Aran Sei

விநாயகர் சிலைகளைச் செய்யும் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்ற சுமார் 3 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படுமென  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பாக பாஜக  சட்டமன்ற உறுப்பினர்
நயினார் நாகேந்திரன் எழுப்பிய வினாவிற்கு பதிலளித்த மு.க.ஸ்டாலின் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுகுறித்து சட்டமன்றத்தில் பேசிய மு.க.ஸ்டாலின், “கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த, அதிகளவில் மக்கள் கூடுவதைத் தவிர்க்கத் தேவையான கட்டுப்பாடுகளை 30-9-2021 வரை  தொடர்ந்து நடைமுறைப்படுத்த, ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகம் மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றமும் அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறது”  என்று கூறியுள்ளார்.

மேலும்,பொது மக்களுடைய பாதுகாப்பு மற்றும் நலனைக் கருத்திலேகொண்டு, 15-9-2021 வரை அனைத்து சமய விழாக்களைக் கொண்டாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது விநாயகர் சதுர்த்தி விழாவிற்கும் பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனினும், பொது இடங்களில் விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட சமய விழாக் கொண்டாட்டங்களுக்கு மட்டுமே கட்டுப்பாடுகளே தவிர, தனி நபர்களைப் பொறுத்தவரையில், கொரோனா பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி, தங்கள் இல்லங்களில் கொண்டாடலாம் என்று அரசு சார்பில் சொல்லப்பட்டிருக்கிறது என்றும் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், “நமது மாநிலத்தில் மண்பாண்டத் தொழிலில் ஈடுபட்டு வரக்கூடிய சுமார் 12 ஆயிரம் மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு, மழைக் காலங்களில் தொழில் செய்ய இயலாத நிலையிலே, அவர்களுக்கு நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகிறது.  இவர்களுள், சுமார் 3 ஆயிரம் தொழிலாளர்கள் திருவிழாக் காலங்களில் விநாயகர் சிலைகளைச் செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்” என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

எனவே, இதனையெல்லாம் கருத்தில் கொண்டு,3 ஆயிரம் மட்பாண்டத் தொழிலாளர்களுக்கு மழைக்காலப் பாதிப்பு நிவாரணத் தொகையோடு , மேலும்  கூடுதலாக 5 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகையாக அளிக்கப்பட்டு, மொத்தம் 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்