Aran Sei

பெரியாரின் பெயரை நீக்கிய நெடுஞ்சாலைத்துறை: மதவெறி கூட்டத்தின் கால்பணிகிறதா அதிமுக – ஸ்டாலின் கேள்வி

பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலையின்  பெயர் மாற்றப்பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று (ஏப்ரல் 13), தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஸ்டாலின், “தந்தை பெரியார் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் பூவிருந்தவல்லி நெடுஞ்சாலைக்கு பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என 1979-ல் பெயர் சூட்டினார் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள். 40 ஆண்டுகளுக்கு மேலாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றங்கள் பல ஏற்பட்டபோதும் அந்தப் பெயரே நீடித்து வந்தது.” என்று நினைவூட்டியுள்ளார்.

பெரியார் இருந்திருந்தால் அனிதாவைப் பாராட்டியிருப்பார் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி

“இந்நிலையில், தற்போது நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள பலகையில் க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரன்க் ரோட் (Grand Western Trunk Road) என எழுதப்பட்டிருப்பதும், நெடுஞ்சாலைத் துறை இணையதளத்தில் இவ்வாறு குறிப்பிட்டிருப்பதும் கடும் கண்டனத்திற்குரியதாகும்.” என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் அ.தி.மு.க.வின் காபந்து சர்க்காருக்கு இன்னும் சில நாட்களே மிச்சமிருக்கும் நிலையில், இந்தத் திரிபு வேலைக்கான உத்தரவு எங்கிருந்து வந்தது? அ.தி.மு.க.வின் நிறுவனரான எம்.ஜி.ஆர். சூட்டிய பெயரையே மாற்றும் அளவுக்கு காபந்து அரசு, தனது டெல்லி எஜமானர்களின் கால் பிடிக்கும் அரசாக இருக்கிறதா? அல்லது தந்தை பெரியார் பெயரைச் சொன்னாலே நடுநடுங்கும் மதவெறி சக்திகளின் அதிகார ஆட்டமா?” என்று அவர் கேள்விகளை அடுக்கியுள்ளார்.

‘பெரியாருக்கு பதில் மோடியை தலைவராக ஏற்றுக்கொண்டதா ஈபிஎஸ் – ஓபிஎஸ் கட்சி’ – ப.சிதம்பரம் கேள்வி

எதுவாக இருந்தாலும், மீண்டும் பெரியார் ஈ.வெ.ரா நெடுஞ்சாலை என உடனடியாக மாற்றம் செய்திட வலியுறுத்துகிறேன் என்றும் தாமதம் செய்தால், மே 2-க்குப் பிறகு அதிகாரபூர்வ ஆணை வெளியாகும் நிலை ஏற்படும் என்பதை நினைவில் கொள்க என்றும் தனது அறிக்கையில் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

பெரியாரிய அமைப்புகள் க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரன்க் ரோட் என்கிற பெயரை கருப்பு மை பூசி அழித்துள்ளனர். பெயர் மாற்றம் குறித்து விளக்கமளித்த நெடுஞ்சாலைத்துறை “ ஆங்கிலேயர் காலத்திலிருந்து தற்போது வரை அரசின் ஆவணங்களில் க்ராண்ட் வெஸ்டர்ன் ட்ரன்க் ரோட் என்ற பெயரே இருக்கிறது. அரசின் ஆவணங்களின்படிதான் நாங்கள் செயல்பட்டுள்ளோம் ”என்று தெரிவித்துள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்