்கு, பிரதமர் மோடி உடனடியாக இலங்கைக்குக் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்றும், இலங்கைக் கடற்படையால் கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு தலா 5 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கிட இலங்கை அரசை நிர்ப்பந்திக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்த மீனவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, ரூ.10 லட்சம் இழப்பீடும் வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும், இந்தத் தாக்குதலில் பாதிப்படைந்த விசைப்படகிற்கு, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்